ஆகஸ்ட் 3-ம் தேதி, மதியம் 2 மணிக்கு மூதூர் டவுன், முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. மூதூர் ராணுவ முகாம் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது. கடற்படை தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். கடற்படை தளத்துட் ஒட்டியிருந்த போலீஸ் நிலையம், அந்த நிமிடம்வரை தாக்குதலுக்கு உள்ளாகவில்லை.
சுமார் 3 மணிக்கு மூதூர் கடற்படை தளத்தின் அதிகாரி கேப்டன் உதய பண்டார, கொழும்புவில் இருந்த கடற்படை தலைமையகத்துக்கு அபாய அறிவிப்பை அனுப்பினார். “எந்த நிமிடமும் கடற்படை தளம் புலிகளிடம் வீழ்ந்துவிடும். உடனடியாக உதவி தேவை”
அந்த எஸ்.ஓ.எஸ். மெசேஜ் அனுப்பப்பட்டு ஒரு மணி நேரத்தில், கொழும்புவில் இருந்து ஒரு தகவல் வந்தது. “ராணுவத்தின் கமாண்டோ படைப்பிரிவு ஒன்று வேகப் படகுகளில் வருகிறார்கள். அவர்கள் தரையிறங்க உதவி செய்யவும்”
இந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் கடற்படை தளத்தை நோக்கி உக்கிரமாக தாக்கிக் கொண்டிருந்தார்கள். கடற்படையினருக்கு கொடுக்கப்படும் பயிற்சிகள் பெரும்பாலும், கடல் தாக்குதல்கள் தொடர்பானவையே. அவர்கள் தரை தாக்குதல்களில் திறமைசாலிகள் அல்ல.
இதனால் புலிகளின் தாக்குதலை ‘ஏதோ சமாளித்தபடி’ ராணுவம் அனுப்பி வைக்கப் போகும் கமாண்டோ படைப் பிரிவுக்காக காத்திருந்தார்கள். கமாண்டோக்கள் வந்து சேரும்வரை தளம் புலிகளின் கைகளில் விழாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்பதே அவர்களது நினைப்பு.
கொழும்பு சொன்ன கமாண்டோ படைப்பிரிவு, மாலை 4.30க்கு மூதூர் ஜெட்டியில் (கடல் இறங்குதளம்) வந்து இறங்கியது. மொத்தம் 65 கமாண்டோ வீரர்கள் அந்த படைப்பிரிவில் இருந்தார்கள்.
இப்படியொரு படைப்பிரிவு வந்து இறங்குவதை கவனித்த புலிகள், மூதூர் ஜெட்டியை நோக்கி ராக்கெட் தாக்குதலை நடத்த தொடங்கவே, தரையிறங்க வந்த கமாண்டோக்களை கரைக்கு கொண்டு வருவதற்கு கடற்படையினர் திணற வேண்டியிருந்தது. ஒரு வழியாக 65 பேரும் கடற்படைத் தளத்துக்கு வந்து சேர்ந்தனர்.
அதன்பின் நடந்ததுதான், கடற்படையினர் எதிர்பாராத திருப்பம்!
வந்திறங்கிய கமாண்டோ படையணியினர், தாம் கடற்படை தளத்துடன் ஒட்டியுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு பாதுகாப்பு கொடுக்கவே அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.
இதனால், கடற்படை தளத்துக்கு பாதுகாப்பு கொடுக்க மறுத்துவிட்டு, போலீஸ் ஸ்டேஷனை சுற்றி பொசிஷன் எடுத்து நின்று விட்டார்கள். (அந்த நிமிடம்வரை, போலீஸ் ஸ்டேஷன் மீது எந்தவொரு தாக்குதலையும் புலிகள் மேற்கொள்ளவில்லை.)
இந்த சூழ்நிலை தமாஷான ஒன்று. கடற்படை தளம்மீது புலிகள் ஏவும் ராக்கெட்டுகள் வந்து பொழிந்து கொண்டிருக்கின்றன. அதை சமாளிக்க கடற்படையினர் திணறுகிறார்கள். ஆனால், புதிதாக வந்திறங்கிய கமாண்டோக்கள், போலீஸ் ஸ்டேஷனை சுற்றி நிற்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷன்மீது ஒரு சிங்கிள் ராக்கெட்கூட வந்து விழவில்லை.
கடற்படையினர் தாம் மீண்டும் ‘ஸ்கொயர் ஒன்’னுக்கு வந்து விட்டதை புரிந்து கொண்டனர். தமது தளம் புலிகளிடம் விழாமல் இருக்க வேண்டுமானால், தாம்தான் சொந்தமாக ஏதாவது செய்தேயாக வேண்டும்!
