Wednesday, February 5, 2014

சரணடையும்போது இருந்த மனநிலையைச் சொல்ல முடியாது..!


இது ஒரு வேறு பட்ட நேர்காணல். கனவுகள் கலைந்துபோன நிலைமையில் ஒரு போராளி –

சரணடைந்தவராகி, கைதியாகி, மன்னிப்பு வழங்கப்பட்டவராகி, புனர்வாழ்வுக்குட்பட்டவராகி (?), மறுவாழ்வு நிலைக்குள்ளானவராகி (?) இப்போது பொதுவாழ்வில் ஈடுபடும் ஒரு நிலைக்குள்ளான சந்தர்ப்பத்தில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்படுகிறது.

அதிகம் பேச விரும்பாத – ஏன் பேசவே விரும்பாத – பேசி என்னதான் பயன் என்ற நிலையில் – இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.

குறிப்பாக, ‘விருப்பமில்லாத நிலையிலும் நான் இங்கே பேசுவதன் மூலமாக சில விசயங்களை வெளியே தெளிவு படுத்த முடியும். உள்ள நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக பேசுகிறேன்’ என்று சொல்லும் ஒரு போராளியோடு உரையாடுகிறோம்.

இந்தப் பதிவு மிகவும் உணர்ச்சி பூர்வமான நிலையில் பதிவு செய்யப்பட்டது.

எதிலிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. என்றாலும் நாம் பேச வேணும். நீங்கள் இப்போது எப்படி எல்லாவற்றையும் உணர்கிறீங்கள். அதாவது, கடந்த காலம் நிகழ்காலம் குறித்து….

ம். என்னத்தைச் சொல்ல. எல்லாம் முடிஞ்சுது எண்டுதான் சொல்ல வேணும் போல இருக்கு. ஆனால் அடுத்த கணமே ஒண்டும் முடியேல்லப் போலவும் இருக்கு. எல்லாமே குழப்பந்தான்.

இப்ப பிரச்சினைகள் கூடியிருக்கு. நாங்கள் எதுவும் செய்ய முடியாத ஒரு நிலைமை உருவாகியிருக்கு. ஆனால் இப்படியே காலம் உறைஞ்சு போயிருக்காது. நாளைக்கு இப்ப இருக்கிற நிலைமை இருக்காது. இன்னொரு மாதிரியான நிலைமை வரும். அது முந்தியைப் போலத்தான் இருக்கும் எண்டில்லை.
இப்ப இருக்கிற இந்த நிலைமையை யாராவது நினைச்சிருப்பமா? அப்பிடித்தான் நாளைக்கு இன்னொரு நிலைமை வரும் எண்டு நம்பிறன் வரலாறு எப்பவும் தேங்குவதில்லை. அது பின்னோக்கியும் பாய்வதில்லை எண்டு சொல்லுவார்கள்.

இது எனக்கு மட்டும் தெரியிற ஒரு பிரச்சினையெண்டு நான் நினைக்கேல்ல. அல்லது எங்களைப் போல ஒரு நிலைமையில இருக்கிற ஆக்களின்ர பிச்சினை எண்டும் நான் பாக்கேல்ல.

பொதுவாகச் சொல்லிறதெண்டால் என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல எண்டுதான் எங்களின்ரை நிலைமையைச் சொல்ல வேணும். கண்ணைக் கட்டிக் காட்டில விட்டது எண்டு சொல்லுவினம். நாங்கள் காட்டில கைவிடப்படேல்லை. முள்ளுக்கு மேல நெருப்பைப் பரவி விட்டு, அதுக்கு மேல நிக்கச் சொன்னதைப் போல இப்ப இருக்கிறம்.

இதில கடந்த காலம் – நிகழ்காலம் எண்டு என்ன இருக்கு? ஆனா ஒண்டு மட்டும் உண்மை, நாங்கள் எங்களால முடிஞ்ச அளவுக்கு விசுவாசமாகச் செயற்பட்டிருக்கிறம். அதாவது போராட்டத்தில தவறுகள் பிழைகள் இருக்கலாம். போராளிகளிலயும் அந்தப் பலவீனங்கள் இருக்கலாம். அப்பிடி ஏதோ இருந்துதானே நாங்கள் தோற்றுப் போயிருக்கிறம்.

இல்லையெண்டால் எப்பிடித் தோற்க முடியும். அதுவும் உயிரையே ஆயுதமாக்கிய ஒரு அமைப்புத் தோற்கிறது எண்டால் என்ன சாதாரண சங்கதியா? ஆகவே எங்கோ குறைபாடு இருக்கு.
நான் இப்ப அதைப் பற்றியெல்லாம் கதைக்க விரும்பேல்ல. அதைக் கதைக்கிறதால எனக்குத்தான் இப்ப பிரச்சினை. ஆனால், இப்ப எங்கட போராட்டத்தின்ர சரி பிழைகளைக் காணக்கூடியதாக இருக்கு. இதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேணும்.

என்னைப் பொறுத்தவரை எல்லாம் ஒரு படிப்பினைதான். ஆனால், மனிசன் எவ்வளவைப் படிச்சாலும் திருந்தவே மாட்டான்.

நாங்கள் பட்ட கஸ்ரங்களுக்கான பயன் கிடைக்கயில்லை எண்டதும் சனங்களின்ரை சாவு அநியாயமாகப் போயிட்டுது எண்டுந்தான் எனக்குக் கவலை. மற்றப்படி நான் என்னைப் பற்றிக் கவலைப்படேல்ல. எவ்வளவோ எதிர்ப்புகளுக்கு மத்தியிலயும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலயும் வளர்த்தெடுத்த அமைப்பின்ர தோல்வியைத் தாங்க முடியாது.

என்னைப் பொறுத்தவரை வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில இருந்த வேறுபாட்டைச் சரியாகக் கணக்கெடுக்கத் தவறியிட்டம் எண்டுதான் சொல்லுவன்.

அப்படியென்றால், அதை விளக்க முடியுமா? வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் இருந்த வேறுபாட்டை எப்படிப் புரிந்திருக்க வேணும்?

தோல்வியில் கிடைக்கிற அனுபவங்கள் வேற. வெற்றியில கிடைக்கிற அனுபவங்கள் வேற. போராட்டத்தில ஒரு போதும் தோல்வி எண்ட சொல்லையே பாவிக்கக்கூடாது. அதைப் பின்னடைவு எண்டுதான் சொல்ல வேணும். அப்ப, பின்னடைவில நாங்கள் ஒரு நெருக்கடியைச் சந்திப்பம். அந்த நெருக்கடியில இருந்து மீளுறதுக்காக எல்லாரும் ஒண்டாக நிற்பினம்.

ஆனால வெற்றியில ஆளாளுக்குப் போட்டி வந்திடும். பங்கைப் பகிர்வதில், சுகங்களையும் வசதிகளையும் அனுபவிக்கிறதில போட்டிகள் வரும். இந்தப் போட்டியில இடைவெளிகளும் பகைமையும் தானாகவே வரும்.
இதை என்ரை கண்ணால பார்த்திருக்கிறன்.

இது உள்ளுக்குள்ளை எண்டால், வெளியில வெற்றியின் போது வாற வாய்ப்புகளையும் தொடர்புகளையும் சந்தர்ப்பங்களையும் நாங்கள் சரிவரப்பயன்படுத்தியிருக்கலாம். இதுக்கு ஒரு நிதானம் இருந்திருக்க வேணும். ஆனால், இதெல்லாம் ஏன் இடையில பிழைச்சு கெட்டுப் போனதெண்டு தெரியேல்ல.

