Friday, March 28, 2014

ஈழப் போரின் இறுதி நாட்கள்: நந்திக்கடல் விவகாரத்தில் வசமாக சிக்கினார் ரஷ்ய உளவாளி! 11`


விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான இறுதி யுத்தம் நடைபெற்ற கடைசி நாட்களில், மீடியாக்களில் நிஜ தகவல்கள் எப்படி மறைக்கப்பட்டன என்பதற்கான ஒரு சில உதாரணங்களை கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

யுத்தத்தின் இறுதி நாளில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நந்திக்கடல் பகுதியில் கொல்லப்பட்டார் என்ற செய்தியை  இலங்கை அரசு அறிவித்தது. அதற்கு முதல் வாரம் நாம் வெளியிட்ட ‘பரபரப்பு வீக்லி’ வார பத்திரிகையின் கவர் ஸ்டோரி என்ன தெரியுமா?

பெரிய எழுத்துக்களில் ‘நந்திக்கடல்’ என்பது மட்டுமே கவர் ஸ்டோரியின் தலைப்பு!

மே 15-ம் தேதியிடப்பட்ட பத்திரிகையில் வெளியான அந்தக் கட்டுரையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்த முனையில் இருந்து தப்பிப்பது என்றால், அதற்கு ஒரே வழி, நந்திக்கடல் ஓரமாக தப்பிப்பதுதான். அதற்கும் அதிக நாட்கள் அவகாசம் கிடையாது. வேறு எந்த வழியிலும் வெளியேற முடியாது. பிரபாகரன் தப்பிப்பது என்றால், இலங்கை ராணுவத்தின் 53-ம் டிவிஷன் படைப்பிரிவு நிற்கும் இடத்தில்தான் முயற்சித்து பார்க்க சான்ஸ் அதிகம். இதனால், நந்திக்கடல் ஓரமாக அடுத்த சில தினங்களில் முக்கிய சம்பவங்கள் நடைபெறலாம்” என எழுதியிருந்தோம்.

நாம் மே 15-ல் அப்படி எழுதியிருக்க, அதிலிருந்து ஒரு வாரத்துக்குள், மே 19-ம் தேதி, இலங்கை ராணுவத்தின் 53-ம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4-ம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு, லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது, நந்திக்கடல் ஓரம், கோரைப் புற்களில் சிக்கிய நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் அறிவித்தது.

eelam-war-20131226-3
சாம்பிளுக்கு நம்ம பத்திரிகை..

அந்த நாட்களில் எமது ‘பரபரப்பு வீக்லி’ வார பத்திரிகைக்கு அதிக எதிர்ப்பை ஏற்படுத்திய கட்டுரை அது.

‘யுத்த முனையில் இருந்து பிரபாகரன் தப்பிக்க முயற்சி’, ‘வேறு வழியில்லை’ என்ற சொற்பதங்களை உபயோகிப்பது தமிழின துரோகம் என சிலர் எகிறினார்கள். யுத்த முனையில் இருந்து வெவ்வேறு தொடர்புகள் மூலம் நாம் வெளியிட்ட நிஜ நிலைமையை அல்லது ரியாலிட்டியை அப்படியான சிலர், ‘பொய் பிரசாரம்’ என்றார்கள்.

யாருக்காக பொய் பிரசாரம் செய்தோம் என்பதில்தான் இவர்களில் ஆளாளுக்கு குழப்பம்.

சிலர், நாம் இலங்கை அரசின் ஊதுகுழல் என்றார்கள். சிலர், நாம் இந்திய உளவுத்துறை ‘ரா’வின் ஆள் என்றார்கள். சிலர், சி.ஐ.ஏ. ஏஜென்ட் என்றார்கள்.

இந்த அரிய உண்மைகளை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்? எல்லா உளவுத்துறைகளிலும் இவர்கள் இன்பார்மர்களை வைத்திருக்கிறார்களா?

சேச்சே.. அதெல்லாம் கிடையாது. இந்த உளவுத்துறைகள் பற்றியெல்லாம் விலாவாரியாக எழுதிக்கொண்டு இருந்த ஒரே தமிழ் மீடியா நாம்தான் என்பதில் இருந்து, சும்மா ஜிகுஜிகுவென்று எடுத்து விட்டார்கள்.

