கொழும்புவில் எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி நடத்தியவர் மூலம் விடுதலைப்புலி இணைப்பாளர்களில் ஒருவரை பிடித்துவிட்ட இலங்கை உளவுத்துறை, அவருக்கு வந்த ‘ஆர்மி அங்கிளின்’ போன் அழைப்பை ட்ரேஸ் செய்தபோது, ‘ஆர்மி அங்கிள்’, கொழும்புவில் ரத்மலானவுக்கும், ஹொமகமவுக்கும் இடையிலுள்ள ஏரியா ஒன்றில் இருந்து பேசுவது தெரியவந்தது. -கடந்த அத்தியாயத்திலிருந்து…
விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுடன் தொடர்பில் இருந்த இந்த சிங்கள ராணுவ அதிகாரியை (‘ஆர்மி அங்கிள்’) தேடும் முயற்சியில் ஒரு டீம் ஈடுபட, மற்றொரு உளவுப்பிரிவு டீம், நீர்கொழும்பில் அகப்பட்ட விடுதலைப்புலி இணைப்பாளரை (இவர் தற்போது, இலங்கை சிறையில் உள்ளார்) தொடர்ந்து விசாரிக்க தொடங்கியது.
வன்னியில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முடிவுக்கு வர தொடங்கிய அந்த நேரத்தில், நீர்கொழும்பில் சிக்கிய இந்த இணைப்பாளரிடம் இருந்து பல முக்கியமாக தகவல்கள் இலங்கை உளவுப் பிரிவுக்கு கிடைத்தது. அதுவரை அவர்களுக்கு புரியாமல் இருந்த பல புதிர்களுக்கு இவர் மூலம் விடை கிடைத்தது.
அதில் முக்கியமானவற்றில் ஒன்று, கொழும்புவில் நடந்த தாக்குதல்களுக்கு உத்தரவுகள் எங்கிருந்து வருகின்றன என்ற விபரம்.
புலிகளின் உளவுப்பிரிவை சேர்ந்த இவர், “கொழும்பில் செய்யப்பட வேண்டிய வேலைகள் குறித்து எனக்கு போனில் உத்தரவுகள் வரும். அதை உடனடியாக நிறைவேற்றுவேன்” என்றார்.
“உத்தரவுகள் வன்னியில் எந்த இடத்தில் இருந்து, யாரிடம் இருந்து வருகின்றன?”
“இப்போதெல்லாம் வன்னியில் இருந்து உத்தரவுகள் வருவதில்லை. எனக்கு உத்தரவுகள் லண்டனில் இருந்து வருகின்றன” என்றார் இவர்.
இலங்கை உளவுத்துறைக்கு கடைசி நேரத்தில் கிடைத்த முக்கிய தகவல் இது. அதுவரை வன்னியில் இருந்து வரும் சில போன் அழைப்புகளை ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த இலங்கை உளவுத்துறைக்கு, உத்தரவுகள் லண்டனில் இருந்து வருகின்றன என்ற விபரம் தெரிந்தது அப்போதுதான்.
அது மட்டுமல்ல. விடுதலைப் புலிகளின் உளவுத்துறை வைத்திருந்த ஒரு தகவல் தொடர்பு வடிவம் (communication pattern), இலங்கை உளவுத்துறைக்கு தெரியவந்ததும் அப்போதுதான்.
அது என்ன?
லண்டனில் இருந்து தொடர்பு கொள்ளும் நபர், கொழும்புவில் எந்த இடத்தில், எப்போது ‘ஆர்மி அங்கிளை’ சந்திக்க வேண்டும் என்று இவருக்கு சொல்வார். அதேநேரத்தில், இவரது போன் இலக்கமும் ‘ஆர்மி அங்கிளிடம்’ கொடுக்கப்பட்டு இருந்தது.
லண்டன் நபரை ஆர்மி அங்கிளால் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், நீர்கொழும்பில் இருந்த இவரை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவிப்பார். இவர் லண்டனுக்கு தகவலை பாஸ் செய்வார். ஆனால், இவர் எக்காரணம் கொண்டும் ஆர்மி அங்கிளை தொடர்பு கொள்ள மாட்டார்.
