விடுதலைப் புலிகள் உறுப்பினர் கோபி நேற்று அதிகாலையில் கொல்லப்பட்ட ஆபரேஷனில் சுமார் 2,000 ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர் என இலங்கை பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
இலங்கை வடக்கு மாகாணம் நெடுங்கேணியில் விடுதலைப் புலிகள் உறுப்பினர் கோபியும் வேறு சிலரும் வீடு ஒன்றில் மறைந்திருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் சிலரே தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்த இடத்தை ராணுவம் சுற்றிவளைத்தபோது, கோபியும் மற்றும் இருவரும் துப்பாக்கியால் சுட்டபடி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அதன்பின், நெடுங்கேணியில் இருந்து யாரும் வெளியேறாதபடி காவல் பலப்படுத்தப்பட்டது. இதனால் கோபியும், அவருடன் இருந்தவர்களும் நெடுங்கேணி பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர்.
அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீட்டும் இலங்கையில் கட்டி எழுப்புவதற்காக கணிசமான பணம், ஹவாலா மூலம் ஐரோப்பாவில் இருந்து அனுப்பப்பட்டது.
இந்தப் பணம், கொழும்புவில் உள்ள வர்த்தகர் ஒருவர் மூலமாக கிளிநொச்சியில் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இலங்கை தமிழ் எம்.பி. ஒருவர் இந்த பண விவகாரத்தை கையாண்டதாகவும் ஒரு தகவல் உண்டு.
அரசியல் காரணங்களுக்காக அவர் கைது செய்யப்படவில்லை (அல்லது, அவரே தகவல் கொடுப்பவராகவும் இருக்கலாம்!)
இந்தப் பணம் வழங்கப்பட்டபோதே, இலங்கை உளவுத்துறை அதை தெரிந்து கொண்டது என்றும் கூறப்படுகிறது.
அதன்பின் சில வாகனங்கள் வாங்கப்பட்டன. சில வீடுகள் இவர்களது பாவனைக்காக ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த விவகாரங்களில் இவர்களுக்கு உதவியவர்களில் சிலர், இலங்கை உளவுப் பிரிவின் ஆட்கள்.
ஆனால், உடனடியாக கோபியும், அவருடன் இருந்தவர்களும் கைது செய்யப்படவில்லை.
மாறாக, சுதந்திரமாக நடமாட விடப்பட்டனர். ஆனால், அவர்கள் தேடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. காரணம், இந்த அறிவிப்பின் பின்னரும் இவர்களுக்கு யார் யாரெல்லாம் உதவுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வதற்காக!
அந்த பின்னணியில் சுமார் 65 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர், முன்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, சரணடைந்து, தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள்.
இவர்கள் கைதாக தொடங்கியதும், கோபியும் மற்றவர்களும், என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டார்கள். உடனே தலைமறைவாகி விட்டனர். ஐரோப்பாவில் இருந்து வந்த பணத்தில் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த வீடுகள் எதையும் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டனர்.
அதுவரை இவர்களை ட்ராக் பண்ணி வந்த உளவுத்துறையின் கண்காணிப்பில் இருந்து இவர்கள் மறைந்து விட்டார்கள்.
அதன்பின், பதவியா என்ற இடத்திலுள்ள காட்டுப் பகுதியில் சிலரது நடமாட்டம் இருப்பதாக அங்கு விறகு வெட்டி எடுத்துவரும் சிலரிடம் இருந்து தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 10-ம் தேதி) அந்த காட்டுப்பகுதியை ராணுவம் சோதனையிட்டபோது, 4 பேக்-பாக்குகள் கிடைத்தன. அவற்றுக்குள், உலர் உணவுப் பொருட்கள், உடைகள், மற்றும் சில மருந்துகள் இருந்தன.
அங்கிருந்தும் கோபியும், மற்றவர்களும் தப்பி சென்றுவிட்டிருந்தனர்.
இந்தப் பின்னணியில்தான், அதே நாள் (வியாழக்கிழமை) இரவு கோபியும் மற்ற இருவரும் நெடுங்கேணியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியுள்ள தகவல் கிடைத்தது.
அந்த வீட்டை சுற்றிவளைத்தபோதும், இவர்கள் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
ஆனால், சிறிய இடமான நெடுங்கேணியில் இவர்கள் எங்கே போயிருப்பார்கள் என்பதை கண்டுபிடிப்பது பெரிய காரியமல்ல. இவர்களது மறைவிடத்தை கண்டுபிடித்து, சுமார் 2,000 ராணுவத்தினரை அனுப்பி, சுட்டுக் கொன்றனர்.
கொல்லப்பட்டவர்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் கோபி, வான்புலிகள் விமானி தேவியன் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்றாவது நபர், அப்பன் என அழைக்கப்படும் நவரத்தினம் நவநீதனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment