மூதூர் கடற்படை தளத்தில் இருந்த மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சரை (MBRL) கடற்படை பயன்படுத்தலாம் என்று தெரியவந்தவுடன், உடனே கடற்படை தளபதி வசந்த கரணகொட தொடர்பு கொண்டது, கடற்படை உளவுப்பிரிவின் திரிகோணமலை தளபதியை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது.
அந்தக் காரணம் என்னவென்றால், இது நடந்த காலத்தில், இலங்கை ராணுவத்துக்கும், கடற்படைக்கும் லேசான உரசல் இருந்தது (இதை அவர்கள் தற்போது ஒப்புக்கொள்கிறார்கள்). கடற்படை தளங்களை விடுதலைப்புலிகள் தாக்கும்போது, ராணுவம் பெரிதாக உதவிக்கு வருவதில்லை. அதே நேரத்தில், அந்த தாக்குதல்களின் போது கடற்படை விடுதலைப் புலிகளை திருப்பி தாக்கினால், அதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவிக்கும்.
“கடற்படையின் ஏரியா கடலில்தான். தரையில் தாக்குதல் நடத்துவது ராணுவத்தின் பொறுப்பு. அப்படியிருக்கையில் கடற்படை தரையில் உள்ள விடுதலைப் புலிகளின் இலக்குகளை தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என ராணுவம் போர்க்கொடி தூக்கும்.
அப்போது கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரணகொட, “சுருக்கமாக சொன்னால், கடற்படை மீது தரையில் தாக்குதல் நடத்தினால், அவர்கள் (ராணுவம்) உதவிக்கு வர மாட்டார்கள். ஆனால், நாங்கள் (கடற்படை) தரையை நோக்கி திருப்பி தாக்கினால், அடுத்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், தமது உரிமையை நாம் பறித்துக் கொண்டதாக புகார் செய்வார்கள்” என பழைய நடைமுறையை நினைவுகூர்கிறார்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதி யுத்தம் புலிகளுக்கு தோல்வியில் முடிந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் பல காரணங்களை தமிழ் மீடியாக்கள் எழுதுவதில்லை (எழுத விரும்புவதில்லை, அல்லது விஷயம் தெரியாது)
விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வெல்லும் வகையில் இலங்கை ராணுவத்தில் திறமைசாலிகள் இருந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள அநேக தமிழ் மீடியாக்களின் வீம்பு விடுவதில்லை.
“புலிகள் தோற்றது எப்படி?” என்று கேட்டால், 64 நாடுகள் ஒன்று சேர்ந்து புலிகளை அழித்தார்கள் என்று ஒரு கணக்கு சொல்வார்கள். அதெல்லாம் கப்சா. ஆப்கானில் அமெரிக்கப் படைகள் நேட்டோ நாடுகளின் ராணுவங்களுடன் இணைந்து யுத்தம் புரிந்ததுபோல இலங்கையின் இறுதி யுத்தம் நடக்கவில்லை.
களமுனைகளில் நின்றது, இலங்கை படைகள் மட்டுமே. (இந்திய ராணுவமும் போர்முனையில் நின்றது என்ற கதையில், நாம் அறிந்தவரை உண்மை கிடையாது)
சில நாடுகள் வெவ்வேறு விதங்களில் உதவின. ஆயுதங்கள் கொடுத்தன. இந்தியா உட்பட சில நாடுகள் தொழில்நுட்ப உதவிகளை செய்தனர். உளவுத் தகவல்களை அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. உட்பட சில உளவுத்துறைகள் கொடுத்தன. இறுதி யுத்த நாட்களில் எப்படி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற ஆலோசனை, வெளிநாடு ஒன்றால் கொடுக்கப்பட்டது. (அதை அந்த நாடு, எந்த காலத்திலும் வெளியே சொல்லாது)
என்ன உதவிகள் கிடைத்தாலும், அவற்றை வைத்துக்கொண்டு, 30 ஆண்டுகள் யுத்த அனுபவம் கொண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் புரிய திறமை வேண்டும். அப்படியான திறமைசாலிகள் இலங்கை ராணுவத்திலும் இருந்தார்கள் என ஒப்புக்கொள்வது, தமிழ் மீடியாக்கள் மத்தியில் வலியப் போய் துரோகி பட்டம் வாங்குவதற்கு சமம்.
எதிராளியின் திறமையை குறைத்து மதிப்பிடும் யாரும் ஜெயித்ததாக சரித்திரமில்லை. எதிராளியின் திறமையை சரியாக புரிந்து வைத்திருப்பது, பிளஸ் பாயின்டே தவிர, மைனஸ் இல்லை.
இந்த தொடரில், பிளஸ் விரும்பியவர்கள் எடுத்துக் கொள்ளுங்கள், மைனஸ் வேண்டுமென்றால், அதை வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த விவகாரத்தை நாம் ஏன் குறிப்பிட்டோம் என்றால், இலங்கை பாதுகாப்பு படைகளில் இருந்த மிகத் திறமைசாலிகளில் ஒருவர், நாம் மேலே குறிப்பிட்ட வசந்த கரணகொட என்பதை கூறுவதற்குதான். இஷ்டமென்றால், ஏற்றுக்கொள்ளுங்கள். ஜீரணிக்க முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்தோனேசிய கடல் பகுதியில் ஒவ்வொன்றாக மூழ்கடித்த ஆபரேஷனின் பிரதான திட்டமிடலாளரே இந்த வசந்த கரணகொட என்று ஏற்கனவே எழுதியிருந்தோம். இலங்கை கடற்படையை ஆழ்கடல் ஆபரேஷனுக்கு ஏற்ற வகையில் மாற்றியவர் இவர்தான். ஒரே ஆண்டில் புலிகளில் 8 கப்பல்களை அழித்தவரும் இவர்தான்.
