Tuesday, February 4, 2014

மாவீரர்களை மதிப்போம்!அவர்கள் பெயரில் மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்போம்!!!


நினைவு நாட்கள் என்பது சமூக மேற்கட்டுமானங்களில் ஒன்று. அனைத்து தமிழீழ விடுதலை இயக்கங்களுமே போராட்டங்களில் உயிர்நீத்த போராளிகளுக்கான அஞ்சலிகளை, நினைவுகளை வெகு சிறப்பாகவே கொண்டாடி வந்தனர். இதன்மூலம் போராட்டத்தில் இணைகின்ற ஒவ்வொரு போராளியும் மரணத்தின் பின்னரும் தங்களது நினைவுகள் தொடரும் என்பதையும் தங்களது சமூக மதிப்பையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. அதனால் அவர்கள் தங்களது உயிர்கள் மிக உன்னதமான நோக்கத்திற்காக இழக்கப்படுவதை பெருமையாகவும் கருதினர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது உயிரிழப்பு உரும்பராயைச் சேர்ந்த பொன் சிவகுமாரனின் உயிரிழப்பாகவே கொள்ளப்படுகிறது. யூன் 05 1974 பொன் சிவகுமாரன் சயனைட் (நஞ்சு) உட்கொண்டு உயிரிழந்தார். இதிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட உயிரிழந்த போராளிகளின் பட்டியல் மிக நிளமானது. ஆனால் துரதிஸ்டவசமாக இந்த விடுதலை இயக்கங்களிடமே தங்கள் அமைப்பில் இருந்து கொல்லப்பட்ட போராளிகளின் விபரங்கள் முழுமையாக இருக்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே தங்கள் இயக்கத்தில் இருந்து கொல்லப்பட்ட போராளிகளின் முழுமையான பட்டியலை வைத்திருந்தனர். அதற்கான நிர்வாகக் கட்டமைப்பையும் அவர்கள் கொண்டிருந்ததால் ஆவணப்படுத்தவும் அவர்களால் முடிந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு உன்னத நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்ட போதும் அது ஆரம்பிக்கப்பட்ட வேகத்திலேயே தடம்புரண்டது. போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள், உன்னத நோக்கத்திற்காக தங்கள் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்தனர். ஆனால் போராட்டத்தை முன்னெடுத்த தலைமைகள், பெரும்பாலும் தமிழ் மக்களின் அதிகார மையத்தை, தங்கள் கைகளில் வைத்துக்கொள்வதற்கு மட்டுமே அதனைப் பயன்படுத்தினர். இலங்கை அரசாங்கத்துடனான அதிகாரத்திற்கான போட்டியாக மட்டுமே இப்போராட்டம் அமைந்தது.

ஒவ்வொரு இயக்கத்தில் இருந்தும் உன்னத நோக்கங்களுக்காகச் சென்றவர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிரியாகக் கருதப்பட்ட, இலங்கை அரச படைகளினால் கொல்லப்படவில்லை. கணிசமானவர்கள் தங்கள் இயக்கங்களில் இடம்பெற்ற உட்படுகொலைகளிலும், இயக்கங்களிடையே இடம்பெற்ற மோதல்களிலும் கொல்லப்பட்டனர். அதனை விட இவ்வியக்கங்கள் தமிழ் மக்கள் மீதும், சகோதர இனங்களான முஸ்லீம், சிங்கள மக்கள் மீதும் படுகொலைத் தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர். அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுகூரல் என்பது போராளிகளின் நினைவுகூரலாக மட்டுமல்லாமல் இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த அனைவரினதும் நினைவாகக் கொல்லப்பட வேண்டும்.