இவர்கள் எல்லோரது பட்டமளிப்புகளை விட மகா கொடுமை, ‘ஈழ தேசிய இணையதளம்’ என தம்மை கூறிக்கொள்ளும் ஒரு மீடியா, எமக்கு கொடுத்த பட்டம்தான். அதில் ‘ஆய்வுக்கட்டுரை’ எழுதிய ‘ஆய்வாளர்’ ஒருவர், “இந்த ஆள் ரிஷி, ரஷ்ய உளவுத்துறை கே.ஜி.பி. (KGB) ஏஜென்ட்” என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.

“அடப்பாவி, இதை இவர் எங்கே பிடித்தார்?” என யோசித்து பார்த்தபோது, புரிந்தது. ‘பரபரப்பு வீக்லி’ வார பத்திரிகையில், 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் நாம் ரஷ்ய உளவுத்துறை கே.ஜி.பி.யின் ஆபரேஷன் பற்றிய தொடர் கட்டுரை ஒன்றை வெளியிட்டுக் கொண்டிருந்தோம். அதே காலப்பகுதியில், இலங்கை பாதுகாப்பு அமைச்சு ரஷ்யாவிடம் வாங்க முயன்றுகொண்டிருந்த மிக்-29 போர் விமானங்கள் பற்றியும், ஏற்கனவே வன்னியில் குண்டுவீசிக் கொண்டிருந்த ரஷ்ய மிக்-27 விமானங்கள் பற்றியும் விலாவாரியாக எழுதிக்கொண்டு இருந்தோம்.

கே.ஜி.பி. ஆபரேஷன், மிக்-27, மிக்-29 எல்லாவற்றையும் சேர்த்து போட்டு கலக்கி, “ரிஷி, சாதாரண ஆள் கிடையாது. ஆசாமி, ரஷ்ய உளவுத்துறை கே.ஜி.பி. (KGB) ஏஜென்ட்” என்று போட்டுத் தாக்கி விட்டார் அதை எழுதிய புத்திசாலி ஆய்வாளர்.

நான் மீடியா துறையை விட்டு விலகுமுன் அதை எழுதிய மேதாவியை ஒருமுறையாவது கண்ணால் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் இன்னமும் உள்ளது. “அண்ணே.. ரஷ்ய உளவுத்துறை கே.ஜி.பி. 1991-ம் ஆண்டே கலைக்கப்பட்டு விட்டது. அதன்பின் FSB (ரஷ்ய உள்ளக உளவுத்துறை, SVR (ரஷ்ய வெளிநாட்டு ஆபரேஷன் உளவுத்துறை) உருவாகின. 1991-ல் கலைக்கப்பட்ட உளவுத்துறைக்கு 2009-ல் என்னை உளவாளியாக்கி பெருமை சேர்த்திங்க.. ரொம்ப டாங்ஸ் அண்ணாச்சி!”

ஈழ இறுதி யுத்தம் தொடர்பாக எந்த தகவலும் தெளிவாக இல்லாமல், இன்னமும் குழப்பம் நீடிப்பதற்கு, மீடியாக்களில் சுதந்திரமாக செயல்பட முடியாமல் இருந்த நிலைதான் காரணம். அதுவும் அந்த நாட்களில் ‘பரபரப்பு வீக்லி’ வார பத்திரிகை போன்ற அச்சு மீடியா என்றால், முணுக் என்பதற்குமுன் வீதியில் போட்டு எரித்து விடுவார்கள். இப்போது எலக்ட்ரானிக் மீடியாக்களில் எழுதுவது பிரச்னையில்லை.

சுருக்கமாக சொன்னால், நம் வீட்டு கொல்லைக்குள் நின்று எட்டிப் பார்த்தால், முழு உண்மையும் தெரியவராது. மற்றைய தரப்பில் இருந்தும் தகவல் வர வேண்டும். அதற்கு எல்லா தரப்பிலும் தொடர்புகள் இருக்க வேண்டும். கருணாநிதியும், ஜெயலலிதாவும் அரசியல் செய்வதுபோல ஆளையாள் முகத்தை திருப்பிக்கொண்டு போனால், இதில் காரியமாகாது. நேரில் இறங்கி விசாரிக்க வேண்டும்!

‘ஈழ யுத்தம் இறுதி நாட்கள்’ தொடரில், இலங்கை கிழக்கு மாகாணத்தில் நடந்த சில தாக்குதல்கள் பற்றி எழுதியிருந்தோம். கிழக்கில் புலிகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், சிங்களப் பகுதிகளிலும், கொழும்புவிலும் புலிகளின் உளவுப் பிரிவு சில குண்டுவெடிப்புகளை செய்ய முயன்றது.
விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்துடன் நடத்திய நீண்டகால யுத்தத்தில், பிரதான தந்திரமாக இருந்தவற்றில் இந்த குண்டுவெடிப்புகள் முக்கியமானவை.

