Friday, March 28, 2014

ஈழப் போரின் இறுதி நாட்கள்: விடுதலைப் புலிகளின் கடைசி நேர கொழும்பு திட்டம்! 14


கொழும்புவில் எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி நடத்தியவர் போன் செய்து, விடுதலைப்புலி இணைப்பாளர்களில் ஒருவரை, நீர்கொழும்புவில் உள்ள இடம் ஒன்றை குறிப்பிட்டு, “இன்று மாலை 5 மணிக்கு அங்கு இருப்பேன். வாருங்கள், பேசலாம்” என்றார் என்பதுடன் கடந்த பாகத்தை முடித்திருந்தோம்.

மாலை 5 மணிக்கு முன்னரே அந்த இடம் முழுவதிலும் இலங்கை உளவுத்துறை SIS-ஐ சேர்ந்தவர்கள் சிவில் உடைகளில் தயாராக இருந்தார்கள்.

உளவுத்துறையினரின் பாதுகாப்பில் இருந்த எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சிக்காரர் அங்கு கொண்டுவரப்பட்டார். போனில் குறிப்பிட்ட இடமான உணவு விடுதி ஒன்றில் அவர் அமர்ந்து கொண்டார். அந்த உணவு விடுதியின் மற்றைய டேபிள்களில் கஸ்டமர்கள் சிலர் அமர்ந்து உணவு உண்டுகொண்டு இருந்தனர். அவர்களும் உளவுத்துறையின் ஆட்கள்.

5 மணிக்கு சாதாரண நபர்போல உணவு விடுதிக்குள் நுழைந்தார், விடுதலைப்புலி இணைப்பாளர். எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சிக்காரரை பார்த்ததும், அவரது டேபிளுக்கு வந்து எதிரே அமர்ந்து கொண்டார். எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சிக்காரர், தமது பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்தார்.

அதுதான் சிக்னல்.

மறுகணமே, புதிதாக வந்தவர்மீது உளவுத்துறையினர் பாய்ந்து, ஆளை கீழே விழுத்தி அசைய விடாமல் செய்தனர். அவர் சயனைட் குப்பியை எடுத்து கடித்துவிட கூடாது என்பதற்காக செய்யப்பட்ட நடவடிக்கை அது. புதியவரின் பாக்கெட்டில் சயனைட் குப்பி கிடைத்தது. அது அவரிடம் இருந்து அகற்றப்பட்டதும், கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது, தாம் யார் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இவர் எப்படி சிக்கிக் கொண்டார் என்று பாருங்கள்:

கொழும்புவில் கரும்புலிகளின் (தற்கொலைப்படை) இணைப்பாளராக இருந்த அவர், இயக்க வேலைகளுக்காக பயன்படுத்த வேண்டிய செல்போனில் இருந்து எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சியை தொடர்பு கொண்டதில் சிக்கிக் கொண்டார்.

இவரது போன் நம்பரை எப்படி இலங்கை உளவுத்துறை தெரிந்து கொண்டது என்பதை பாருங்கள்:

வெளிநாடு ஒன்றில் இருந்து இயங்கிய மற்றொரு விடுதலைப்புலி இணைப்பாளர், தமது போனை அந்த நாட்டு உளவுத்துறை ஒட்டுக்கேட்கிறது என்ற விஷயம்கூட தெரியாமல், தமது சொந்த போனில் இருந்து இவருக்கு போன் பண்ணி, இவரது போன் இலக்கத்தை அந்த நாட்டு உளவுத்துறை அறியும்படி செய்தார்.

அந்த நாட்டில் 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களால் அந்த நாட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கருதிய அந்த நாட்டு உளவுத்துறை, ‘சீக்கிரம் புலிகளின் அத்தியாயத்தை முடிப்பதற்காக’ தம்மிடம் இருந்த விடுதலைப் புலிகளின் கொழும்பு இணைப்பாளரின் போன் இலக்கத்தை இலங்கை உளவுத்துறை SIS-க்கு கொடுத்தது.

இவர் இலங்கை உளவுத்துறையிடம் சிக்கிக் கொண்டது, எப்போது தெரியுமா? 2009-ம் ஆண்டு, மே மாதம் 7-ம் தேதி! அதிலிருந்து 10 நாட்களில், இலங்கை, வன்னியில், விடுதலைப் புலிகளின் இறுதி யுத்தம் முடிந்தது.  
இந்த இறுதி நாட்களில், வன்னியில் இலங்கை ராணுவம் புலிகளை முழுமையாக சூழ்ந்துவிட்ட நிலையில், கொழும்புவில் பெரிய குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டால், அதன் அதிர்வில் ராணுவ நடவடிக்கை தாமதப்படுத்தப்படும் என்பதால், வன்னியில் இருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனும், உளவுத்துறை தலைவர் பொட்டு அம்மானும், கொழும்புவில் தாக்குதல் ஒன்றை – இலங்கை முழுவதையும் அதிர வைக்கும் தாக்குதல் ஒன்றை – நடத்த உத்தரவிட்டிருந்தனர்.