அல்பிரட் துரையப்பாவின் கொலையில் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் அவரைப் படுகொலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படுகொலையில் முடிவடைந்தது. இவ்விரு கொலைகளுக்கும் இடையே நடந்து முடிந்த உயிரிழப்புகள், அவலங்கள் இவற்றின் சாட்சியாக நாம் தற்போது வாழ்ந்துகொண்டு உள்ளோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது பாதையில் இருந்து தடம்புரண்டதால் அதற்காக உயிர்நீத்த போராளிகள், அந்தப் போராட்டத்திற்காகச் சென்றவர்கள், வேறு வேறு நோக்கங்களுக்காக உயிர் பறிக்கப்பட்ட போராளிகள் என, இவர்களது தியாகங்களைச் கொச்சைப்படுத்திவிட முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகச் சென்ற போராளிகள், அவர்கள் எந்த விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நினைவுகூரப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உயிரிழந்த போராளிகளை கௌரவிக்கின்ற ஒரு கலாச்சாரத்தை தங்கள் அமைப்பிற்குள் மிகத் திட்டவட்டமாக வளர்த்தெடுத்தனர். ஏனைய அமைப்புகளும் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்ட போதும் அவை தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஸ்தாபனமயப்பட்டதாக அமையவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளை மாவீரர்களாகக் கௌரவிக்கின்ற முறைமையானது தொடர்ச்சியாக போராளிகளை உள்வாங்கவும் கரும்புலிகளை உருவாக்கவும் உதவியது.

1982 நவம்பர் 27ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி லெப்.சங்கர் உயிரிழந்ததன் ஞாபகார்த்தமாக உயிரிழந்த (விதைக்கப்பட்ட) விடுதலைப் புலிகள் அனைவரதும் தினமாக மாவீரர் தினம் நினைவு கூரப்படுகிறது. இது விடுதலைப் புலிகளின் நாட்காட்டியில் ஒரு முக்கிய தினமாகும். உத்தியோகபூர்வமாக பிரபாவின் வருடாந்த அறிக்கையும் இத்தினத்தில் வெளியிடப்படுவதால், இந்நாள் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மிகமுக்கிய தினமாக அமைந்தது.

1982ல் முதல் மாவீரன் உயிரிழந்த போதும் 1989 முதலேயே மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு கலாச்சார வடிவமாக்கப்பட்டது. ஆனால் 1992 முதலே பிரபாவின் மாவீரர் தின உரைகள் பதிவில் உள்ளது.

1982 நவம்பர் முதல் 2008 ஓகஸ்ட் வரை விடுதலைப் புலிகள் அமைப்பில் மட்டும் உயிரிழந்த போராளிகள்:
1982 – 1, 1983 – 5, 1984 – 36, 1985 – 123, 1986 – 258, 1987 – 451, 1988 -363, 1989- 372, 1990 -961, 1991- 1614,
1992 – 788, 1993 – 925, 1994 – 375, 1995 – 1505, 1996 – 1376, 1997 – 2106, 1998 – 1798, 1999 – 1545, 2000 – 1980, 2001 – 759, 2002 – 38, 2003 – 72, 2004 – 80, 2005 – 56, 2006 – 1002, 2007 – 954, 2008  ஒக்ரோபர் 31 வரை 1974 போராளிகள் உயிரிழந்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் போரளிகளது உயிரிழப்புகளை 2008 ஒக்ரோபர் 31 வரை 22 114 உயிரிழந்த போராளிகளை முறையாக ஆவனப்படுத்தி உள்ளனர். அதற்குப் பின் மே 18 2009 வரையான 7 மாதங்களிள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்காண போராளிகள் தலைவர்கள் – தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உட்பட பெரும்பாலான போராளிகளை அவர்களால் ஆவணப்படுத்த முடியவில்லை. அவர்களது விபரங்களும் சேர்க்கப்படும் பட்சத்தில், முதல் போராளி லெப் சங்கர் முதல் 25,000க்கும் அதிகமான போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மட்டும் உயிரிழந்து இருப்பர். இப்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உட்கட்சிப் படுகொலைகளில் கொல்லப்பட்ட மாத்தையா மற்றும் நூற்றுக்கணக்கான போராளிகள் இடம்பெற்றிருக்கவில்லை. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட போராளிகள் ஆவணப்படுத்தப்படாமைக்கு அவர்கள் அமைப்பில் இருந்ததை உறுதிப்படுத்த முடியாமையும், உயிரிழப்பை உறுதிப்டுத்த முடியாததும் முக்கிய காரணமாகும். ஆனால் தலைமைகளது உயிரிழப்பைப் பொறுத்தவரை, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பை தொடர்ந்தும் குலையாமல் வைத்திருக்க அவர்களது உயிரிழப்பை மறைத்து ஒரு மாயவலையே பின்னப்பட்டு உள்ளது.

மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் என்பதில் யாரும் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருக்க முடியாது. தலைமைகள் தவறான அரசியலை முன்னெடுத்ததற்காக, உன்னத லட்சிம் ஒன்றிற்காகப் போராடுவதாக எண்ணி, தம் இன்னுயிரை ஈர்ந்தவர்களை உதாசீனம் செய்வது மிகத் தவறு. ஆனால் அவர்களை எவ்வாறு நினைவுகூருகிறோம் என்பது மிகவும் முக்கியம். பல இலட்சக்கணக்கான செலவில் ஒரு பணச்சடங்காக மாவீரர் தினம் ஆக்கப்படுவது எந்த நோக்கத்திற்காக என்ற கேள்வி தவிர்க்க முடியாது. லண்டனைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு மாவீரர் தினக் கணக்கு வழக்குகள் சில ஆயிரம் பவுண்கள் நட்டமாகக் காட்டப்பட்டு முடிக்கப்பட்டதாக அதனுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் தெரிவித்தார். இவ்வாண்டும் 300 000 பவுண்வரை செலவிடப்படுகின்றது.

அதேசமயம் மே 18 2009ல் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் பல நூறு ஆயிரம் போராளிகள் மரணத்தின் விளிம்புவரை சென்று தப்பியுள்ளனர். இவர்களில் பலநூறு ஆயிரம் பேர்கள் அங்கவீனர்களாக காயம் பட்டவர்களாக உறவுகளை இழந்தவர்களாக உள்ளனர். இவர்களைப் போராட்ட களத்திற்கு அனுப்பியதில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. இன்று இவர்கள் அனாதரவாக யாருக்கு எதிராகப் போராடினார்களோ, அவர்களின் பாராமரிப்பிலும், அவர்களின் உதவியிலுமே முழுமையாகத் தங்கி இருக்க வேண்டிய நிலையுள்ளது.

இவ்வாறான போராளிகளை இந்தப் போராட்டத்திற்குள் தள்ளிய, மேற்குநாடுகளில் வாழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலருக்கு மே 18 2009ல் ‘ஜக் பொட்’ – லொட்ரி விழ்ந்தது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் 300 மில்லியன் டொலர்கள் வரை பெறுமதியான ஆண்டு வருமானமும் 5 பில்லியன் வரை பெறுமதியான சொத்துக்களும் இரவோடு இரவாக காணாமல் போய்விட்டது. லொட்ரியில் வென்றவர்கள் தங்கள் தங்கள் தொகையைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இதில் கோட்டை விட்ட பலரும் உள்ளனர். ‘தலைவர்’ கேட்டுக் கொண்டதற்காக, திருப்பித் தருவார்கள் என்ற நம்பிக்கையில், தங்கள் வீடுகளை வைத்து கடன்பெற்று (லோன் அல்லது ரீமோட்கேஜ்) வசூல் ராஜாக்களிடம் பணம்கொடுத்த பலருக்கு நாமம் போடப்பட்டு உள்ளது. மே 18க்கு சில தினங்களுக்கு முன்னாகக் கூட பல ஆயிரம் பவுண்களை, இந்த வசூல் ராஜாக்களிடம் வழங்கியவர்கள் உள்ளனர்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறிக்கொண்ட பலரை இப்போது காணமுடிவதில்லை என மேற்குலகில் வாழ்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அல்லாமல் நேர்மையாக நடந்தவர்கள் லண்டனில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கௌரவிக்கப்பட்டும் உள்ளனர்.

இது இப்படியிருக்க மீண்டும் வசூல் ராஜாக்கள் நிதி சேகரிப்பிற்குப் புறப்பட்டு உள்ளனர். தற்போது மாவீரர் தினத்துக்கான நிதி சேகரிப்பு. பிரித்தானியாவில் இயங்கும் தொலைபேசி அட்டை நிறுவனம் ஒன்று மிகப்பெரும் தொகைப் பணம் வழங்கியதாகத் தெரியவருகிறது. அதனைவிட தனிப்பட்ட வர்த்தகர்களிடமும் பல ஆயிரங்கள் வசூலிக்கப்படுகிறது. இதற்குமேல் கலந்துகொள்பவர்கள் 50 பவுண் ரிக்கற் மற்றும் பூ விற்பனை, கொடி விறபனை என்று எல்லா விற்பனையுடன் தமிழீழமும் 5 பவுணுக்கு விற்கப்படும். இதற்கான கணக்கு வழக்குகள் சில மாதங்களுக்குப் பின் சில ஆயிரம் பவுண்கள் நட்டம் என்றும் காட்டப்படும். இதுவே வழமையான மாவீரர் தினக் கொண்டாட்டம்.