இறுதி யுத்தத்துக்கு முன் நடந்த ஈழ யுத்தங்களில் விடுதலைப் புலிகள் தரையில் அடைந்த பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவற்றில் முக்கியமானவை இரண்டு. ஒன்று, யுத்தம் நடக்கையில் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த ஆயுத சப்ளை. இரண்டாவது, புலிகளின் கடற்படையான கடல் புலிகள் கொடுத்த பக்க உதவி.
karanagoda-20131028-2இறுதி யுத்தத்தின்போது, இவை இரண்டையும் உடைத்தவர், இந்த வசந்த கரணகொடதான் (அருகே போட்டோவில் உள்ளவர்).
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை ராணுவத்தின் இறுதி யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி முடிவுக்குவர, அட்மிரல் வசந்த கரணகொட, இரண்டு மாதங்களில் இலங்கை கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஜப்பானில் இலங்கைக்கான தூதராக பணிபுரிகிறார்.
இறுதி யுத்தத்தின்போது நடந்தவற்றை அறியும் முயற்சியில் இவரிடம் தகவல்கள் பெற்றபோது, இவரது ராணுவப் பின்னணி ஆச்சரியமூட்டியது. கல்வித் தகுதியில், ராணுவ கல்வியில் MSc, MBA பட்டதாரி. இவரது MBA பட்டம் எதில் தெரியுமா? Defence Studies பாடத்தில்.
ராணுவ ரீதியான இவரது கல்வித்தகுதிகள் முழுவதுமே வெளிநாடுகளின் இருந்து பெறப்பட்டவை. அமெரிக்கா, வாஷிங்டன் National Defense University, பிரிட்டனின், Royal Naval Staff College, மற்றும், அமெரிக்கா, ஹவாய், Asia-Pacific Center for Security Studies ஆகியவற்றின் ராணுவ பட்டதாரி.
இவரது இந்தப் பின்னணிதான், அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வின் உதவியை இலங்கை கடற்படை பெற பெரிதும் காரணமாக இருந்தது.
இனி, தொடரை விட்ட இடத்துக்கு செல்லலாம். இறுதி யுத்தம் நடந்தபோது, திரிகோணமலை பகுதியில் இலங்கை ராணுவத்துக்கும், கடற்படைக்கும் லேசாக முறுகல் நிலை இருந்த காரணத்தால், ராணுவ உளவுத்துறையும், கடற்படையை கண்டுகொள்வதில்லை. அதனால், கடற்படையின் உளவுத்துறை, தாமே சொந்தமாக தகவல்களை திரட்டி வைத்திருந்தது.
மூதூர் கடற்படை தளத்தில் இருந்த (ராணுவத்துக்கு சொந்தமான) மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சரை கடற்படை பயன்படுத்தலாம் என்று தெரியவந்தவுடன், வசந்த கரணகொட, கடற்படை உளவுத்துறையை தொடர்பு கொண்ட காரணம், அப்போது விடுதலைப் புலிகள் நிலைகொண்டிருந்த சம்பூர் பகுதியில், எங்கெல்லாம் அவர்களது ஆட்டிலரி பீரங்கிகள் உள்ளன என்ற தகவல், கடற்படை உளவுப் பிரிவுக்கு தெரிந்திருந்தது.
அந்த விபரங்களை வைத்து, அந்த இடங்களை நோக்கி மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர் தாக்குதல்களை நடத்தியது கடற்படை.
இந்த தாக்குதலை நடத்தாமல் இருந்திருந்தால், புலிகள் மூதூரை தாக்கிய முதல்நாள் இரவே, கடற்படைத் தளம் புலிகளின் கைகளில் விழுந்திருக்கும். அதையடுத்து, மூதூர் முழுவதும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றிருக்கும். அங்கிருந்து, திரிகோணமலை துறைமுகத்தை புலிகளால் முடக்க முடிந்திருக்கும்.
ஆனால், கடற்படை பயன்படுத்திய இந்த இரவல் (!) மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர், புலிகளின் அனைத்து திட்டங்களையும் சிதறடித்தது.
கடற்படை தளத்தில் இருந்து சம்பூரை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்டுகள், புலிகளின் ஆட்டிலரி பொசிஷன்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. அத்துடன் கடற்படை தளத்தில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை, ஒரு முறை சம்பூர் நோக்கியும், மறுமுறை திரிகோணமலை துறைமுகத்தின் வாய்ப் பகுதியை (the mouth of the harbour) நோக்கியும் என மாறி மாறி ராக்கெட்டுகள் மறுநாள் காலை வரை ஏவப்பட்டு கொண்டிருந்தன.
இதனால், புலிகளால் கடல் மார்க்கமாக மூதூரை அணுக முடியவில்லை. சம்பூரில் இருந்து மூதூர் நோக்கி ஆட்டிலரி தாக்குதல் நடத்தவும் முடியவில்லை.
மறுநாள் காலை கடற்படையை சேர்ந்த 700 பேர் கடல் மார்க்கமாக வந்து சேரும்வரை, இந்த ஒற்றை மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர், கடற்படை தளத்தை காப்பாற்றி விட்டது. இதில், கடற்படையை சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டனர்.
கடல்வழியாக வந்திறங்கிய 700 கடற்படையினரையும் குறிவைத்து புலிகள் மேற்கொண்ட தாக்குதல் ஒன்று வெற்றிபெறவில்லை. அதற்கு காரணம், சம்பூரில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு வன்னியில் இருந்து வந்த ஒரு உத்தரவு. அந்த விபரம் என்ன என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். (தொடரும்)
No comments:
Post a Comment