மூதூர் கடற்படை தளத்தை கைப்பற்ற விடுதலைப் புலிகள் செய்த முயற்சியை ஒரு ஒற்றை மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர் தடுத்து நிறுத்தியதை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். மறுநாள் காலை கடற்படையை சேர்ந்த 700 பேர் கடல் மார்க்கமாக வந்து சேரும்வரை, இந்த ஒற்றை மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர், கடற்படை தளம் புலிகளின் கைகளில் விழாமல் தடுத்துக் கொண்டிருந்தது.
மூதூர் கடற்படை தளத்துக்கு கடல்வழியாக வந்திறங்கிய 700 கடற்படையினரும், ஒரே ஷாட்டில் வரவில்லை. ஐந்து பிரிவுகளாக, வெவ்வேறு நேரங்களில் வந்து இறங்கினார்கள்.
அதில் முதலாவது செட் கடற்படையினர் வந்து மூதூரில் தரையிறங்கியபோது, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியான சம்பூரில் இருந்து தாக்குதல் நடத்துவதா என்பதில் அங்கிருந்த விடுதலைப் புலிகளிடையே குழப்பம் நிலவியது. காரணம், வன்னி தலைமையில் இருந்து தெளிவான உத்தரவுகள் ஏதும் வரவில்லை.
இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும். மூதூர் மீது முதலில் தாக்குதல் தொடுத்தபோது, லோக்கலில் இருந்த புலிகளின் தளபதிகள் தாங்களே முடிவு எடுத்து தாக்க தொடங்கினார்கள். மூதூர் ராணுவ முகாமையும், மூதூர் டவுனையும் கைப்பற்றியது அப்படித்தான். அதன்பின், கடற்படை தளத்தை கைப்பற்றும் நோக்குடன் தாக்க தொடங்கினார்கள்.
அதுவரை புலிகள் தரப்பில் பெரிதாக சேதம் ஏதுமில்லை. அதனால், தாக்குதல் அதுபாட்டுக்கு நடந்து கொண்டிருந்தது.
ஆனால், மூதூர் கடற்படை தளத்தில் இருந்து ஒரு ஒற்றை மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர் சம்பூரை நோக்கி வெடிக்க தொடங்கியபோது, சம்பூரில் புலிகளுக்கு கணிசமான அளவில் அழிவுகள் ஏற்பட தொடங்கின. அதுவும், கடற்படையின் மல்ட்டி பேரல் ராக்கெட் லோஞ்சர், இரவு முழுவதும் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ராக்கெட்டுகளை ஏவிக்கொண்டு இருந்தது.
இந்த நிலையில் சம்பூரில் இருந்த புலிகளின் பொறுப்பாளர், வன்னியில் இருந்த தமது தொடர்பாளரை தொடர்புகொண்டு, அடுத்து என்ன செய்வது என்று கேட்டார். சம்பூரில் கணிசமான அளவில் அழிவுகள் ஏற்பட்டதால், மேலிட அனுமதியுடன் மீதியை தொடர்வது என சம்பூரில் முடிவு செய்யப்பட்டதே இதற்கு காரணம்.
ஆனால், வன்னியில் இருந்த தொடர்பாளரால் சரியான பதில் கொடுக்க முடியவில்லை. அதன்பின் விடுதலைப் புலிகளின் தளபதி சொர்ணத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், “மேலிடத்தில் கேட்டு சொல்கிறேன். அதுவரை தற்போது பிடித்த இடங்களை விடாமல் வைத்திருங்கள்” என்றார்.
கடற்படையினர், மூதூர் கடற்படை தளத்தில் வந்து இறங்க தொடங்கியபோது, “அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதா” என, மீண்டும் சொர்ணத்திடம் கேட்கப்பட்டது. அதற்கும், “மேலிடத்தில் கேட்டு சொல்கிறேன்” என்ற பதில்தான் கிடைத்தது.
ஏன் இந்த குழப்பம்? அப்போது வன்னியில் இருந்த தளபதிகள் இருவரிடம் சமீபத்தில் இதுபற்றி கேட்டபோது, “கிழக்கில் என்ன செய்வது என்பதில் வன்னி தலைமைக்கு குழப்பம் இருந்தது உண்மை” என்றார்.
என்ன காரணம்?
அந்த முன்னாள் தளபதி தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், மாவிலாறு அணைக்கட்டை மூடும் உத்தரவு, வன்னியில் இருந்து போகவில்லை. அணைக்கட்டு மூடப்பட்டபின் ஏற்பட்ட மோதல்கள்தான், சில ஆண்டுகள் இடம்பெற்ற யுத்த நிறுத்தத்தின் பின் தொடங்கிய முதலாவது யுத்தமாக மாறியது. அதாவது, அந்த யுத்தம் முன்கூட்டியே திட்டமிடப்படாமல், இயல்பாகவே தொடங்கிவிட்டது.
அது அப்படியே தொடர்ந்து, மூதூர் ராணுவ முகாமையும், டவுனையும் கைப்பற்றும் அளவுக்கு போய் விட்டது. இவை அனைத்துமே கடகடவென ஓரிரு நாட்களுக்குள் நடந்துவிட்டன. அதன்பின் என்ன செய்வது என்று திட்டம் ஏதுமில்லை.