இறுப்போர் நடந்த போது என்ன செய்தீர்கள்? நீங்கள் இறுதி வரையிலும் முள்ளிவாய்க்காலில் இருந்தவர் என்ற வகையில் அந்த நாட்களை அந்தக் கணங்களை எப்படி உணர்ந்தீர்கள்?

இதைப் பற்றி நான் கதைக்க விரும்பேல்ல. ஏனெண்டால் இதைப் பற்றி நாங்கள் சரணடைந்த பிறகு எங்களை விசாரித்த படைத்தரப்பிடம் சொல்லியாச்சு. இனி நான் வேற இடங்களில கதைச்சு வேற பிரச்சினைகளை உருவாக்க விரும்பேல்ல. பொதுவாகச் சொல்லிறதெண்டால் இதைப் பற்றிக் கதைக்காமல் விடுறதுதான் நல்லது.

ஆனால் எங்கட தலைவிதியைப் பாத்தீங்களா? நாங்கள் ஆரிட்டை எதையெல்லாம் சொல்லக் கூடாது எண்டு நினைத்தமோ அதையெல்லாம் அவங்களிட்ட சொல்ல வேண்டிய நிலையொண்டு வந்ததை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆனால் அதை ஏற்றுக் கொண்டுதான் வாழுறன்.

கடைசி நாட்களில் சாவதா சரணடைவதா எண்ட போராட்டம் எனக்கு வந்தது. என்னை மாதிரித்தான் பல ஆயிரக்கணக்கான போராளிகள் அந்த வெட்டையில கொதிக்கிற மணற் குவியல்களுக்கு மேல நிண்டார்கள்.
ஒருவராலயும் ஒரு முடிவையும் எடுக்கேலாமல் இருந்திது. பிறகு நடக்கிறது நடக்கட்டும் எண்டு சனங்களோட ஆமியிட்ட போனதுதான். ஆனால், அப்பிடிப் போகேக்க இருந்த மன நிலையைச் சொல்லேலாது. அது பெரிய கொடுமை.

பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு, என்ன செய்யிறது, என்ன நடக்கப் போகுது எண்டு தெரியாமல் வெறுங்கையோட எதிர்த்தரப்பிட்டப் போறதை எப்பிடிச் சொல்ல முடியும்?

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் எதிரியை அழிப்பது அல்லது எதிரியிடம் சிக்காமல் உயிரை மாய்த்துக் கொள்வது என்ற மரபைக் கொண்டவர்கள். சயனைட் என்ற ஒரு விசயமே புலிகளினால்தான் தமிழ்ச் சூழலில் பிரபலமாக்கப்பட்டது. புலிகளின் சிறப்பு அடையாளங்களில் சயனைட் ஒன்று. இந்த நிலையில் நீங்கள் இறுதிக் கட்டத்தில் எதிர்த்தரப்பின் கைகளில் சிக்காமல் சரணடையும் முடிவை எப்படி எடுத்தீர்கள்?

இது தனியே நான் எடுத்த முடிவோ, எனக்கு மட்டும் ஏற்பட்ட ஒரு பிரச்சினையோ இல்லை. அப்படி எண்டால்தான் நீங்கள் என்னை இப்பிடிக் கேட்க முடியும். இது பல ஆயிரக்கணக்கானவர்கள் சந்திக்க வேண்டியிருந்த பிரச்சினை. அதிலும் முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை.
என்னைப் பொறுத்தவரை இந்த நிலைமை யாரும் எதிர்பார்த்திருக்காத ஒரு பிரச்சினை எண்டுதான் சொல்லுவன். எதிரிகள் கூட இப்படியொரு நிலையில் புலிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
அதைப்போலவே இந்தப் பிரச்சினையைப் பற்றிக் கதைப்பதும் ஒரு எதிர்பாராத நிலைமைதான்.
நாங்கள் எதிர்பாராமல் சரணடைய வேண்டி வந்ததைப் போலவே சயனைற் கடிக்காமல் விட்டதும் ஒரு எதிர்பாராத விசயந்தான்.

ஆனால் இதே இடத்தில நான் ஒரு விசயத்தையும் சொல்ல வேணும். நாங்கள் ஏன் சயனைட் குடித்திருக்க வேணும் எண்டு எதிர்பார்க்கிறியள்? அல்லது அங்கே சயனைற் கடிக்காமல் விட்டதைத் தவறாகப் பாக்கிறீங்களா?

இயக்கத்தையும் தலைமைப்பீடத்தையும் இயக்கத்தின்ர ஆயுதங்களையும் பாதுகாக்க வேணும் எதிரியிடம் இரகசியங்கள் எதுவும் போய்ச் சேரக்கூடாது. ஆயுதங்களை எதிரி எடுக்கக் கூடாது எண்டதுக்காகத்தானே சயனைட் குடிக்க வேணும்? அப்படித்தானே இயக்கத்தின்ர விதியும் எதிர்பார்ப்பும் இருந்தன.

ஆனால், அந்த இயக்கமும் ஆயுதங்களும் தலைமையும் எதிரியிடம் சிக்கிய பிறகு எல்லாமே முடிஞ்சிட்டுது எண்ட பிறகு நாங்கள் சயனைட் கடிக்கிறதால என்ன பிரயோசனம்?

ஒருக்கா நீங்கள் அந்தக் காட்சியை நினைச்சுப் பாருங்கள். இறுதிப் போரில சரணடைந்த 13000 ஆயிரம் பேரும் சயனைற்றைக் கடித்துச் செத்திருந்தால் அந்தப் பிரதேசம் முழுக்கவும் பிணக்காடாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அதால ஆருக்குத்தான் என்ன லாபம். அப்பவும் எதிர்த்தரப்புத்தான் சந்தோசப்பட்டிருக்கும்.

ஆனால், பிறகு நான் பல தடவை அங்க அப்ப சயனைட்டைக் கடிக்காமல் விட்டதுக்காகக் கவலைப்பட்டிருக்கிறன்.

இருக்கும் வரையும் சரியாகவும் விசுவாசமாகவும் இயங்கினம். எல்லாம் கையை மீறிப் போனாப் பிறகு வீம்புக்கு செத்து மடியிறதால என்ன பலன்? நீங்கள் சொல்கிறபடி பார்த்தால், போர் முடியும் போது மிஞ்சியிருந்த அத்தனை போராளிகளும் செத்திருந்தாலும் என்ன நடந்திருக்கும்? சாவுதான். பிணக்குவியலாக அப்பிடியே செத்துத்தானிருப்பம்.

ஒரு சாவின் மூலம் மக்களுக்கும் தாய் மண்ணுக்கும் ஏதாவது கிடைக்கும் என்றால், நானோ அல்லது மற்றப் போராளிகளுமோ செத்திருக்கலாம். அது வீரச்சாவாகவும் கருதப்பட்டிருக்கும்.
ஆனால், அதுக்கெல்லாம் சந்தர்ப்பம் இல்லாமலே நாங்கள் சரணடைய வேண்டி வந்தது. பிறகென்ன, கைதியாக்கினார்கள். கைதி எண்டால் அவர்களுடைய கட்டுப்பாட்டில், அவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதைச் செய்யும் நிலைதான் இருந்தது. இப்பவும் ஏறக்குறைய அதே நிலைமைதான்.

இப்ப வெளியாலே விடப்பட்டிருக்கிறம். இது பேரளவிலதான். ஆனால் சுயாதீனமாக நாங்கள் வாழ முடியேல்ல. நாங்கள் முயன்றாலும் சூழல் அதுக்கு முழுக்க இடந்தராது. சிலவேளை சிலபேருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினை மாதிரித் தெரியாமலிருக்கலாம். அவையள் எந்தச் சூழலுக்கையும் வாழக்கூடியமாதிரி தங்களை மாத்தியும் கொள்ளலாம்.

