இலங்கையில் புனர்வாழ்வு முகாம்களில் இணைத்துக் கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் சுமார் 12,000 முன்னாள் போராளிகள் தொடர்பான இந்த ரிப்போர்ட்டின் முதல் பகுதியில் (தவற விட்டிருந்தால் பகுதி ஒன்று பார்க்கவும்), இறுதி யுத்தத்தின் கடைசி மாதங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்கள் பற்றி பார்த்தோம். இந்தப் பகுதியில் இயக்கத்தின் படையணிகளில் (யுத்தம் புரியும் பிரிவுகள்) நீண்ட காலம் இருந்தவர்களின் தற்போதைய நிலைமை பற்றி பார்க்கலாம்.
3) விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நீண்டகால போராளிகளாக இருந்தவர்கள்
இந்தப் பிரிவில் உள்ள கிட்டத்தட்ட அனைவருமே, தாமாகவே விரும்பி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர்கள். 15 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கத்தில் இருந்தவர்கள் பலர் உள்ளார்கள். இவர்களை சாதாரண வாழ்க்கை வாழும் சமூகத்தில் இணைத்து வாழ வைப்பதில் அதிக சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இந்தப் பிரிவில் உள்ளவர்களிடம் நாம் பேசியவரை, அநேகர் தமது செயல்திறன் (ability) மீது நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகிறார்கள். சிவில் சமூகத்தில் உள்ள பல்வேறு மட்ட தொழில்களில் அல்லது வேலைகளில் தம்மால் இணைந்து கொள்ள முடியும் என்பதில் மிகக் குறைந்தளவு நம்பிக்கையே இவர்களில் பலரிடம் காணப்படுகிறது.
காரணம், நீண்ட காலம் சிவில் சமூக செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி, இயக்கத்தின் முழுநேர ராணுவ டைப் வாழ்க்கை வாழ்ந்தவர்களாகவே இவர்கள் உள்ளார்கள். இவர்களது எண்ணிக்கை சில ஆயிரங்கள். அதில் பெரும்பாலானோர் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். உயர் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.
இந்தப் பிரிவில் உள்ளவர்களில், புனர்வாழ்வு முகாம்களில் பயிற்சிகளை முடித்தவர்கள் பலரிடம்கூட சிவில் சமூக வேலைகளில் தம்மால் ஈடுபட முடியும் என்பதில் பலத்த தயக்கம் காணப்படுகிறது.
எமது அசெஸ்மென்ட்டின்படி, ராணுவம், அல்லது போலீஸ் வேலைகளில் இவர்கள் நன்கு பொருந்துவார்கள். மிகச் சுலபமாக பதவியுயர்வுகள் பெற்று முன்னேறக்கூடியவர்கள் உள்ளார்கள். ஆனால், இலங்கை ராணுவம், அல்லது போலீஸ் வேலைகள் கிடைப்பதற்கான சூழ்நிலை இந்தப் பிரிவில் உள்ள ஆயிரக்கணக்கான பேருக்கு இல்லை.
அதற்கான காரணங்களை ஆராய்ந்தால் இந்த ரிப்போர்ட்டை அரசியலுக்குள் கொண்டுபோக வேண்டியிருக்கும். அதை, விட்டுவிடலாம்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நீண்ட காலம் போராளிகளாக இருந்துவிட்டு, இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான நடுத்தர வயதைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு, அவர்களுக்கு பரிச்சயமான ராணுவ டைப் வேலைகள் பெறுவது இலங்கையில் தற்போது சாத்தியமில்லை என்று எடுத்துக் கொண்டு, மற்றைய ஆப்ஷன்களை பார்க்கலாம்.
மற்றைய ஆப்ஷன்களை ஏன் பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறதா? மிகவும் சிம்பிளான பதில், அவர்களது குடும்பங்களை கொண்டு நடத்த வருமானம் தேவை. அதற்கு தொழில்கள், அல்லது வேலைகள் தேவை. இவர்களில் பலருக்கு சிறிய வயதில் குழந்தைகள் உள்ளனர். பல குடும்பங்களில் கணவன், மனைவி இருவரும் முன்னாள் போராளிகளாக உள்ளார்கள். கணவன், அல்லது மனைவியை இழந்து, குழந்தைகளுடன் வாழ்பவர்களும் உள்ளார்கள்.