இது ஒருவிதமான, ‘ஒரு முனை உடைக்கப்பட்ட’ முக்கோண தகவல் தொடர்பு பரிமாற்றம்.
எப்படியென்றால், A வெளிநாட்டில் (இந்த கேஸில் லண்டனில்) இருப்பார். அவர் கொழும்புவில் இருக்கும் B, மற்றும் C என இருவரிடம் தொடர்பில் இருப்பார். B, மற்றும் C-க்கு, A-யுடன் தொடர்பு இருக்கும். B, C-யை தொடர்பு கொள்வார். ஆனால், C எப்போதும் B-யை தொடர்பு கொள்ள மாட்டார். A-க்கு B,C இருவருடைய நிஜ பெயர் தெரிந்திருக்கும். C-க்கும் B-க்கும் இவருடைய பெயர் அவருக்கு தெரியாது. அவருடைய பெயர் இவருக்கு தெரியாது. சங்கேதப் பெயர்கள்தான் (ஆர்மி அங்கிள் போல)
இதேபோல வேறு முக்கோண தொடர்புகளிலும் இவர்கள் இருப்பார்கள். வேறு புதிய நபர்களும் இருப்பார்கள்.
இந்த தொடர்பு பட்டர்னை புரிந்துகொண்ட இலங்கை உளவுத்துறைக்கு, மற்றொரு விஷயமும் புரிந்தது. அது என்னவென்றால், இவர்களிடம் அகப்பட்ட நீர்கொழும்பு நபருக்கு, கொழும்புவில் இருந்து இயங்கும் மற்றொரு விடுதலைப் புலி இணைப்பாளருடன், மற்றொரு முக்கோண தொடர்பு இருக்க வேண்டும்.
உடனே இந்த கோணத்தில் நீர்கொழும்பு நபர் விசாரிக்கப்பட்டார். அப்போது, அவர் மற்றொரு முக்கோண தொடர்பிலும் உள்ள விஷயம் தெரியவந்தது.
அந்த முக்கோண தொடர்பின் பிரதான முனை மற்றொரு வெளிநாட்டில் (லண்டன் அல்ல) இருந்தது. அதன் மற்ற இரு முனைகளில் இந்த நீர்கொழும்பு நபர் ஒருவர். அப்படியானால், மூன்றாவது நபர்?
உளவுத்துறை விசாரணையில், இந்த மூன்றாவது நபர் யார் என்பதை சொன்னார், நீர்கொழும்பு நபர்.
இந்த மூன்றாவது நபருக்கு கொடுக்கப்பட்டிருந்த சங்கேதப் பெயர், அய்யா.
இந்த முக்கோணத்தில், நீர்கொழும்பு நபர் B, அய்யா C. அதாவது, நீர்கொழும்பு நபரால் அய்யாவை தொடர்பு கொள்ள முடியும்!
உடனே செயல்பட்ட இலங்கை உளவுத்துறை, நீர்கொழும்பு நபரிடம் போனை கொடுத்து அய்யாவை தொடர்பு கொள்ள சொன்னார்கள். கொழும்புவில் பம்பலபிட்டிய என்ற இடத்தில் உள்ள குறிப்பிட்ட கார் பார்க்கிங் ஒன்றுக்கு அய்யாவை வருமாறு அழைத்தார் நீர்கொழும்பு நபர். இருவரும் மறுநாள் காலை அந்த கார் பார்க்கிங்கில் 9 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடாகியது.
மறுநாள், அந்த கார் பார்க்கிங் முழுவதிலும் இலங்கை உளவுத்துறையினர் மறைந்திருக்க..,
நீர்கொழும்பு நபர் காத்திருக்க…,
சரியாக 9 மணிக்கு, பளபளப்பான சொகுசு கார் ஒன்று வந்து நிற்க…,
அதிலிருந்து விலையுயர்ந்த ‘பிரான்ட் நேம்’ கோட்-சூட் அணிந்து, காரிலிருந்து இறங்கினார்… அய்யா! (தொடரும்…)
No comments:
Post a Comment