இலங்கையில் இறுதி யுத்தம் மும்மரமாக நடந்து கொண்டிருந்தபோது, இலங்கை உளவுத்துறை SIS-க்கு, வெளிநாட்டு உளவுத்துறை ஒன்றிடம் இருந்து உளவுத் தகவல் ஒன்று வந்தது. வெளிநாட்டு உளவுத்துறை, வெறும் தகவலை மட்டும் கொடுக்கவில்லை. கொழும்புவில் இருந்த விடுதலைப்புலிகளின் இணைப்பாளர் பயன்படுத்திய போன் இலக்கத்தையும் கொடுத்தது.
இலங்கை உளவுத்துறையினர் இந்த செல் போன் இலக்கத்தை தொடர்பு கொள்ள முயன்றபோது, மறுமுனையில் யாரும் பேசவில்லை.
இது விடுதலைப் புலிகளின் வழமையான பாணி என்பது இலங்கை உளவுத்துறைக்கு தெரியும். கொழும்புவில் ஊடுருவியிருந்த விடுதலைப் புலிகள், தமது இயக்க வேலைகளுக்கு ஒரு பிரத்தியேக போன் வைத்திருப்பார்கள். சொந்த பாவனைக்கு வேறு போன் வைத்திருப்பார்கள். இயக்க பாவனைக்கான போனில், தமக்கு தெரிந்த, பரிச்சயமான இலக்கத்தில் இருந்து அழைப்பு வராவிட்டால், பேச மாட்டார்கள்.
இதனால், வெளிநாட்டு உளவுத்துறையிடம் இருந்து, விடுதலைப்புலி இணைப்பாளரின் செல் போன் இலக்கம் கிடைத்தும், உடனடி பலன் ஏதும் கிட்டவில்லை இலங்கை உளவுத்துறைக்கு.
அந்த இலக்கத்துக்குரிய சிம் கார்ட் யாருடைய பெயரில் எடுக்கப்பட்டது என்று பார்த்தபோது, போலி பெயர், மற்றும் முகவரியில் எடுக்கப்பட்ட சிம் என்று தெரிந்தது. அதிலும் பயனில்லை.
அந்த இலக்கத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட போன் அழைப்புகள் பற்றிய தகவல்களை பெற்று அவற்றை செக் பண்ணினார்கள்.
இன்-கம்மிங், மற்றும் அவுட்-கோயிங் கால்கள், இரண்டும் சேர்த்து மொத்தம் 74 இருந்தன. இதில் 70 கால்கள் வெளிநாடுகளுக்கு போனவை, அல்லது, வெளிநாட்டில் இருந்து வந்தவை. 4 லோக்கல் கால்கள். இந்த 4 கால்களுமே மிஸ்ட்டு கால்கள். அவை இரு லோக்கல் இலக்கங்களை அழைத்த கால்கள்.
ஒரு லோக்கல் இலக்கத்துக்கு ஒரு கால், மற்றொரு இலக்கத்துக்கு மூன்று கால்கள். இரண்டு இலக்கங்களுமே, ஓரிரு எண்கள் மாறுபடும், நெருக்கமான இலக்கங்கள்.
இந்த இரு லோக்கல் இலக்கங்களையும் ஆராய்ந்தது இலங்கை உளவுத்துறை.
இவற்றில் ஒரு இலக்கம், தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட அழைப்பு என தெரிந்தது. அதை விட்டுவிட்டு மற்றைய இலக்கத்தை பார்த்தால், அது ஒரு எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி அலுவலகத்தின் இலக்கம்.
இதுதான், உளவுப் பிரிவுக்கு கிடைத்த முதலாவது தடயம்.
அந்த போன் இலக்கத்துக்குரிய எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சியை உளவுத்துறை கண்காணித்ததில், அதன் உரிமையாளர் வெளிநாடு சென்றிருப்பது தெரிந்தது.