ஆனால் என்னால அங்காலயும் போக முடியவில்லை. இங்காலையும் போக முடியேல்ல. ஏதோ மனதுக்குள்ள கிடந்து உருட்டிக் கொண்டிருக்கு. நாங்கள் எங்கேயோ பிழைவிட்டிருக்கிறம். கனக்கப் பிழையள். அதுதான் இப்ப எனக்குப் பிரச்சினை.

நாங்கள் பிடிபட்டுக் காம்பில இருக்கேக்க இதை உணர்ந்திருக்கிறன். பலரிட்டயும் இந்த மாதிரியான ஒரு, ஒரு நிலைமையைப் பாத்திருக்கிறன். பொதுவாகக் கனபேர் கவலைப்பட்டார்கள்.

நாங்கள் கன இடத்தில பிழை விட்டிட்டம் எண்டதை வாய்விட்டே சொன்னார்கள். ஆனால் இனிப் பழைய இடத்துக்குத் திரும்பிப் போக முடியாது. ஆனால் நாங்கள் இப்பிடியே இருக்கவும் ஏலாது. இதைத்தான் நான் திரும்ப திரும்பச் சொல்லுவன்.

சரணடைந்தபோதே எங்களுக்குத் தெரியும், நாங்கள் விரும்பாத ஒரு இடத்துக்குத்தான் கொண்டு போகப் போறாங்கள் எண்டு நினைச்சம். அப்பிடியே நடந்தது, போராட்டத்தின்ர தோல்வியே நாங்கள் விரும்பாத ஒரு இடந்தானே. அதாவது, அப்படியான நிலைமை எண்டது நாங்கள் விரும்பாத நாங்கள் எதிர்பார்க்காத, நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைதானே.

பிறகு இடைக்கிடை விசாரணைகள். தேவையில்லாத சந்தேகங்கள். எப்பவும் என்னை யாரோ கண்காணிக்கிற மாதிரி ஒரு உணர்வு. இதுதான் அடுத்த பெரிய பிரச்சினை.

இப்பிடியே எல்லாப் பக்கத்தாலையும் வதைபடுகிறதை விட சாகலாம். அல்லது இந்த நாட்டை விட்டே எங்காவது தொலைஞ்சு போகலாம்.

பழைய இடங்களையும் தெரிஞ்ச சனங்களையும் பாக்க எப்பிடியிருக்கும் எண்டு சொல்லுங்கோ பார்ப்பம்.

சரி, என்ன மாதிரியான பிழைகள் நடந்திருக்கு? அதை எப்படிச் சீர்ப்படுத்தியிருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இதைப் பற்றி இஞ்ச இப்ப கதைக்க விரும்பேல்ல. அதுக்கு காலம் இருக்கு. அல்லது அதை நான் கதைக்க விரும்பேல்ல. அதில கன பக்கங்களிருக்கு. பல காரணங்களும் அந்தக் காரணங்களோட தொடர்பான கன தரப்பும் இருக்கு. எல்லாத்தையும் சரியாக அறியாமல் கதைக்கவும் முடியாது.

ஆனால், ஏதோ நடந்திருக்கு எண்டது மட்டும் உண்மை. இல்லையெண்டால், இந்த பெரிய அமைப்பும் போராட்டமும் இப்பிடிச் சட்டெண்டு முடிஞ்சு போகுமா?

இதையெல்லாம் ஆரோ ஒரு நாளைக்கு வெளியில சொல்லத்தான் போகினம். சிலர் – பல விசயங்களையும் அறிஞ்ச ஆட்கள் – இதையெல்லாம் எழுதக் கூடும்.

என்னைப் பொறுத்தவரையும் நான் விசுவாசமாக வேலை செய்திருக்கிறன். சனத்துக்காகப் பாடு பட்டிருக்கிறன். இயக்கத்துக்காகவும் பாடுபட்டிருக்கிறன். போராட்டத்துக்காக உழைச்சிருக்கிறன். சில சந்தர்ப்பங்களில என்ரை அறிவைக் கடந்தும் வேலை செய்திருக்கிறன். ஒரு அமைப்பில இருந்தால் அதின்ரை தலைமைக்குக் கட்டுப்படவேண்டி வரும். அது எங்க இருந்தாலும் அப்பிடித்தான்.
தமிழகத்தில கருணாநிதியின்ரை ஆட்சியையும் கதைகளையும் பாக்க எங்களுக்கு விசர்தான் வரும். ஆனால், அவற்றை கட்சிக்கும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கட கட்சியின் வெற்றிக்காகவே உழைக்கிறார்கள். இது அமரிக்காவுக்கும் பொருந்தும். சீனாவுக்கும் பொருந்தும் எண்டுதான் நினைக்கிறன்.
நாங்கள் எல்லாத்தையும் பட்டுக் கழிச்சிட்டம். இறுதிவரையும் நிண்டு பாத்தாச்சு. என்னைப் போல ஆயிரக்கணக்கானவையள் இப்பிடிக் கடுமையாகக் கஸ்ரப்பட்டிருக்கிறார்கள். இதுக்கு மேல நாங்கள் என்ன செய்ய முடியும்? ஆனால் எங்களுக்குத்தான் இப்பவும் கஸ்ரம். எங்களால கண்டபடி அங்க இங்க திரிஞ்சு நிலைமைக்குத் தக்கமாதிரிப் பாடவும் முடியாது. காரியம் பாக்கவும் முடியாது.

இயக்கம் எண்டது பெரிய மரத்தைப் போல. அது சரிந்தால் சும்மா கயிற்றைப் போட்டுக் கட்டி நிற்பாட்டேலாது. அதைப் போல அந்த மரம் இல்லாட்டித்தான் அதின்ரை அருமையும் அது இருந்த இடமும் தெரியும். வெட்ட வெளியாக இருக்கிற இடத்தைப் பாத்தால் இனம் புரியாத ஒரு சோகம் மனசில வருகிது.

இந்த நிலைமை அதாவது, புலிகளின் வீழ்ச்சியும் நீங்கள் சரணடைந்ததும், பிறகு இப்போது விடுதலையாகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதைப் பற்றியும் என்ன நினைக்கிறீங்கள்?

இதைத் தானே நான் முன்னரே சொல்லிவிட்டன். நாங்கள் விரும்பாத ஒரு கட்டத்துக்கு வந்திருக்கிறம் எண்டு. இப்பிடியான நிலைமைக்குப் பிறகு ஒரு காலகட்டம் வரையில நீரோட்டத்தில போக வேண்டியதுதான்.
நீந்தேக்க களைச்சுப் போனால், கொஞ்சநேரம் நீரோட்டத்தின்ர போக்கில போய்ப் பிறகு திரும்பிற விளையாட்டுத்தான்.

ஆனால், இது நிலைப்பாட்டின் வீழ்ச்சியாக மாறாதா?

அப்ப என்ன செய்யிறது? எதையும் சொல்லலாம். செய்து பாத்தாத்தான் தெரியும் எண்டு சொல்லுவார்கள். அதைமாதிரி, நாங்கள் இருக்கிற சூழ்நிலையில இப்ப பேசாமல் இருக்கிறதே மேல். தொழில், வருமானம், வீடு, பிள்ளைகளின்ர எதிர்காலம் எண்டு எங்களுக்கு முன்னாலே ஏராளம் பிரச்சினைகளிருக்கு.