மூதூர் கடற்படை தளத்தில் கடற்படை 700 பேரை தரையிறக்க தொடங்கிய தகவல் கிடைத்ததும், வன்னியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது
லிகளின் தலைவர் பிரபாகரன், தமிழ்செல்வன், சூசை, பொட்டம்மான் உட்பட வேறு சில தளபதிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், சொர்ணம் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அவருடைய ஆலோசனை கேட்கப்பட்டது
ளபதி சொர்ணத்தின் கருத்து, “மூதூரை முழுமையாக பிடித்துவிட்டு, அதன்பின் என்ன செய்வது? அப்படியே தொடர்ந்து மற்றைய இடங்களை பிடிக்க முடியாதபடி உள்ளது அங்குள்ள புவியியல் தன்மை. மூதூரை முழுமையாக பிடித்தால், மூதூருக்கு உள்ளேதான் நிற்க வேண்டும். ராணுவம் மேலதிக படைப்பிரிவுகளுடன் வந்தால், பிடித்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள, சம்பூரில் இருந்துதான் போராளிகளை கொண்டுவர வேண்டும்.
அப்படி செய்தால், சம்பூரில் பலமிழக்க வேண்டியிருக்கும். ராணுவம் தாக்கினால், சம்பூரை இழக்க நேரிடும். மூதூரை கையில் வைத்திருப்பதைவிட, சம்பூரை கையில் வைத்திருப்பது நல்லது” என்ற ரீதியில் இருந்ததாம்.
மற்றொரு ஆப்ஷன், வன்னியில் இருந்து மேலதிக போராளிகளை கிழக்கே திரிகோணமலை மாவட்டத்துக்கு அனுப்புவது. அது சாத்தியம் இல்லை என தமிழ் செல்வன் சொல்ல, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு, “இப்போது அங்கே (கிழக்கில்) எந்தெந்த இடங்களில் (புலிகள்) நிற்கிறார்களோ, அங்கேயே நிற்கட்டும். நிலைமையை பார்த்து, பின்னர் முடிவு செய்யலாம்”
இதையடுத்தே, கிழக்கில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான உத்தரவு, வன்னியில் இருந்து போகவில்லை.
மூதூர் கடற்படை தளத்தில் வந்து இறங்கிய 700 கடற்படையினரும், எவ்வித எதிர்ப்பும் இன்றி வந்து இறங்க முடிந்தது. அங்கிருந்த புலிகள் மீது தாக்குதல் நடத்தினர் அவர்கள். மூதூரில் மொத்தம் 4 நாட்கள் சண்டை நடந்தது. அதன் முடிவில் அங்கிருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்க நேர்ந்தது.
மூதூரில் இருந்து பின்வாங்க தொடங்கிய புலிகள் பேசாமல் சம்பூருக்கு திரும்பியிருந்தால், மூதூரில் நடந்ததுடன் யுத்தம் ஒருவேளை முடிந்திருக்கலாம். அப்போது யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தது. யுத்த நிறுத்த கண்காணிப்பு (வெளிநாட்டு) குழுவும் கிழக்கு மாகாணத்தில் இருந்தது. இதனால், ஒரு பேச்சுவார்த்தை மூலம், மீண்டும் அவரவர் இடங்களில் இருந்திருக்கலாம்.
ஆனால், அப்படி நடக்கவில்லை.
மூதூரில் இருந்து பின்வாங்க தொடங்கிய புலிகள், அதற்கு அருகில் உள்ள மற்றைய இடங்களில் தாக்குதல்களை நடத்த தொடங்கினார்கள். இதற்கு யார் உத்தரவு கொடுத்தார்கள் என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகிறது. ஆனால், இந்த நடவடிக்கைதான், கிழக்கு மாகாணத்தில் சண்டை பெரிதாக வழிவகுத்தது.
இலங்கை ராணுவத்தின் இலகு இன்ஃபென்டரி 7-வது படைப்பிரிவின் தலைமை கேம்ப், தோப்பூரில் இருந்தது. மூதூரில் இருந்து பின்வாங்க தொடங்கிய புலிகள் அந்த கேம்ப் மீது தாக்குதல் நடத்தினர். மூதூரில் இருந்து பின்வாங்கியவர்கள் எதற்காக தோப்பூர் வரை சென்றார்கள் என்பதற்கு சரியான விளக்கம் இல்லை.
தோப்பூர் மீது தாக்குதல் நடத்திய அதே நேரத்தில், அதற்கு அருகில் உள்ள ராணுவ முகாம்களை நோக்கியும் புலிகள் சிறுசிறு குழுக்களாக செல்ல தொடங்கினார்கள்.
தோப்பூருக்கு அருகே வேறு 4 இடங்களில், ராணுவத்தின் மினி முகாம்கள் இருந்தன. அந்த இடங்கள்: செல்வநகர், பன்சால்வத்த, 64-வது மைல் போஸ்ட், கட்டபறிச்சான். இவை மினி ராணுவ முகாம்கள் என்று குறிப்பிட்டோம். இவற்றில் அதிக ஆட்பலம் கிடையாது. உதாரணமாக, புலிகள் தாக்க சென்றபோது கட்டபறிச்சான் முகாமில் வெறும் 45 ராணுவத்தினரே இருந்தனர். மற்றைய முகாம்களிலும் அப்படித்தான்.
செல்வநகர் ராணுவ முகாமில் இருந்த ராணுவத்தினர், மற்றொரு காட்சியை கண்டார்கள்.
புலிகள் தமது 152mm ஆட்டிலரி பீரங்கிகளை வீதியால் கொண்டு செல்வதை அவர்களால் பார்க்க முடிந்தது. அந்த ஆட்டிலரி பீரங்கிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க கடற்புலிகளின் படகுகள், கடலேரியில் பீரங்கிகள் செல்லும் திசையிலும், வேகத்திலும் நகர்ந்து கொண்டிருந்தன. (தொடரும்)
No comments:
Post a Comment