Friday, March 28, 2014

ஈழப் போரின் இறுதி நாட்கள்: விடுதலைப் புலிகளின் கொழும்பு ஆபரேஷன் சிக்கிய கதை 12


இலங்கை ராணுவத்துடன் நடந்த சுமார் 30 ஆண்டுகால யுத்தத்தின்போது, ராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்ட போதெல்லாம், புலிகள் கையாண்ட முக்கிய தந்திரம், தெற்கே சிங்களப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்புவிலும் எதிர்பாராத இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க வைப்பதுதான்.

தற்கொலை தாக்குதல்கள் மூலம் வெடிக்கும் வெடிகுண்டுகளால் பலத்த சேதம் ஏற்படும். அல்லது, இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர் கொல்லப்படுவார். அதையடுத்து, இலங்கை ராணுவம் அடக்கி வாசிக்க தொடங்கும். புலிகளுக்கு தம்மை பலப்படுத்திக் கொள்ள அவகாசம் கிடைக்கும்.

1990களில் இருந்தே நடந்துவந்த நடைமுறை இது. புலிகளின் உளவுத்துறையின் ஒரு பிரிவும், தற்கொலை போராளி பிரிவான கரும்புலிகளும் இணைந்து நடத்திய குண்டுவெடிப்புகள் அவை.

இறுதி யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகள் ஒவ்வொரு நகரமாக கைவிட்டு பின்வாங்கி சென்றுகொண்டிருந்தபோதும், இந்த தந்திரம் கடுமையாக முயற்சிக்கப்பட்டது. ஆனால், முன்பு கிடைத்தது போன்ற வெற்றிகள் புலிகளுக்கு கிடைக்கவில்லை.

இறுதி யுத்தம் நடந்தபோது நடந்த சம்பவங்களை கவனமாக பார்த்தீர்கள் என்றால், யுத்தத்தின் இறுதி மாதங்களில், சிங்களப் பகுதிகளிலோ, கொழும்புவிலோ எந்தவொரு குண்டும் வெடிக்கவில்லை என்பதை கவனிக்கலாம். அந்த காலப்பகுதியில் எந்தவொரு தற்கொலை தாக்குதலும் நடக்கவில்லை.

சில தமிழ் மீடியாக்களில், “விடுதலைப் புலிகள், தற்கொலை தாக்குதல் நடத்தி வெளிநாடுகளின் அதிருப்தியை சம்பாதிக்க விரும்பாத காரணத்தாலேயே, அவற்றை முழுமையாக நிறுத்திவிட்டு, நேரடியாக சண்டைபோட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கிச் சென்று, அனைத்தையும் முழுமையாக இழந்தார்கள்” என விளக்கம் கொடுக்கிறார்கள்.

அவர்களை பொறுத்தவரை அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.

நிஜமாக நடந்தது என்னவென்றால், இறுதி யுத்தத்தின் இறுதி மாதங்களில் கொழும்புவில் விடுதலைப்புலிகளால் திட்டமிடப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்கள் ஏதையும், அவர்களால் நடத்த முடிந்திருக்கவில்லை. காரணம், கொழும்புவில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திய இணைப்பாளர்கள் ஒவ்வொருவராக இலங்கை உளவுத்துறையினரிடம் அகப்பட்டுக் கொண்டார்கள்.

அவர்களில் பலர், தற்போதும் இலங்கை சிறைகளில் உள்ளார்கள். உரிய அனுமதி பெற்று சென்று அவர்களை சந்தித்து கேட்டால், விளக்கமாக சொல்வார்கள். இப்போது இந்த விவகாரங்கள் எதுவும் ரகசியம் கிடையாது.

இறுதி யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவடைந்தது. அதற்கு சில மாதங்களுக்கு முன்னரே விடுதலைப் புலிகள் தமது நிலைமை மிக மோசம் என்பதை புரிந்து கொண்டிருந்தார்கள். யுத்தத்தை நிறுத்தினால்தான், தம்மை பலப்படுத்திக்கொள்ள முடியும் என்பதை புரிந்து கொண்டார்கள். இதற்குமுன், போர் நிறுத்தத்தை கொண்டுவர உதவிய வெளிநாடுகள், கழுவிய நீரில், நழுவிய மீனாக இருந்தன.

இதனால், கொழும்புவில் பெருமளவில் குண்டுகள் வெடித்து நாட்டையே அதிரவைத்தால்தான், முன்னேறும் ராணுவத்தை தடுத்து நிறுத்த முடியும் என்ற நிலை.

இலங்கையின் தெற்கு பகுதியில், முக்கியமாக கொழும்புவின் புறநகர பகுதியில், பல இடங்களில் விடுதலைப்புலிகளால் வெடிகுண்டுகளும், ஆயுதங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை வெடிக்க வைப்பதற்காக தற்கொலை தாக்குதல்கள் செய்ய அனுப்பி வைக்கப்பட்ட கரும்புலிகளும், கொழும்புவின் வெவ்வேறு பகுதிகளில் மக்களோடு மக்களாக கலந்து போய் இருந்தார்கள்
இந்த கரும்புலிகள், தாமாக மறைவிடத்துக்கு போய், வெடிகுண்டு ஒன்றை எடுத்துச் சென்று வெடிக்க வைப்பது என்பதல்ல நடைமுறை.