இதையெல்லாம் இந்த வயதில எப்பிடிச் செய்து முடிக்கிறது எண்டு தெரியேல்ல. எல்லாத்தையும் தொடக்கத்தில இருந்து செய்ய வேணும் எண்டால் எவ்வளவு கஸ்ரம்?

22 வருசமாக பொது வாழ்வில இருந்திட்டு இப்ப இப்படித் திடீரெண்டு தனியாகக் குடும்ப வாழ்க்கைக்கு வாறதே சிரமம். உழைக்க வேண்டிய உற்சாகமான காலத்தை இளமைக்காலத்தை இழந்திட்டு இப்ப புதிசா என்ன செய்யலாம் எண்டால் என்ன செய்யிறது?

நானாவது பரவாயில்ல. கால் இல்லாதவங்கள், கையில்லாதவங்களின்ரை நிலைமையைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.

இந்த நிலைமையில நாங்கள் என்ன செய்யிறது?
எங்க இருந்தாலும் இதயம் நல்லா இருந்தாச் சரி எண்டதுதான் என்ர நிலைப்பாடு.

அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் எல்லாம் எப்படி இருக்கு? விடுதலையாகிய போராளிகளின் பொதுவான நிலைமையைப் பற்றிச் சொல்லுங்கள்.

அரசாங்கம் கடன் தாறதாகச் சொல்லியிருக்கு. ஐ.ஓ.எம் எண்ட ஒரு தொண்டு நிறுவனம் தொழில் உபகரணங்களைத் தருகிது. அதுக்கு மேல நாங்கள் எதிர்பார்க்க ஏலாது. அப்படி எதிர்பார்க்கிறதில பிரயோசனமும் இல்ல.

புனர்வாழ்வில சிலபேருக்கு நல்ல வாய்ப்புக் கிடைச்சிருக்கு. சிலருக்கு தொழில் வாய்ப்பும் கிடைச்சிருக்கு. குறிப்பாக இளைய பெடியள். அல்லது பெண் போராளிகளுக்கு வேலை வாய்ப்புகளில் இடம் குடுக்கிறார்கள். அவர்களின்ர வயது அதுக்குத் தோதாக இருக்கு.

எங்களுக்கு வயதும் கூடீட்டுது. படிப்பும் போதாது. படிக்கிற ஆக்களுக்கும் பரவாயில்ல. ஆகப் பாதிக்கபபட்டது எங்களைப் போல இருக்கிற ஆக்கள்தான்.

இப்போதுள்ள உங்களின் மன நிலை என்ன?

இப்பிடியொரு கேள்வியை விசாரணையின்போதும் கேட்டார்கள். இப்ப நீங்களும் கேக்கிறியள். இதுக்கு நான் என்ன பதிலைச் சொல்ல முடியும்?

பொதுவாகவே போராளிகளின் இன்றைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்.

வசதி வாய்புள்ள ஆக்களுக்கு ஒரளவு பிரச்சினை இல்ல. சிலர் வெளியில போயிட்டினம். மற்ற ஆக்கள் சிலர் சொந்தமாகத் தொழில் செய்கிறார்கள். சிலருக்கு சொந்தக்காரர் நண்பர்களின் உதவி இருக்கு.

ஆனால், பலருக்கும் வசதிகள் இல்லை. உதவிகள் இல்லை. சிலருக்கு சில இடங்களில் இருந்து உதவிகள் கிடைச்சிருக்கு. அவர்கள் அந்த உதவிகளைப் பெற்றுக் கொண்டு ஏதாவது செய்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான போராளிகள் வேதனையோட இருக்கிறார்கள். அரசாங்கத்தின்ர கடனைப் பெற்றாலும் அதை வைச்சுத் தொழில் செய்யக்கூடிய நிலைமை எல்லாருக்கும் இல்லை.
பொதுவாகச் சொன்னால் இதுக்கு ஒரு ஒழுங்கான திட்டம் இருந்தால்தான் எதுவும் செய்யலாம்.

பெண்போராளிகளின் நிலைமை எப்பிடி இருக்கிறது. குறிப்பாக திருமணம் முடித்திருக்கும் பெண் போராளிகளின் நிலைமை?

அவர்களின் நிலைமை இன்னும் மோசமானது. பெரும்பாலும் இந்த மாதிரிப் பெண் போராளிகள் ஆண் போராளிகளையே திருமணம் செய்திருந்தினம். இப்ப அவர்களில் பலரும் இல்லை. பலர் ஏற்கனவே வீரச்சாவடைந்து விட்டார்கள். சிலரைப் பற்றிய தகவலே இல்லை. இந்த நிலையில இந்தப் பெண் போராளிகள் பிள்ளைகளோடு பெரிய கஸ்ரங்களைப் படுகுதுகள்.

அதுதான் சொன்னேனே, ஒரு நல்ல திட்டம் இல்லை எண்டால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

முடிவாக என்ன சொல்ல விரும்புகிறீங்கள்?

இவ்வளவு காலம் எங்களை ஒரு கொள்கையில அர்ப்பணிச்சு வாழ்ந்த நாங்கள் இப்ப இப்பிடி ஒண்டுஞ் செய்ய முடியாத ஒரு நிலையில இருக்கிறம். இதை எப்பிடி மாத்திறதெண்டு தெரியேல்ல. அதைப் பற்றித்தான் யோசிக்கிறன்.

இப்பிடி யோசிக்கேக்க இனி ஒரு சோலியும் வேண்டாம் எண்டுதான் முடிவெடுக்க முடியுது.
நல்லாக் களைச்சுப் போனா தண்ணியாவது தரவேணும். அதுக்கும் ஆளிருக்க வேணும். ஆனா, இப்ப அதுக்கெல்லாம் ஆருமே இல்ல.

ஒரு முன்னாள் போராளி என்ற வகையில உங்களின் இன்றைய மனநிலை?

முன்னாள் போராளி – இப்படிச் சொல்வது தவறு. போராளி என்றால் முன்னாள் பின்னாள் என்றெல்லாம் கிடையாது. போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை. அது வெவ்வேறு விடிவங்களை எடுக்கும். வெவ்வேறு சூழ்நிலைகளில் அது வேறான தொழில்பாடுகளைக் கொண்டிருக்கும். ஆகவே போராட்டத்துடன் என்றைக்கும் இணைந்திருக்கும் ஒரு போராளியை முன்னாள் போராளி பின்னாள் போராளி என்று சொல்ல முடியாது.

போராளி ஒரு அரச உத்தியோகத்தரைப்போல ஓய்வு பெறவும் முடியாது. ஓய்வாளராக அவரைக் கருதவும் முடியாது – இது அவர்களைக் கொச்சைப் படுத்தும் வார்த்தை அல்லது போராளி என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாதவர்களின் கதை எண்டுதான் அர்த்தம்.

மற்றும் படி வேறு என்ன சொல்ல முடியும். இதைத்தானே ஏற்கனவே சொல்லியிருக்கிறன்.

நேர்காணல்

தமிழ்-குறுந்தேசியவெறியும் இலங்கையின் கடல்வளமும்




இந்திய மீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசியவெறியும் இலங்கையின் கடல்வளமும்:

இன்று இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லபப்படும் நிகழ்வு, பல மட்டங்களிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் மூன்றாம்தர இந்திய நடிகனான விஜய் என்ற கோமாளியில் இருந்து இந்திய அரசியலில் இருப்பன, ஊர்வன, பறப்பன, குரைப்பன என அனைத்துத் தரப்பினரும் இந்திய மீனவர் கொலைக்கெதிராக கிளரந்தெழுந்துள்ளனர்.