விடுதலைப்புலி இணைப்பாளரின் போனில் இருந்து அழைப்புகள் வந்தபோது, எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர், இலங்கையில் இல்லை என்பதை, இமிகிரேஷன் இலாகா முலம் உறுதி செய்து கொண்டது உளவுத்துறை. அதுதான், விடுதலைப்புலி இணைப்பாளரின் அழைப்பு, மிஸ்ட்டு காலாக போயிருந்தது என்பது புரிந்தது.
எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளரின் பெயரை, இமிகிரேஷன் பிளாக் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டது உளவுத்துறை.
தையடுத்து இந்த நபர் வெளிநாட்டில் இருந்து கொழும்பு வந்து இறங்கியபோது, விமான நிலைய இமிகிரேஷனில் தடுக்கப்பட்டார். இமிகிரேஷன் அதிகாரிகளிடம் இருந்து தகவல் வரவே, விமான நிலையம் சென்று அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது, உளவுத்துறை.
எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளரை, விடுதலைப்புலி இணைப்பாளர் அழைத்த (அவரது சொந்த) இலக்கத்தில் இருந்து, வெளிநாட்டு உளவுத்துறை கொடுத்த செல் போன் இலக்கத்தை அழைக்க வைத்தார்கள், உளவுத்துறையினர்.
இப்போது, மறுமுனையில் போன் எடுக்கப்பட்டது. (காரணம், விடுதலைப்புலி இணைப்பாளருக்கு தெரிந்த, பரிச்சயமான இலக்கம் அது!)
உளவுத்துறையினர் சொல்லிக் கொடுத்தபடியே பேசினார், எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர். தாம் வெளிநாடு சென்றிருந்ததாகவும், இப்போது நாடு திரும்பி, தமது போனில் பதிவாகி உள்ள மிஸ்ட்டு கால்களை தொடர்பு கொள்வதாகவும் சொன்னார் அவர்.
மறுமுனையில் பேசியவர், “என்னை இந்த இலக்கத்தில் அழையுங்கள்” என மற்றொரு போன் இலக்கத்தை கொடுத்தார்.
இவர் விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர்தான் என்பது ஓரளவுக்கு உறுதியானது. அவர் கொடுத்த மற்ற இலக்கத்தை அழைத்தார், எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர். முதலில் பேசிய அதே நபர், மறுமுனையில் பேசினார்.
இந்த அழைப்புகள், இலங்கை உளவுத்துறை SIS-ன் அலுவலகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டன. அந்த அலுவலகத்தின் கன்ட்ரோல் ரூமில், செல் போன்களை ட்ராக் செய்யும் வசதி இருந்தது.
அதில் இருந்து, எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளருடன் பேசியவர் வைத்திருந்த இரு செல்போன்களும், நீர்கொழும்பு (நிகொம்போ) பகுதியில் இருந்து பேசப்படுவதை, உளவுத்துறை தெரிந்து கொண்டது.
“என்ன விஷயம்?” என எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர் கேட்டபோது, மறுமுனையில் பேசியவர், “அவசரமான இரண்டு பேரை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. இது அவசரம்” என்றார்.
கொழும்பு நகரில் தங்கியுள்ள விடுதலைப்புலிகளில் யாராவது மீது, போலீஸ் சி.ஐ.டி, அல்லது உளவுத்துறையினரின் பார்வை பட்டுவிட்டால், உடனே அந்த நபரை எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவது என்பதும், விடுதலைப் புலிகளின் நடைமுறை என்பதை, உளவுத்துறை தெரிந்து வைத்திருந்தது.
“சரி. அனுப்பி வைக்கலாம். அது பற்றி பேச உங்களை எங்கு சந்திக்கலாம்?” என்று கேட்டார், எம்ப்ளாய்மென்ட் ஏஜென்சி உரிமையாளர்.
மறுமுனையில் பேசியவர் (நிஜமாகவே விடுதலைப்புலி இணைப்பாளர்களில் ஒருவர்), நீர்கொழும்புவில் உள்ள இடம் ஒன்றை குறிப்பிட்டு, “இன்று மாலை 5 மணிக்கு அங்கு இருப்பேன். வாருங்கள், பேசலாம்” என்றார். (தொடரும்…)
No comments:
Post a Comment