நீண்டகால போராளிகளாக இருந்த இவர்களுக்கு தொழில்கள் அல்லது வேலைகள் பெறுவதற்கு மற்றைய ஆப்ஷன்களை ஏன் பார்க்க வேண்டும் என்ற கேள்வி இப்போதும் எழுகிறதா? இல்லை அல்லவா.. சரி. மேலே பார்க்கலாம்
அரசின் புனர்வாழ்வு புரோகிராமில் சுய தொழிலுக்கான சில பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அவை, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளன. காரணம், ஆயிரக்கணக்கானவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். அதற்கு உள்ளது மட்டுப்படுத்தப்பட்ட பட்ஜெட் (2009-ம் ஆண்டில் இருந்து இன்றைய தேதிவரை 1316.63 பில்லியன் – மில்லியன் அல்ல, பில்லியன் – ரூபா செலவிடப்பட்டுள்ளது).
முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு புரோகிராம் மையங்கள், மற்றும் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள், மேலதிக பயிற்சிகள் தேவை என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். புனர்வாழ்வு புரோகிராமில் தொழில் பயிற்சி கொடுக்கப்பட்டு வெளியே விடப்பட்டவர்களில் எத்தனை முன்னாள் போராளிகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி அடிப்படையிலான தொழில்களில் ஈடுபடுகிறார்கள் என்ற தரவுகள், புரோகிராம் தலைமையகத்தில் உள்ளன.
நீங்களே பாருங்கள், தரவுகளை:
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திரிகோணமலை, மீதி கிழக்கு மாகாணம், தெற்கு ஆகிய 8 பகுதிகளில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் தொழில் பயிற்சி கொடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களில், பதிவில் உள்ள முன்னாள் போராளிகளின் களின் எண்ணிக்கை – 7839.
கொடுக்கப்பட்ட பயிற்சிகளின் அடிப்படையில் தொழில் புரிபவர்கள்:
டிரைவர்கள்: 308
மெக்கானிக்குகள்: 114
எலக்ட்ரிஷியன்கள்: 141
வெல்டர்கள்: 86
கட்டுமான வேலை: 580
தச்சு வேலை: 344
தையல் வேலை: 171
மீன்பிடி தொடர்பான வேலைகள்: 451
முடி திருத்தல்: 14
கண்ணிவெடி அகற்றல்: 126
இவர்களைவிட, 204 பேருக்கு அரசுத்துறை வேலைகள் கிடைத்துள்ளன. 263 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டியது. 89 பேர் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களாக உள்ளார்கள். 55 பேர் முன்பள்ளி ஆசிரியர்கள். 313 பேர் மதகுருவாக உள்ளார்கள். 135 பேர் கல்வி பயில்கிறார்கள்.
939 முன்னாள் போராளிகள் விவசாயம் செய்கிறார்கள். 1026 பேர் சொந்தத் தொழில், அல்லது வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்கள். புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியே வந்தவர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 12.
இவை இம்மாதம் (அக்டோபர், 2013) 8-ம் தேதி பெறப்பட்ட தரவுகள்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நீண்டகால போராளிகளாக இருந்தவர்கள் பலரால், அவர்களது செயல்திறனுக்கு ஏற்ற வேலைகள் கிடைக்கவில்லை. நாம் தொடர்புகொண்ட பலர், தமிழ் பேசும் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனியார் துறை வேலைகள் பெருமளவில் தமக்கு மறுக்கப்படுகின்றன என்கிறார்கள்.
மற்றைய மாகாணங்கள், அல்லது இலங்கை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சு ஊடாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு (பெரும்பாலும் அரபு நாடுகள், தென் கொரியா) மொழியறிவு பெரிய தடையாக உள்ளது.
வெளி மாகாணங்களில் சென்று தொழில் புரிய, சிலரால் சுமாரான அளவில்தான் சிங்களம் பேச முடிகிறது. இலங்கை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சு ஊடாக வெளிநாடு சென்று தொழில் புரிய, அடிப்படை ஆங்கில அறிவு தேவை. விண்ணப்பித்த முன்னாள் போராளிகளில் பலர், அந்தளவுக்கு ஆங்கில அறிவு கிடையாது என நிராகரிக்கப்பட்டுள்ளார்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நீண்டகால போராளிகளாக இருந்தவர்கள் பலருடன் நாம் பேசியபோது, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது தொடர்பான மனோதத்துவ பிரச்னை ஒன்று அவர்களுக்கு இருப்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது. அந்த விபரங்களை இந்த ரிப்போர்ட்டின் அடுத்த பகுதியில், வெளியிடுகிறோம். (தொடரும்)