இதேபோன்று ம.க.இ.க ஆதரவு பெற்ற வினவும், புலம்பெயர் சந்தர்ப்பவாத திடீர் குறுந்தேசியவாதிகளில் இருந்து, புலிகளின் எச்சசொச்ச பாசிச கட்டமைப்புகளும், முன்னாள் இலங்கை அரசின் அடிவருடிகளான புளட் முதல் ரீ.பீ.சீ வானொலி வரை அனைத்தும் இன்று இக்கொலைகளை அடிப்படையாக வைத்து தமது நலனில் நின்று அரசியல் செய்கின்றனர்.

இக் கொலைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டுமென்பது மானிடதர்மம் என்ற சமூக கூட்டுப்பொறுப்பு என்பதற்கப்பால் ஒவ்வொருவரின் தனிமனித கடமையும் ஆகிறது. இதன் அடிப்படையில் எவரும் இக்கொலைகளுக்கு எதிராக குரல்கொடுக்கலாம்.

ஆனால் இவர்களின் இக்கொலைகளுக்கெதிரான குரல் இரு இனங்களுக்கிடையிலான ஏற்கனவே இருக்கும் பிளவை அதிகரிக்க வகை செய்வதாகவும், இலங்கை வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உலை வைப்பதாகவும் உள்ளது.

ஆம், இந்திய இடது மார்க்ஸ்சிஸ்ட்டுகள் தொடக்கம் புலம்பெயர் குறுந்தேசிய தமிழ் வலது பாசிச சக்திகள் வரை, இந்திய மீனவர் விவகாரத்தில் இவர்களால் முன்வைக்கப்படும் விவாதத்தில் இரு விடயங்களில் இவர்கள் அனைவரும் ஒன்றுபடுகின்றனர்.

முதலாவது “சர்வதேச” தமிழ்தேசியத்தை முன்னிறுத்தி மீனவர் பிரச்சனையை, சிங்கள மீனவர்களுக்கும் இலங்கை, இந்திய தமிழ் மீனவர்களுக்குமிடையிலான இனமுரண்பாடாகக் காட்ட முனைகின்றனர்.

இரண்டாவது, இந்திய மீனவர்களால் அழிக்கப்படும் இயற்கைவளங்கள் பற்றிய எந்தவித கருத்தும் இல்லாமல், வரையறையற்ற மீன்பிடித்தொழிலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் .

இதன் அடிப்படையில் இலங்கை மீனவர் சமூகத்திற்கெதிராக, செயற்படுகின்றனர். அதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றனர்.

இக்கட்டுரை சிலதரவுகளின் பின்னணியில் மேற்கூறிய இவர்களது இரண்டு நிலைப்பாட்டையும் கேள்விக்குட்படுத்துவதுடன், இவர்களின் அரசியல் சந்தர்ப்பவாதத்தை சாடி நிற்கின்றது.

வடபகுதியின் மீன்பிடி அபிவிருத்தி பற்றிய சிறு வரலாற்றுப் பார்வை

இலங்கைக்கு பாரிய கடற்பிரதேசம் இருந்தும், இலங்கை இன்றுவரை மீன்பிடியில் எந்தவகையிலும் அபிவிருத்தியடைந்த நாடல்ல. மீன்பிடித் தொழில் அபிவிருத்திக்கான முதல் அடித்தளம்; சிறிமாவோ பண்டாரநாயக்காவின் (1972 – 1977) பதவிக்காலத்தில் இடப்பட்டது. இக்காலப்பகுதியில் மீன்பிடி கூட்டுறவு சங்கங்களும், அகில இலங்கை மீன்பிடி தொழிலாளர் சமாசமும் உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டு திட்டம் தீட்டப்பட்டு, அத்திட்டத்தில் முதல் இரண்டாண்டுகள் கரையோர மற்றும் களப்புசார் மீன்பிடியை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் இலகுகடன்கள் மீன்பிடி கூட்டுறவுச்சங்கங்களுக்கூடாக வழங்கப்பட்டது. இக்கடன்கள் வடக்கு-கிழக்கில் உபயோகிக்கும் மரவள்ளங்களையும், தெற்கில் பாவிக்கும் கட்டுமரங்களையும், வலைகளையும் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டது.

அதன்பின் பதவிக்கு வந்த யூ.என்.பி. அரசு தனது திறந்த பொருளாதாரக் கொள்கைக்கேற்ப சிறிமாவோ பண்டாரநாயக்காவின் திட்டத்தை சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியது. மீன்பிடித்தொழிலை ஜப்பான் நாட்டின் உதவியுடன் நவீனப்படுத்த, அந்நாட்டின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டது.

இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஜப்பான் நாடு தனது கடல்சார் தொழில்நுட்பத்தை இலங்கையில் சந்தைப்படுத்தும் தனியுரிமையை தனதாக்கிக் கொண்டது. அத்துடன் இலகு கடன் மூலம் ஜப்பானிய நிறுவனங்கள் சிறு வள்ளங்களுக்கும், கட்டுமரங்களுக்கும் பயன்படும் வெளியிணைப்பு இயந்திரங்களை மீனவர் கூட்டுறவுச்சங்கங்கள் மூலமாக வழங்கியது. அத்துடன் உள்ளிணைப்பு இயந்திரங்களைக் கொண்ட கரை கடந்து தொழில் செய்வதற்கான நவீன படகுகளை தனியார் வங்கிகளின் உதவியுடன் கட்டுவதற்கான ஊக்குவிப்பும் அரசினால் வழங்கப்பட்டது. இதனைச் சரியாகப் பயன்படுத்தி பாரிய நலனை அனுபவித்தோர் மன்னாரில் இருந்து வடமராட்சி வரை தொழில் புரிந்த நடுத்தரவர்க்க மீனவர்கள் என்றால் மிகையாகாது. இதற்கான முக்கிய காரணிகளாக பின்வருவனவற்றை கூறலாம்.

1. தெற்குடன் ஒப்பிடுகையில் வடக்கின் பொருளாதாரம் சிறிமாவோ காலத்தில் இருந்தே மிக நன்றாக இருந்தது. அத்துடன் சேமிப்பு பழக்கத்துடன் இணைத்த தனிநபர்களுக்கிடையிலான வட்டிக்கு வழங்கும் முறை, இலகுவாக கடன் பெற்று தொழில் நடத்த வகை செய்தது.

2. பலநூறு வருடங்களாக வடபகுதியைச் சேர்ந்த சில கிராமத்தவர் மரப்படகு கட்டும் தொழில்நுட்பமும், அனுபவமும் கொண்டவர்களாக இருந்தமை. (இவர்கள் தம் பிற்காலத்தில் யா-ஏல, மற்றும் நீர்கொழும்பு பகுதியில் மரப்படகு கட்டும் தொழிலை சிங்கள தொழிலாளர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்)

3. நோர்வேயினால் அறுபதாம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சீ-நோர் நிறுவனம் காரைநகரிலும், குருநகரிலும் வலையுற்பத்தி மற்றும் கண்ணாடிநார் இழைப்படகு உற்பத்திகளை மேற்கொண்டது. இதனால் மலிவுவிலையில் தொழிலாளர்கள் மேற்கூறிய உபகரணங்களை பெறமுடிந்தமை. (இந்நிறுவனம் பிற்காலத்தில் அரசமயப்படுத்தப்பட்டு, அதன் தொழில்நுட்பம் தெற்கில் படகுகள் தயார் செய்ய உபயோகிக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்திலும் காரைநகர் தொழில்நுட்பவியலாளர்களும் தொழிலாளர்களும் தென் இலங்கையர்க்கு தொழில்நுட்பத்தை பழக்கினர். தென்பகுதியில், குறிப்பாக யா-எல பகுதியில் உருவாக்கப்பட்ட கண்ணாடிநார் இழைப்படகுகளை தமிழ் இயக்கங்கள் பயன்படுத்தின. அப்படகுகள் காரைநகர் படகுகளை விட ஆழ்கடல் அலை அடிப்பை தாங்கக் கூடியவை. காரைநகர் படகு உற்பத்தி புளட் இயக்கக் கொள்ளையினால் நிறுத்தப்பட்டது. குருநகர் வலை உற்பத்தி நிறுவனம் புளட் இயக்கத்தாலும், புலிகளாலும் கொள்ளையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டு, வலையுற்பத்தி கொழும்புக்கு மாற்றப்பட்டது.