2009 மே 14-ம் தேதி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே (தாக்குதலில் சிக்காமல்) ஜோர்தானில் போய் இறங்கியபோது...
2009 மே 14-ம் தேதி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே (தாக்குதலில் சிக்காமல்) ஜோர்தானில் போய் இறங்கியபோது…

‘இலங்கை முழுவதையும் அதிர வைக்கும் தாக்குதல்’ என்பது என்ன தெரியுமா?

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவின் கதையை முடிப்பது!

2009-ம் ஆண்டு மே, 14-ம் தேதி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே G-11 மாநாட்டில் கலந்துகொள்ள ஜோர்தான் சென்று இறங்குவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

அவர் ஜோர்தான் செல்வதற்காக கொழும்பு விமான நிலையம் செல்லும்போதே, பெரிய தற்கொலை தாக்குதல் நடத்தி அவரை கொல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

அதாவது, முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன், கொழும்புவில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய தாக்குதல் இது.

அதில் தொடர்புடைய புலிகளின் கொழும்பு இணைப்பாளர்களில் ஒருவர்தான், தாக்குதலுக்கு 7 நாட்களுக்கு முன், ஒரு செல்போன் இலக்கத்தால், இலங்கை உளவுத்துறையிடம் நீர்கொழும்புவில் சிக்கிக் கொண்டார்.

நீர்கொழும்புவில் சிக்கிக் கொண்டவரிடம் விசாரணை நடைபெற்றது.

அப்போது அவர் மிக முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்தார். “விடுதலைப் புலிகளின் உளவுத்துறை, கொழும்புவில் முக்கியமான ஒருவரை அறிமுகம் செய்து வைத்தது. அவரது உதவியுடன்தான் இலங்கை ஜனாதிபதி மீதான தாக்குதல் நடைபெற உள்ளது” என்றார் அவர்.

அந்த முக்கியமான நபர் யார் தெரியுமா? இலங்கை ராணுவத்தை சேர்ந்த ஒரு சிங்கள அதிகாரி.

இந்த விபரத்தை கேட்டு ஆடிப்போன இலங்கை உளவுத்துறை, அந்த ராணுவ அதிகாரி யார் என்பதை, நீர்கொழும்புவில் சிக்கிக் கொண்டவரிடம் விசாரித்தது.

“அவரை தெரியும். ஆனால் அவரது பெயரோ, ராணுவத்தில் அவரது பதவி நிலையோ தெரியாது. நாங்கள் அவரை ‘ஆர்மி அங்கிள்’ என அழைப்போம்” என்ற பதில் வந்தது.

(அடுத்தடுத்த நாளில் இந்த ‘ஆர்மி அங்கிள்’ சிக்கினார். அவரது பெயர், லெப்டினென்ட் கர்னல் ரஞ்சித் பெரேரா. விடுதலைப் புலிகளுடன் இவர் சரளமாக தமிழ் பேசிய காரணம், இவர் பிறந்து வளர்ந்தது, இலங்கையில் பண்டாரவளை என்ற இடத்தில். இந்திய தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி அது)

“ஆர்மி அங்கிள் யார்?” என இலங்கை உளவுத்துறை தலையை பிய்த்துக் கொண்டிருந்தபோது, நீர்கொழும்புவில் சிக்கிக் கொண்டவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

உடனே உளவுப் பிரிவை சேர்ந்தவர்கள், அவரின் கையில் போனை கொடுத்து, பேசச் சொன்னார்கள். இவரும் சந்தேகம் ஏற்படாதவண்ணம் பேசினார்.

மறுமுனையில் பேசியவர், சாட்சாத் ‘ஆர்மி அங்கிள்’!

“பெரியப்பா ஜோர்தான் போகும் வழியில், நீங்கள் சொல்லியதை செய்யலாம்” என்றார், ஆர்மி அங்கிள்! ‘பெரியப்பா’ என்பது, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவை குறிக்கிறது என்பதை உடனே புரிந்து கொண்டது, இலங்கை உளவுத்துறை.

இந்த போன் அழைப்பை உடனடியாக ட்ரேஸ் செய்தபோது, ‘ஆர்மி அங்கிள்’, கொழும்புவில் ரத்மலானவுக்கும், ஹொமகமவுக்கும் இடையிலுள்ள ஏரியா ஒன்றில் இருந்து பேசுவது தெரியவந்தது. (தொடரும்….)

No comments:

Post a Comment