யுத்தத்தில் புலிகளுக்கு பின்னடைவு ஏற்படும் போதெல்லாம், தெற்கே சிங்களப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்புவிலும் எதிர்பாராத இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும். பலத்த சேதம் ஏற்படும். அதையடுத்து, இலங்கை ராணுவம் அடக்கி வாசிக்க தொடங்கும். புலிகளுக்கு தம்மை பலப்படுத்திக் கொள்ள அவகாசம் கிடைக்கும்.

1990களில் இருந்தே நடந்துவந்த நடைமுறை இது. புலிகளின் உளவுத்துறையின் ஒரு பிரிவும், தற்கொலை போராளி பிரிவான ‘கரும்புலிகளும்’ இணைந்து நடத்திய குண்டுவெடிப்புகள் அவை.

இறுதி யுத்தத்தின்போதும், இந்த தந்திரம் முயற்சிக்கப்பட்டது. ஆனால், முன்பு கிடைத்தது போன்ற வெற்றிகள் புலிகளுக்கு கிடைக்கவில்லை.

அதுவும் யுத்தத்தின் இறுதி மாதங்களில், சிங்களப் பகுதிகளிலோ, கொழும்புவிலோ எந்தவொரு குண்டும் வெடிக்கவில்லை. எந்தவொரு தற்கொலை தாக்குதலும் நடக்கவில்லை.

யுத்தம் முடிந்தபின் இலங்கை ராணுவ அதிகாரி ஒருவரை பேட்டி கண்டபோது, “யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவதற்கு 1 மாதத்துக்கு முன்பு ஏப்ரலில் தலைநகர் கொழும்புவில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு ஒன்று நடத்தப்பட்டு இருந்தால், எந்த வெளிநாட்டு தலையீடும் இல்லாமல் யுத்தம் நின்று போயிருக்கும். ஆனால் புலிகளால் கொழும்புவில் தாக்குதல் எதையும் செய்ய முடியவில்லை” என்றார்.

அதுவும், யுத்தத்தின் இறுதி நாட்களில், தமக்கு அழிவு நிச்சயம் என்று புரிந்துவிட்ட நிலையிலும், ‘கொழும்புவில் தற்கொலை தாக்குதல்’ என்ற இறுதி ஆயுதத்தை புலிகளால் பயன்படுத்த முடியவில்லை. கொழும்புவிலும், அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலும் தரையில் செய்ய முடியாத தாக்குதல்களை, வான்புலிகள் விமானம் மூலம் செய்ய முயன்றார்கள். அவையும், இலக்குகளில் சரியாக விழவில்லை.

யுத்தம் இறுக்கமாக தொடங்கிய நிலையில், பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, அப்போதைய ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை காட்சியில் இருந்து நீக்குவதற்காக புலிகள் கடும் முயற்சி செய்தனர். இந்த இருவர் மீதும் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அவையும் சரியாக நடக்கவில்லை. தற்கொலைத் தாக்குதலில் இருந்து இருவருமே தப்பித்துக் கொண்டனர். சரத் பொன்சேகா படுகாயமுற்று, சிங்கப்பூர் வரை சென்று சிகிச்சை பெற்று வந்து யுத்தத்தை நடத்தினார். கோட்டாபய ராஜபக்ஷ, சிறு காயத்துடன் தப்பித்துக் கொண்டார். இந்த இருவரில் ஒருவர் உயிரிழந்திருந்தால்கூட, யுத்தத்தின் போக்கு மாறியிருக்கலாம்.

முன்பு தெற்கு இலங்கையில் புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்புகளையும், தற்கொலைத் தாக்குதல்களையும், கடைசி நேரத்தில் ஏன் புலிகளால் செய்ய முடியாது போனது? அதற்கு என்ன காரணம்? புலிகள் முயற்சிக்கவே இல்லையா?