இப்படி எந்த நிமிடமும் கடற்படை தளம் விடுதலைப் புலிகளின் கரங்களில் விழுந்துவிடும் என்றிருந்த நிலையில், கடற்படை அதிகாரியாக இருந்த கேப்டன் உதய பண்டார, கடற்படை தளத்தின் காம்பவுண்டுக்குள் இருந்த ஒரு பல்குழல் ராக்கெட் லோஞ்சரை (MBRL – Multi Barrel Rocket Launcher) கவனித்தார்.
அந்த ராக்கெட் லோஞ்சர், கடற்படைக்கு சொந்தமானதல்ல. ராணுவம் (தரைப்படை) அங்கே கொண்டு வந்து நிறுத்தியிருந்தது. அதை இயக்குவதற்கு ஒரு ஆபரேட்டரையும், செலுத்தப்பட வேண்டிய ராக்கெட்டுகளையும் அங்கேயே வைத்திருந்தது. கடற்படை தளத்தில் இருந்த இந்த ராக்கெட் லோஞ்சரை, கடற்படையினர் அதுவரை கண்டுகொள்ளவில்லை. காரணம், அவர்களுக்கு அதை இயக்க பயிற்சி கிடையாது.
கடற்படை தலைமைச் செயலகத்தை அவசரமாக தொடர்பு கொண்ட உதய பண்டார, கடற்படை தளபதி வசந்த கரணகொடவிடம் பேசினார். “தரைப்படைக்கு சொந்தமான இந்த பல்குழல் ராக்கெட் லோஞ்சரை கடற்படையினர் பயன்படுத்த முடியுமா?” என்று கேட்டார்.
பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டுவிட்டு பதில் சொல்வதாக கூறினார் கடற்படை தளபதி வசந்த கரணகொட. (இது தொடர்பாக அவர் தெரிவித்த சில பின்னணி விபரங்கள் சுவாரசியமானவை. அதை தனி பகுதியாக தருகிறோம்)
கடற்படை தரப்பு இப்படி குழப்பத்தில் இருக்க, கடற்படை தளம் மீது தாக்குதல் நடத்திய புலிகளும் குழப்பத்தில்தான் இருந்தார்கள்
மூதூர் மீதான தாக்குதலுக்கான முடிவு, லோக்கல் மட்டத்தில் எடுக்கப்பட்டது என்று கடந்த அத்தியாயத்தில் கூறியிருந்தோம். இந்த தாக்குதல் தொடங்கியபோது, விடுதலைப் புலிகளின் கிழக்கு பகுதி தளபதியாக இருந்த சொர்ணம் அங்கில்லை. மூதூர் ராணுவ முகாம் வீழ்ந்த தகவல் அவருக்கு வாக்கி-டாக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது.
அது கூறப்பட்ட சிறிது நேரத்தில், அடுத்த வாக்கி-டாக்கி மெசேஜ் சொர்ணத்துக்கு சென்றது. “மூதூர் டவுன் முழுமையாக எமது கைகளுக்கு வந்துவிட்டது. கடற்படை தளத்தை நோக்கி தாக்குதல் நடத்துகிறோம். அடுத்து என்ன செய்வது?”
இதற்கு சொர்ணம் சொன்ன பதில், “மேலிடத்தில் (வன்னியில் உள்ள தலைமை) கேட்டுவிட்டு சொல்கிறேன். அதுவரை இப்போது செய்வதையே தொடருங்கள்” என்பதுதான்.
மூதூர் ஜெட்டியில் இலங்கை ராணுவத்தின் கமாண்டோ படைப்பிரிவு வந்து இறங்கியபோது, அந்த தகவல் மீண்டும் சொர்ணத்துக்கு தெரிவிக்கப்பட்டது. “அவர்களை அடிக்கவா?”
இதற்கு சொர்ணத்தின் பதில், “மேலிடத்தில் இருந்து இன்னமும் பதில் வரவில்லை. உங்களுக்கு சரியென்று பட்டதை செய்யுங்கள்”. அதையடுத்து, மூதூர் டவுனை கைப்பற்றி அங்கு நின்றிருந்த புலிகளால் மூதூர் ஜெட்டி மீது லேசான தாக்குதல் நடத்தப்பட்டது. தரையிறங்கிய கமாண்டோ படையை தடுத்து நிறுத்த அந்த தாக்குதல் போதாது. கமாண்டோ படையில் ஒருவர்கூட உயிரிழக்காமல், பத்திரமாக கடற்படை தளத்துக்குள் சென்று விட்டனர்.