4. மீனின் பிறப்பும் வளர்ச்சியும் கடலடித்தளமேடை என்று சொல்லப்படும் Continental shelf, ஆழ்கடலுக்கும் பரவைகடல் /களம் / களப்பு கடலுக்கும் இடையிலான பகுதிலேயே நடைபெறுகிறது. இலங்கையின் பெரும்பகுதி கடலடித்தளமேடை மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 480 கிலோ மீற்றராகவும் அகலம் 22 கிலோ மீற்றர் இல் இருந்து 60 கிலோ மீற்றர் வரை உள்ளது. ஆகவே இப்பகுதி உள்ளக அளவில் ஒப்பிடக்கூடிய மீன் உற்பத்தியாகும் பிரதேசமாகவுள்ளது. (இந்தியாவின் இரண்டாவது பெரிய கடலடித்தளமேடை கேரளா கரையோரம் உள்ளது. அதனால் தான் கேரளம் மிக முக்கிய மீன்பிடி பிரதேசமாகவுள்ளது.) இவ்வாறு இயற்கையாகவே மீன் உற்பத்தியாகும் பிரதேசத்தின் அருகில் வடபகுதி மீனவர்கள் சீவிப்பதால், அவர்களால் அதை அனுபவிக்க முடிந்தது.

5. வடபகுதியில் பிடிபடும் மீன் தென்பகுதியில் மிகவாக விரும்பப்படுகிறது. இதனால் அங்கு நல்ல விலையுடன் சந்தை வாய்ப்பும் கிடைத்தது அத்துடன் பதனிடப்பட்ட வடபகுதி மீனுக்கும் சந்தை வாய்ப்பும் வரவேற்பும் இருந்ததால், வடபகுதியில் பிடிக்கப்பட்ட மீன்கள் அனைத்தும் வீணாகாமல் பணமாக்கப்பட்டது.

இவ்வாறு மீன்பிடி அபிவிருத்தி வடபகுதி மீனவர்களின் வாழ்நிலையை உயர்த்தியது. 1983 இல் வடபகுதியின் அதிஉச்ச மீன்பிடி காரணமாக நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத் தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்த சாதனையை செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடரும்.

மணலை மைந்தன்

பிற்குறிப்பு: இக்கட்டுரையில் இலங்கையின் தெற்கு மற்றும் முல்லைத்தீவிலிருந்து அம்பாறை வரையான கிழக்குக்கரையின் மீன்பிடி பற்றி பேசுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் இதை எழுதுபவர் யாழ்- மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவபடுத்துபவர் என்பதல்ல. அதேவேளை அங்குள்ள மீன்பிடிசார் குறைபாட்டை மூடிமறைப்பதற்காகவுமல்ல. இன்று விவாதத்திலுள்ள விடயம் இந்திய மீனவர்கள் கொலைசெய்யப்படுவதும், வடபகுதி மீனவர்களின் அவலமும் இந்திய மீனவர்களின் கடல்மேலாதிக்கமுமாகும். தெற்கு மற்றும் கிழக்கின் மீன்பிடி யுத்தம், சுனாமி, இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு இன்றுவரை அது புனருத்தாரணம் செய்யப்படவில்லை. இதனால் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லீம் மீன்பிடி சமூகம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இக் கட்டுரையாளருக்கு தெரிந்தவரை அங்கு கூட தமிழ் சிங்கள மீன்பிடி தொழிலாளர்களுக்குகிடையில் சொல்லத்தக்க அளவிலான முரண்பாடுகள் இருந்ததில்லை. ஆனால் இன்று அரசு சார்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் முதலாளிகள் பாரிய முதலிட்டு, தடைசெய்யப்பட்ட, இயற்கை வளத்தை அழிக்கும் டைனமைட் பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று இலங்கையில் கிழக்கு துறைமுகங்களை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் சமுத்திர மீன்பிடி (200 கடல்மைல்களுக்கப்பால்) கலங்கள் பாவிக்க அரசு அனுமதித்துள்ளது.
வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை

வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2600 ஆகவும், மரவள்ளங்கள் 3865 ஆகவும் இருந்தது. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப்படகுகளாலும், கரையோர தொழிலாளர் பயன்படுத்தும் மரவள்ளங்கலாலேயே பிடிக்கப்பட்டது. ரோலர் பயன்பாடு இலங்கையில் 80 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது பின்வந்த காலத்தில் தடைசெய்யப்பட்டதுடன், யுத்தத்தால் வடபகுதி றோலர்கள் ஆழ்கடல் செல்வது தடுக்கப்பட்டது. ஆனாலும் வடபகுதியில் இருந்த றோலர்களின் தொகை நூறுக்கும் குறைவானதே.

வடபகுதின் ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம், ஆரம்பத்தில் கூறியது போல வலைபடுத்தலேயாகும். இவ் வலைகளின் கண் கடலின் ஆழத்திற்கேற்பவும், எவ்வகையான மீன்களை மீனவர்கள் குறிவைக்கின்றனர், எந்தவகை காலநிலை நிலவுகிறது போன்ற காரணிகளின் அடிப்படையிலும் வேறுபடும். உள்ளக யந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் யப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 இஞ்சி கண் விட்டத்திலிருந்து 8 இஞ்சி கண்விட்டமுள்ள, 7 இலிருந்து 10 மீட்டர் அகலமும் 1 இலிருந்து 2 கிலோமீட்டர் நீளமுள்ள வலைகளை உபயோகித்தனர். கண்ணாடி இழைப்படகுகளில் தொழில் செய்தோர் 5 இன்ச் கண்விட்டத்திலிருந்து 8 இன்ச் கண்விட்டமுள்ள அறக்கொட்டியான் வலை, திருக்கை வலை போன்றவற்றை பயன்படுத்தினார்கள். ஆனால் மரவள்ளம் உள்ளவர்கள் களங்கண்டி, சிறுவலை, கொட்டுவலை, விடுவலை, பறிக்கூடு, சூள், தூண்டில்வலைக் கயிறு, முரல் தூண்டி, சிங்க இறால் பிடித்தல் போன்ற களக்கடல் அல்லது பரவைக்கடல் சார் தொழிலை மேற்கொண்டனர். இதை விட மன்னார் பிரதேசத்தின் சில பகுதிகளில் கரைவலை இழுப்பும் தொழிலாக செய்யப்பட்டது.

இவ்வாறு ஓப்பீட்டளவில் இலங்கையிலே தெற்கை விட பல முறைகளில் வளர்ச்சியடைந்திருந்த வடக்கின் மீன்பிடி, 83 ஆம் வருடத்தின் பின்வந்த யுத்தக்காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டது. குறிப்பாக யாழ் மாவட்டத்தின் மீன்பிடி உபகரணங்களும், மீன்பிடி முறைமைகளும், உள்கட்டுமானமும் சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில், புலிகள் மக்களை யாழிலிருந்து வன்னிக்கு அனுப்பியபோது முற்றாக அழிக்கப்பட்டது. மன்னாரின் நிலையும் அதேபோன்று பழுதுபாற்பதற்கான வசதியின்மை, அரசபடைகளின் அட்டூழியம் போன்றவற்றால் அழிவுகண்டது.

