Friday, March 28, 2014

ஈழப் போரின் இறுதி நாட்கள்: “சும்மா பயரிங் பயிற்சி எடுக்கிறோம்” என்றார்கள் புலிகள்! 5



(மாவிலாறு அணைக்கட்டை விடுதலைப் புலிகள் அடைத்தபின் தொடங்கிய யுத்தத்தில், திருகோணமலை துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளை நோக்கி ஆகஸ்ட் 3-ம் தேதி அதிகாலை புலிகள் ஆட்டிலரி ஷெல் தாக்குதல்களை தொடங்கினார்கள் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம்.)

புலிகள் சம்பூரில் இருந்த தமது தளத்தில் இருந்து ஆட்டிலரி ஷெல்களை கட்டைபறிச்சான், செல்வநகர் ஆகிய இடங்களை நோக்கி அதிகாலை நேரத்தில் ஏவினார்கள். பகல் புலர்ந்ததும், புலிகளின் சிறிய படைப் பிரிவுகள் மூதூர் பகுதியை நோக்கி நகர தொடங்கின. மூதூர் நகரை தாக்கி, கைப்பற்றும் உத்தரவு அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனிடம் இருந்தோ, அல்லது வன்னியில் இருந்தோ கொடுக்கப்பட்டதல்ல. கிழக்கு மாகாணத்தில் அங்குள்ள புலிகளின் லோக்கல் பொறுப்பாளர்களால் கொடுக்கப்பட்ட உத்தரவு இது.

மூதூர் நகரைக் கைப்பற்ற வேண்டும் என்றால், மூதூரில் உள்ள இலங்கை கடற்படைக்கு சொந்தமான தளத்தை முழுமையாக கைப்பற்ற வேண்டும்.

மூதூரில் இலங்கை கடற்படையின் naval detachment இருந்தது. மூதூர் டவுனுக்கு அருகேயிருந்த இந்த கடற்படை தளத்தின் முன் பகுதியில் சுமார் 1 கி.மீ. நீளத்துக்கு கடற்கரை இருந்தது. கடற்படை தளத்தின் முழுமையான பரப்பளவு, சுமார் ஒரு சதுர கி.மீ.

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த தெற்கு கடலோரப் பகுதிகள் கிட்டத்தட்ட முழுமையாகவே விடுதலைப் புலிகளின் வசம் இருந்தன. மூதூர் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகள் மட்டுமே ராணுவத்திடம் இருந்தது. சுருக்கமாக சொன்னால், அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கையே ஓங்கியிருந்தது.

யுத்த நிறுத்த காலத்திலேயே இந்தப் பகுதியில் விடுதலைப் புலிகள் கடற்படையை சீண்டுவது வழக்கம். திருகோணமலை கடல் பகுதியில் துறைமுகத்தை நோக்கி செல்லும் கடற்படை கப்பல்களை நோக்கி, சம்பூரில் இருந்து விடுதலைப் புலிகள் ஓரிரு ராக்கெட்டுகளை அவ்வப்போது ஏவுவது வழக்கம்.

கடற்படை உடனடியாக யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவிடம் புகார் செய்வார்கள். அவர்கள் புலிகளிடம் விளக்கம் கேட்பார்கள். இதற்கு புலிகள் கொடுக்கும் விளக்கம், “நாங்கள் சம்பூரில் எமது பகுதியில் ஃபயரிங் பயிற்சி எடுக்கிறோம். பயிற்சி கொடுக்கும்போது சில புதிய பயிற்சியாளர்கள் தவறுதலாக கடலை நோக்கி சுட்டுவிடுகிறார்கள்” என்பதுதான்.

இதற்கு யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவால் எதுவும் செய்ய முடியாது.

புகார் கொடுத்தும் பலனில்லை என்ற நிலையில் கடற்படை என்ன செய்தது என்றால், திரிகோணமலை கடலில் தமது கப்பல்களை கொண்டுவரும்போது, அவ்வப்போது சம்பூரை நோக்கி சுட்டதுதான். புலிகள் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவிடம் புகார் செய்வார்கள். கடற்படை, “கடலில் ஃபயரிங் பயிற்சி எடுக்கிறோம். சில புதிய பயிற்சியாளர்கள் தவறுதலாக சம்பூரை நோக்கி சுட்டுவிடுகிறார்கள்” என்பார்கள்.

அப்படியான இடத்தில்தான் புலிகளின் சிறிய அணிகள் மூதூரை நோக்கி நகரத் தொடங்கின. மூதூரை முழுமையாக கைப்பற்றினால், திருகோணமலை துறைமுகத்துக்கு வரும் கப்பல்களை தடுக்கலாம். துறைமுகத்துக்கு உள்ளே நிற்கும் கப்பல்களை வெளியே வராமல் முடக்கி விடலாம்.

அந்த துறைமுகத்தில் இருந்தே யாழ்ப்பாணத்துக்கு ராணுவ சப்ளைகள் சென்று கொண்டிருந்தன. சப்ளை நின்றுபோனால், ராணுவம் யாழ்ப்பாணத்துக்குள் முடிக்கப்பட்டுவிடும்.

இதுதான், மூதூரின் முக்கியத்துவம்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூதூரில் இருந்த இலங்கை கடற்படையின் naval detachment-ல் அப்போது பணியில் இருந்த கடற்படையினரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 120 பேர். மூதூர் கடற்கரையின் பாதுகாப்பு கடற்படையிடம் இருக்க, மூதூர் டவுனின் பாதுகாப்பு, ராணுவத்தின் (தரைப்படை) வசம் இருந்தது. அவர்களிடமும் பெரிதாக ஆட்பலம் இருக்கவில்லை.

காரணம், அப்போது யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தது.

விடுதலைப் புலிகள் திடீரென மூதூர் மீது தாக்குதல் நடத்தியபோது, ராணுவத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சுமார் 40 நிமிடங்களில், ராணுவத்தின் முதலாவது பாதுகாப்பு வளையம் (first line of defence) உடைந்தது. காலை 10 மணியளவில், கடற்படையின் முதலாவது பாதுகாப்பு வளையத்தை உடைத்தனர் புலிகள்.

இரு தரப்பும் தொடர்ந்து யுத்தம் செய்த நிலையில், மதியம் 2 மணிக்கு, கடற்படையின் 2-வது பாதுகாப்பு வளையத்தின் பாதியளவை புலிகள் உடைத்தனர்.

அதற்கு சிறிது நேரத்துக்கு முன், மூதூரில் இருந்த ராணுவ முகாம் தாக்கப்பட்டு, முழுமையாக புலிகளின் கைகளில் வீழ்ந்தது. அதாவது, மதியம் 2 மணிக்கு மூதூர் டவுன், முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடற்படை தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.

இந்த கடற்படை தளத்தை ஒட்டியபடிதான் இருந்தது, மூதூர் போலீஸ் ஸ்டேஷன். அது அப்போதும் போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருந்தது. போலீஸ் ஸ்டேஷனை நோக்கி தாக்குதல் ஏதும் நடக்கவில்லை.

எந்த நிமிடமும் கடற்படை தளம் விடுதலைப் புலிகளின் கரங்களில் விழுந்துவிடும் என்றிருந்த நிலையில், கடற்படை அதிகாரியாக இருந்த கேப்டன் உதய பண்டார, கடற்படை தளத்தின் காம்பவுண்டுக்குள் இருந்த ஒரு பொருளை கவனித்தார்.

உடனே அவருக்கு உள்ளே ஒரு அலாரம் ஒலித்தது.

கேப்டன் உதய பண்டார கடற்படை காம்பவுண்டுக்குள் பார்த்த பொருள், ஒரு பல்குழல் ராக்கெட் லோஞ்சர் (multi barrel rocket launcher).

இந்த ராக்கெட் லோஞ்சர்தான், மூதூர் போரின் விதியை நிர்ணயிக்க போகிறது என்பது. உதய பண்டாரவுக்கோ, விடுதலை புலிகளுக்கோ அப்போது தெரிந்திருக்க சான்ஸ் இல்லை. (தொடரும்)

No comments:

Post a Comment