இப்போது யுத்தம் முடிந்தபின், இலங்கை ராணுவ உளவுப்பிரிவு, தேசிய உளவுப்பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளை பேட்டி கண்டதில் அவர்களிடம் இருந்து கிடைக்கும் பதில், “தெற்கே வெடிகுண்டு தாக்குதல்களை நடத்த புலிகள் கடுமையாக முயற்சித்தார்கள். ஆனால் குண்டுவெடிப்புகளை செய்வதற்காக புலிகளால் தெற்கே அனுப்பி வைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக சிக்கிக் கொண்டார்கள்” என்பதுதான்.

புலிகளின் உளவுத்துறை மற்றும் கரும்புலிகள் பிரிவை சேர்ந்த இவர்கள் எப்படி சிக்கிக் கொண்டார்கள் என்ற விபரங்களை இப்போது தெரிந்துகொள்ள முடிகிறது. இவர்களை பிடித்த அதிகாரிகளிடம் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகிறது. அப்போது கைது செய்யப்பட்டு இலங்கை தடுப்பு காவலில் உள்ள புலிகளின் உளவுத்துறை மற்றும் கரும்புலிகள் பிரிவை சேர்ந்த சிலருடன் பேசவும் முடிந்தது.

தற்போது தெரியவந்த விஷயங்களில் மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இவர்களில் சிலர், மிக சாதாரண காரணங்களால், அல்லது கவனக்குறைவால் சிக்கிக் கொண்ட சம்பவங்களும் உண்டு!

இந்த ‘ஈழ யுத்தம் இறுதி நாட்கள்’ தொடரில் நாம் எழுதிவரும், கிழக்கு மாகாணத்தில் யுத்த சம்பவங்கள் நடந்த அதே நேரத்தில், புலிகள் கொழும்புவில் குண்டு வெடிப்புகளை நடத்த ஆட்களை அனுப்பி வைத்தார்கள். கிழக்கே யுத்தம் நடந்துகொண்டிருந்த அதே நேரத்தில்தான், தெற்கே ஒவ்வொருவராக சிக்கிக் கொள்ள தொடங்கினார்கள் என்பதால், அந்த ஆபரேஷன்களை அடுத்த சில அத்தியாயங்களில் பார்த்துவிட்டு, மீண்டும் யுத்த முனைக்கு செல்லலாம்.

எமக்கு தெரியவந்த தகவல்களில், சில விசித்திரமான சம்பவங்களும் உள்ளன.

வெறும் சந்தேக கேஸில் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களில் ஒருவரை வெளியே கொண்டுவர, ‘பெரிய அளவில்’ முயற்சிக்கப்போய், “ஆகா.. இவரில் ஏதோ விஷயம் உள்ளது” என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி, ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் உண்டு. எந்த முயற்சியும் செய்யாமல் விட்டிருந்தால், இரண்டு மணி நேர சந்தேக கேஸ் விசாரணையை முடித்துக்கொண்டு ஆளை வெளியே விட்டிருப்பார்கள்.

தெற்கே விபசார விடுதி நடத்தும் ‘மேடம்’ ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஒருவர் சிக்கி, அவர் மூலம் சங்கிலித் தொடராக வேறு சிலர் சிக்கிய சம்பவமும் உண்டு. பெரிய லிங்க் அது. தகவல் கொடுத்த விபசார விடுதி ‘மேடம்’, கொடுத்த தகவலுக்காக இலங்கை உளவுப் பிரிவின் பணப்பரிசும் பெற்றார். அதன்பின் இப்போதும், ஒரிஜினல் தொழிலான விபசார விடுதியையே நடத்துகிறார்.

புலிகளால் வெடிப்பொருள் ஏற்றி அனுப்பப்பட்ட லாரி ஒன்றின் பின் பாடியில் (ட்ரெயிலர்) வெளிப்புற நீளத்துக்கும், உட்புற நீளத்துக்கும் இடையே சில செ.மீ. வித்தியாசம் இருந்ததால் ஏராளமான வெடிப்பொருள் சிக்கிய சம்பவமும் உண்டு. அதனுடன் தொடர்பாக பலர் சிக்கியதும் நடந்தது.

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி ஒன்றின் மூலம், ஒரு குரூப் சிக்கியது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவை தற்கொலை குண்டுவெடிப்பின் மூலம் கொல்ல போடப்பட்ட திட்டம் ஒன்று சிக்கிய சம்பவமும் உண்டு. அந்த திட்டத்தில் தொடர்பு கொண்ட சிங்கள ராணுவ அதிகாரி ஒருவரும் சிக்கினார் என்பது உபரி தகவல்...(தொடரும்)

No comments:

Post a Comment