ஒருநாள் கொண்டாட்டத்திற்கு இவ்வளவு செலவு செய்யும் இவர்கள், உயிரிழந்த மாவீரர்களுக்கு ஒரு உத்தியோகபூர்வ இணையத்தை உருவாக்கி அவர்களது விபரங்களை அங்கு முழுமையாகப் பதிவிடவில்லை. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாகக் குழப்பங்கள் இருந்த போதும் 2008 ஓக்ரோபர் 31 வரை ஆவணப்படுத்தப்பட்ட விபரங்களைக் கூடப் பதிவிடவில்லை.

மாவீரர் தின நிகழ்வை மிக எளிமையாக செலவுகள் எதுவும் இன்றி கொண்டாட முடியும். லண்டன் நகரில் உள்ள மிகப்பெரும் பூங்காவான ஹைட்பார்க் கோனருக்கு உறவுகளை மாவீரர்களுடைய படங்களுடனும் மெழுகுவர்த்தியுடன் வந்து நினைவுகூரச் செய்ய முடியும். திறந்தவெளிப் பூங்காவில் இதனைச் செய்யலாம். ஆனால் அதனைவிடுத்து லண்டனில் எக்செல் போன்ற மண்டபங்களில் பணத்தை வாரி இறைத்து எதற்கு இந்த ஆடம்பரம்? இந்த ஆடம்பரத்திற்கு வழங்கும் செலவுகளை பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும் செலவிட ஏன் இவர்கள் முன்வரவில்லை? பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களையும் பாதிக்கப்பட்ட போராளிகளையும் நடுத்தெருவிற்குக் கொண்டுவந்து விட்டு பிரான்ஸ், லண்டன், ரொறன்ரோ, சிட்னி என்று மாவீரர் தினத்தைக் கொண்டாடுவது அந்த மாவீரர்களை அவமதிப்பதற்குச் சமன்.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்பது இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் என்றும் அவ்வாறு மறுவாழ்வு அளிக்கக் கோருவது இலங்கை அரசின் உளவியல் யுத்தம் என்றும் கண்டுபிடிக்கின்ற கீபோட் மார்க்ஸிஸ்டுக்கள் அல்லது மார்க்ஸியப் புலிகள் சில தற்போது உறுமிக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் உலாவருகின்றன. இவர்கள் இன்னமும் அவலத்தை வைத்து அரசியல் செய்கின்ற புலி அரசியலையே தொடர முற்படுகின்றனர். மக்கள் அடிப்படைத் தேவைகளுடன் இருந்தால் அவர்கள் போராட வரமாட்டார்கள், மேற்கு நாடுகளில் இருந்து கொண்டு தொடர்ந்தும் கோஸம் எழுப்பிக்கொண்டிருக்க முடியாது, தங்கள் அரசியல் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது போன்ற காரணங்களுக்காக இவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இன்றி அரசியல் செய்ய முற்படுகின்றனர்.

பிரித்தானியாவில் மட்டும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு 300 000 பவுண்கள் செலவிடப்பட உள்ளது. இவ்வாறு மேற்கு நாடுகளின் தலைநகரங்கள் எல்லாம் இந்நிகழ்வு பெரும் நிதிச் செலவில் நடாத்தப்பட உள்ளது. ஆனால் தாயகத்திலோ போராடச் சென்றவர்கள் அடிப்படை வசதிகளின்றி தங்கள் கால்களை இழந்து, கைகளை இழந்து தங்களுக்கான செயற்கை உறுப்புகளுக்குக் கூட வசதியின்றி வாழ்கின்றனர். மாவீரர்களின் பெயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்பதன் மூலம் மட்டுமே அம்மாவீரர்களை மதிக்க முடியும்.

தாயகத்தில் அரச படைகள் மாவீரர் துயிலும் இல்லங்களின் கல்லறைகளை பெயர்த்தெடுத்தனர். ஆனால் புலம்பெயர் உறவுகளோ மே 18 2009 வரை தொப்புள்கொடி உறவென்றனர் ஆனால் இப்போது அந்த உறவுகளின் உணர்வுகளையும் பெயர்த்தெறிகின்றனர்.

No comments:

Post a Comment