அப்போது மூதூரில் நின்று யுத்தம் புரிந்துவிட்டு, யுத்தம் முடிந்தபின் தற்போது இலங்கை தடுப்பு முகாமில் உள்ள விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் ஒருவர், “அந்த நேரத்தில் மூதூர் ஜெட்டியை நோக்கி, சம்பூரில் இருந்து ஷெல் அடித்திருந்தால், கமாண்டோக்கள் அங்கு தரையிறங்கியிருக்கவே முடியாது. ஒருவேளை தரையிறங்கியிருந்தால், பாதிப் பேராவது கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், அப்படியொரு உத்தரவு கொடுக்க யாருமில்லை” என்றார்.
இப்போது நமக்கு கிடைத்த மற்றொரு தகவலின்படி, மூதூர் தாக்குதல் தொடங்கிய தினத்தில் (ஆகஸ்ட் 3-ம் தேதி), புலிகளின் கிழக்கு தளபதி சொர்ணம், புலிகளின் பிரபாகரனுடன் நேரடித் தொடர்பில் இல்லை. புதுக்குடியிருப்பில் (வன்னி) இருந்த மற்றொரு தொடர்பாளர் (அவர் தற்போதும் உயிருடன் உள்ளார், பெயர் வேண்டாம்) ஊடாகவே, சொர்ணத்தின் தகவல்கள் பிரபாகரனுக்கு சென்று கொண்டிருந்தன.
இதனால், மூதூரில் என்ன செய்வது என்று ‘மேலிட உத்தரவை’ சொர்ணம் உடனடியாக பெறுவதற்கு சான்சே இல்லை.
தவிர, இதுதான் இறுதி யுத்தத்தின் தொடக்கம். திரிகோணமலை ஏரியாவை தவிர வேறு எங்கும் புலிகளின் தாக்குதல் நடக்கவில்லை. இதனால், யுத்த முனையில் இருந்து செய்திகளை பெற்று உடனடியாக தெரியப்படுத்த கமாண்ட் சென்டர் போல எதுவும் வன்னியில் செட்டப் பண்ணப்பட்டு இருக்கவில்லை.
புலிகளின் நிலைமை இப்படி குழப்பத்தில் இருக்க, மூதூரில் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்து கிழக்கு தளபதி சொர்ணத்துடன் வாக்கி-டாக்கி தொடர்பில் இருந்தவர், “அடுத்து என்ன செய்வது?” என்று அடிக்கடி கேட்கத் தொடங்க, சொர்ணத்திடம் இருந்து வந்த ஒரே பதில், “மேலிடத்தில் இருந்து இன்னும் மெசேஜ் கிடைக்கவில்லை. நீங்கள் செய்வதை அப்படியே தொடருங்கள்”
இப்படி நேரம் ஓடிக் கொண்டிருக்க, மூதூர் கடற்படை தளத்துக்கு, கொழும்புவில் இருந்து மெசேஜ் வந்தது.
கடற்படை தளபதி வசந்த கரணகொட, கேப்டன் உதய பண்டாரவிடம் போனில் பேசினார். “பாதுகாப்பு அமைச்சிடம் விசாரித்து விட்டோம். தரைப்படைக்கு சொந்தமான அந்த மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர், கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள தளத்தில் இருந்தால், அதை கடற்படை உபயோகிக்க எந்த தடையும் கிடையாது. நீங்கள் உபயோகிக்க விரும்பினால், தாராளமாக உபயோகிக்கலாம்”
வசந்த கரணகொடவின் அனுமதி கிடைத்ததும், மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சரை நோக்கி ஓடிச் சென்ற கேப்டன் உதய பண்டார (அப்போது கேப்டனாக இருந்த இவர், தற்போது பதவி உயர்வு பெற்று, ‘ரியர் அட்மிரல் உதய பண்டார’வாக இன்னமும் இலங்கை கடற்படையில் பணிபுரிகிறார். இலங்கை கடற்படை பயிற்சி மையத்தின் தற்போதைய டைரக்டர் இவர்), ராக்கெட் லோஞ்சரை இயக்கும் ஆட்டிலரி ஆபரேட்டரிடம் பேசினார்.
அடுத்த சில நிமிடங்களில், அந்த மல்டி பேரல் ராக்கெட் லோஞ்சர் (MBRL) சம்பூரை நோக்கி திருப்பப்பட்டது.(தொடரும்)
No comments:
Post a Comment