தற்கொலை தாக்குதல் செய்ய தயாராக இருந்த கரும்புலிகளுக்கே, வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்த மறைவிடங்கள் தெரியாது. வன்னியில் இருந்த புலிகளின் உளவுப்பிரிவு தலைமைக்கும், இந்த கரும்புலிகளுக்கும் இடையே இணைப்பாளர்களாக இருந்த சிலருக்கு மட்டுமே, இந்த மறைவிடங்கள் தெரியும்.

இந்த இணைப்பாளர்களே, வன்னி யுத்த களத்துக்கு வெளியே நடந்த தாக்குதல்களுக்கு முதுகெலும்பு போன்றவர்கள்.

எப்படியென்றால், கொழும்புவில் இருந்த இந்த இணைப்பாளர்களிடம்தான் வன்னியில் இருந்து கரும்புலிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் தங்குவதற்காக வெவ்வேறு மறைவிடங்களை ஏற்பாடு செய்வது இந்த இணைப்பாளர்களே. அத்துடன், வன்னியில் இருந்து வெடிப் பொருட்கள் வருவதும் இந்த இணைப்பாளர்களுக்குதான். வெடிப் பொருட்களை கொழும்புவின் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைப்பதும், இந்த இணைப்பாளர்களே.

அதன்பின், வன்னியில் இருந்து உத்தரவு வரும், குறிப்பிட்ட பிரமுகரையோ, இலக்கையோ தாக்கும்படி.

அந்த தாக்குதலை நடத்த உரிய இடத்தை தேர்ந்தெடுப்பது, மறைவிடத்தில் உள்ள கரும்புலி ஒருவரை தயார் செய்வது, வேறொரு மறைவிடத்தில் உள்ள வெடிகுண்டை கரும்புலியிடம் கொடுப்பது, உடலில் குண்டு பொருத்தப்பட்ட கரும்புலியை, தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தில் கொண்டுபோய் சேர்ப்பது எல்லாமே, இந்த இணைப்பாளர்களின் கையில்தான்!

மொத்தத்தில், வன்னியில் இருந்தவர்களுக்கு, கொழும்புவில் கரும்புலிகளின் மறைவிடங்கள் எங்கே என்று தெரியாது. கொழும்புவில் இருந்த கரும்புலிகளுக்கு, கொழும்புவில் வெடிகுண்டுகள் இருந்த மறைவிடங்கள் எங்கே என்று தெரியாது. அனைத்தும் தெரிந்தவர்கள், இந்த இணைப்பாளர்கள்.

இப்படியான இணைப்பாளர்கள்தான், இறுதி யுத்தத்தின் இறுதி மாதங்களில் கொழும்புவில் ஒவ்வொருவராக சிக்கிக் கொண்டார்கள்!

இறுதி யுத்தம் மும்மரமாக நடந்து கொண்டிருந்தபோது, இலங்கையின் உளவுத்துறை SIS-க்கு (State Intelligence Service), வெளிநாட்டு உளவுத்துறை ஒன்றிடம் இருந்து உளவுத் தகவல் ஒன்று வந்தது.

(இலங்கை உளவுத்துறை SIS, பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு. முன்பு National Intelligence Bureau என்ற பெயரில் செயல்பட்ட அமைப்புதான், SIS என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் தற்போதைய டைரக்டர், சந்திரா வாஹிஸ்த)

வெளிநாட்டு உளவுத்துறை, தமது நாட்டில் இருந்த விடுதலைப்புலிகள் செயல்பாட்டாளர் ஒருவருடைய போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது, வெளிநாட்டு விடுதலைப்புலிகள் செயல்பாட்டாளரிடம் இருந்துதான், கொழும்புவில் உள்ள இணைப்பாளர்களுக்கு உத்தரவுகள் போவதை, வெளிநாட்டு உளவுத்துறை தெரிந்து கொண்டது.

இந்த காலப்பகுதியில் (2009-ம் ஆண்டு ஆரம்பம்), அந்த வெளிநாட்டுக்கு அவர்களது நாட்டில் விடுதலைப் புலிகளால் பலத்த இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. அந்த நாட்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வந்தது.

அதை தடுக்க முயன்றால், அரசியல் ரீதியாக குறிப்பிட்ட வெளிநாட்டு அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும்.

இதனால், ஆர்ப்பாட்டங்களை வெளிப்படையாக தடுக்காமல், இதற்கெல்லாம் மூல காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை, இலங்கையில் முடித்து விடுவது நல்லது என்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

அந்த அடிப்படையிலேயே, தமது நாட்டில் இருந்து, கொழும்புவில் உள்ள இணைப்பாளர் ஒருவருக்கு உத்தரவுகளை கொடுக்கும் வெளிநாட்டு செயற்பாட்டாளர் தொடர்பான உளவுத் தகவலை, இலங்கை உளவுத்துறை SIS-க்கு கொடுத்தது, வெளிநாட்டு உளவுத்துறை.

வெளிநாட்டு உளவுத்துறை, வெறும் தகவலை மட்டும் கொடுக்கவில்லை. கொழும்புவில் இருந்த விடுதலைப்புலிகளின் இணைப்பாளர் பயன்படுத்திய போன் இலக்கத்தையும் கொடுத்தது. “கொழும்புவில் உள்ள இந்த இலக்கத்தில் இருந்து அழைத்துதான், உத்தரவுகளை பெற்றுக் கொள்கிறார்கள்”(தொடரும்..)

No comments:

Post a Comment