இன்று வடக்கின் மீன்பிடித் திறனானது வெளியிணைப்பு இயந்திரம் கொண்ட 2200 கண்ணாடி இழையப் படகுகளையும், 1800 மரவள்ளங்களையும், 120 உள்ளிணைப்பு இயந்திரம் கொண்ட மீன்பிடிக்கலங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் மன்னாரிலும், குருநகரிலும் மொத்தமாக 23 குறைந்த இழுதிறன் கொண்ட இறால் பிடிக்கவெனப் பாவிக்கும் றோலர்கள் சட்டத்திற்கு முரணாக இயங்குவதாகவும் தகவல்கள் சொல்கின்றன.

தமிழ்நாட்டின் மீன்பிடி சிறு வரலாற்று பார்வையும் சில தரவுகளும்

தமிழ்நாட்டின் மீன்பிடி உள்நாட்டு உணவுக்காகவே பயன்தரும் வளமாக பல காலமாக இருந்து வந்தது. ஆனால் 1972 இல் மத்திய அரசால் முன்வைக்கப்பட்ட மீன்பிடி அபிவிருத்தித்திட்டத்தின்படி சர்வதேசதரத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கேரளத்தில் நோர்வே சர்வதேச அரச அபிவிருத்தி நிதியுடன் அறுபதுகளின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திர இழுவைப்படகுகள் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. வள்ளம், கட்டுமரம் மூலம் சிறுவலைகளை பயன்படுத்தி தொழில் செய்ததற்கு பதிலாக இந்தவகையான பொறிமுறையை பாவிப்பதனால், உற்பத்தித்திறன் கூடுவதால் மீனவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என இந்திய அரசினால் நம்பப்பட்டது. 1972 ஆம் ஆண்டளவில் 200 ஆகவிருந்த இயந்திரப் படகுகளின் தொகை 2008 இல் 5595 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டின் மீன்பிடி உற்பத்தித்திறன் இன்று கேரளா, குஜராத்திற்கு அடுத்ததாக இந்தியா அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2008 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் மீன் உற்பத்தி 3,93,266.30 தொன்களாகும். இதில் 72644 தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 18.3 பில்லியன் (அல்லது 18131.4 மில்லியன்)இந்திய ரூபாய்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளது. இது சர்வதேச நாடுகளுக்கான ஏற்றுமதியால் பெறப்பட்ட வருமானம் மட்டுமே. உள்நாட்டு சந்தைப்படுத்தலால் பெறப்படும் வருமானம் இதைவிட அதிகமானது. இதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டின் மீன்பிடியானது செல்வம் கொழிக்கும் தொழிலாக இருக்கிறது.

ஆனால் மீன்பிடியால் பெறப்படும் செல்வம் எதுவும் யாருக்குப் போய் சேரவேண்டுமென 1972 ஆம் ஆண்டின் அரசதிட்டத்தில் கூறப்பட்டதோ அவர்களுக்கு அது சென்றடையவில்லை. காரணம் மீன்பிடி மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்டபோது அரச நலன்களை பாவித்து அதில் முதலீடு செய்தவர்கள் இந்திய அரசியற் கட்சிகளில் செல்வாக்குப் பெற்ற பெரும்பணக்காரர்களும், அரசியல்வாதிகளும், மீன்பிடிக்கே சம்பந்தமில்லாத வேற்றுச் சமூகத்தை சேர்ந்த கோடீஸ்வரர்களுமேயாகும். அரச மீன்பிடித்திட்டம் 1972 இல் நடைமுறைக்கு வந்தபோது பரம்பரை பரம்பரையாக மீன்பிடித்தோருக்கு அதில் முதலீடு செய்வதற்கான வளங்கள் இல்லாதிருந்ததும், அரச யந்திரத்தின் லஞ்ச லாவண்யக் கொடுமையும், அடித்தட்டு மீனவர்கள் மீன்பிடி அபிவிருத்தியின் நலனை அனுபவிக்க தடையானதெனலாம்.

மேலும் நோர்வே அரசினால் ரோலர் இழுவைப்படகுகள் கேரள மாநிலத்தில் அறிமுகப்படுத்திய போதும் இதேநிலை தான் அங்கும் நடந்தது. அங்கு பாரம்பரிய மீனவர்கள் வாழ்க்கை பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டு, அவர்கள் நாளாந்த கூலிகளாக்கப்பட்டார்கள். மீன்பிடியை தளமாகக் கொண்டு பெரும் பணக்காரர் தமது மூலதனத்தை உயர்த்திக் கொண்டார்கள். இதற்கு துணைபோன நோர்வே அரசு, தமது கேரள அபிவிருத்தி செயற்திட்டத்தை ஆய்வுசெய்து, அது பல ஏழைகளை உருவாக்கியதுடன், இயற்கைவள அழிவுக்கும் வழிவகுத்ததென ஐக்கியநாடு சபையின் உலக அபிவிருத்தி சம்பந்தமான கூட்ட தொடரின் போது சுயவிமர்சனம் செய்துகொண்டது. இன்றுவரை கேரளாவில் நோர்வேயின் மீன்பிடி அபிவிருத்தி எவ்வாறு ஒருநாட்டில் அபிவிருத்தித்திட்டம் மேற்கொள்ளக்கூடாதென்பதற்கு உதாரணமாகவுள்ளது.

ஆனால் இதை ஒன்றும் கணக்கில் எடுக்காது இந்திய மத்திய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் கேரளாவில், சமூகப் பாதிப்பையும், இயற்கைவள அழிவையும் ஏற்படுத்தி ஒருசில பணமுதலைகளை மேலும் பொருளாதாரத்தில் உயர்த்திய மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தியதின் விளைவு, பஞ்சத்திலும் அடுத்தவர்க்கு அடிபணியாது, கடலை நம்பியே வாழ்ந்த பெருமைமிகு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டு மீனவச் சமூகம் பெருமுதலாளிகளின் இயந்திரபடகுகளில் நாட்கூலிகளாக்கப்பட்டனர்.

மேற்கண்ட தகவல்கள் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீன்பிடி சார்ந்ததாகும். இன்று இலங்கை கடல்வலயத்தில் அத்துமீறல் செய்து நம் தேசத்தின் கடல்வளத்தை சூறையாடி, இயற்கை அழிவிற்கு வழிவகுக்கும் இந்தியக் கரையோர பிரதேசங்கள் பற்றி பார்ப்போமாகில் மன்னார் வளைகுடாவுக்கு வடக்கிலும் வங்காள விரிகுடாவுக்கும் இடைப்பட்ட புவியடி தளமேடையில் நாகப்பட்டினம் வடக்கிலிருந்து ராமேஸ்வரம் தெற்கு வரையாக கிட்டத்தட்ட 480 கீலோமீற்றர் கரையோர பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கரையோர பிரதேசத்தில் கிட்டத்தட்ட 43 சதவீதமாகும்.

அத்துடன் 2002 ஆம் ஆண்டு இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி நாகப்பட்டினத்தில் 1465 றோலர்களும், தஞ்சாவூரில் 469 ரோலர்களும், புதுக்கோட்டையில் 866 றோலர்களும், இராமநாதபுரத்தை சேர்ந்த 1865 றோலர்களில் 980 றோலர்களும் (மீதமானவை மன்னார் வளைகுடாவில் தொழில் செய்கின்றனர்), அதவாது மொத்தமாக 3780 இந்திய றோலர்கள் பாக்குநீரிணைப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. இத்தகவல் 2002 ஆம் ஆண்டை சேர்ந்தது. இன்றுவரை இந்தத் தொகை அதிகரித்தே வந்துள்ளது. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இவற்றில் பெரும்பாலானவை கோடீஸ்வர முதலாளிகளுக்கும், பாரிய மீன் ஏற்றுமதி கொம்பனிகளுக்கும் சொந்தமானதாகும்.

இதைவிட இப்பிரதேசத்தில் இலங்கையின் வடபிரதேசத்தைப் போல கரைசார் மீன்பிடியில் ஈடுபடும் 12500 மரவள்ளங்களும், 19500 கட்டுமரங்களும் கடற்றொழிலில் ஈடுபடுத்தப்படுகிறது. இவர்களும் பெரும்பாலும் சிறு வலைகளை பாவித்து மீன்பிடிக்கின்றனர்
மீன்பிடித்திறன் அதிகரிப்பும் கடல்வள அழிவும்

கடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித்திறனை அதிகரிக்க முதலீடுசெய்வதும், அதைக் கட்டுப்படுத்தி மீன்வளத்திற்கேற்ப முதலீடு செய்ய வகைசெய்யாமல், மீன்பிடித்துறையில் தாராளமய முதலீட்டை ஒரு அரசு தனது கொள்கையாக கொண்டிருக்குமானால் அதனால் முதலில் பாதிப்படைவதும், அழிவுக்குள்ளாவதும் கடல்சார் வளங்களே.

உற்பத்தி உபகரணங்களில் முதலீடு செய்யும்போது, அதை இலாபத்துடன் திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை முதலீட்டாளருக்குண்டு. ஆனால் மீன்பிடித்தொழில் ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்களையும், மனிதரின் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு மூலதனத்தை உயர்த்துவது போலல்ல. மீன்வளம் இயற்கை சார்ந்தது. ஒரு தொழிற்சாலையில் இயந்திரத்தை வைத்து உற்பத்தியை கூடவோ அல்லது குறைக்கவோ முடியும்.

சந்தை நிலவரத்திற்கேற்ப உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் மீன்வளம் அப்படி அல்ல. மீன்வளத்தின் உருவாக்கம் பல ஆண்டுகளைக் கொண்ட இயற்கைசார் உற்பத்திப் பொருள். மீன்வளத்தின் உருவாக்கம் கடலின் ஆழம், அதன் அடித்தளத் தாவரவியல், கடலின் புவிசார் அமைப்பு, கடலின் நீரோட்டம், மற்றும் கடலின் வெப்ப தட்ப நிலையில் தங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அளவு கடற்பரப்பில் மேற்கூறிய மீன்வளர்சிக்கான சூழலியல் காரணிகள் மீன் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு மீன்கள் தான் உருவாகும். மீன்வளர்ச்சிக்கான சூழலியல் காரணிகள் சில வருடங்களில் மிக மிக சாதகமானதாகவுள்ள போது அடிப்படை உற்பத்தி அளவிலிருந்து 00,2 – 00,5 சதவீதத்துக்கு கூடுதலாக உருவாகலாம். ஆனால் இந்த காரணிகளில் ஏதாவது ஒன்று பாதகமானதாக அமையும்போது மீன் வளர்ச்சியின் அளவு 10 சதவீதத்தில் இருந்து 90 சதவீத வீழ்ச்சியை அடையலாம்.

இதனடிப்படையில், இயற்கையுடன் இணைந்து அதற்கு பங்கமேற்படாது மீன்பிடித்தொழில் செய்வதானது, மீன்வளர்ச்சிக்கான மேற்கூறிய சூழலியல் காரணிகளை பாதிக்காமலும், மீன்வளத்தில் கூடியது மூன்றில் இரண்டு பங்கை மட்டும் பிடிப்பதுவாகும். அதேவேளை குறைந்தது மீன்வளத்தில் மூன்றில் ஓன்று பங்காவது இருந்தால் தான் அதன் மறுஉற்பத்திக்கு வசதியாகவிருக்கும். அத்துடன் அந்த மீன்களில் குறைந்தது 75 சதவீதம் மீன்கள் மறுஉற்பத்திக்கு தயாராகவுள்ள பெண் மீன்களாகவும் இருக்கவேண்டும். அதாவது இனப்பெருக்கத்தை செய்யக் கூடியனவாக, முட்டையிடக் கூடியனவாக இருக்க வேண்டுமென கடல்வள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் கொள்ளை இலாபத்தில் குறி கொண்டியங்கும் போது, இருக்கின்ற மீன்வளம் அனைத்தையும் தமதாக்கி கொள்ளும் போட்டி எழும். அதற்காக மீன்களை கடலிலிருந்து பெயர்த்;தெடுக்கும் பாரிய உற்பத்தி உபகரணங்களை, அவர்கள் பெரும் முதலீட்டில் வாங்கிக் குவித்து மீன்பிடியின் அளவை அதிகரிக்கும் போட்டி அவர்களிடையே வளர்ந்து கொண்டு போகும். ஆனால் அதேவேகத்தில் மீன்வகைளின் மறுஉற்பத்தி நடைபெறுவதானது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத, கடற்சூழல் மற்றும் தட்ப வெட்பக் காரணிகள் பலவற்றில் தங்கியிருக்கின்றது. அதனால் மீன்களின் மறுஉற்பத்திக்கு அதி அத்தியாவசியமான சினைப்படும் திறனுடைய மீன்கள் இவ்வகை கட்டுப்பாடற்ற நாசகார மீன்பிடியால் அருகிவிடும். இதனால் மீன் வகைகளின் மறுஉற்பத்தி படுபாதாள வேகத்தில் குறையும். மீன்கள் இறுதியில் கடலில் முற்றாக அருகி மீன்வளம் இல்லாத கடல்களாக அவை மாறிவிடும்.

மெதுமெதுவாக தண்ணீர் ஊறும் கிணற்றில் இராட்சத நீரிறைக்கும் இயந்திரம் வைத்து அடியொற்ற தண்ணீரை உறுஞ்சுவதற்கு இதனை ஒப்பிட்டு நோக்கினால் மீன்களின் மறுஉற்பத்தி வேகத்திலும் கூடுதலாக வேகத்தில் அவற்றை கடலிலிருந்து இழுத்து எடுக்கும் கொள்ளை இலாபம் ஒன்றே குறி என்றியங்கும் இந்தப் பெரும் முதலைகள் மீன்வளத்தை அழித்தொழித்த பின்னர் இன்னும் வேறு நாட்டு கடல்வளங்களை கொள்ளையிட நகர்ந்து கொண்டேயிருப்பார்கள்.

இயற்கைக்கு முரணான நாசகார மீன்பிடி- ஒரு சர்வதேச உதாரணம் .

மேற்கூறியது போன்று இயற்கைசார் மீன்பிடிக்கு முரணாக நாசகார மீன்பிடியை மேற்கொண்டு கடல்வளத்தை அழித்த நாடுகள் பலவுண்டு. இரண்டாம் உலகயுத்தத்தின் பின, அழிந்துபோன பொருளாதாரத்தை கட்டவேண்டிய பாரிய தேவை ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கியமானதாகவிருந்தது. பொருளாதார வளர்ச்சியையே முக்கியமானதாக இந்த நாடுகள் கருதின. இயற்கைவளங்களை அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபிகளாக நினைத்து பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டனர். இதன் அடிப்படையில் பாரிய முதலீடுகளை மீன்பிடியில் முதலிட்டனர். பொருளாதாரம் வளர்ந்தது. ஆனால் இப்பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில் பாரிய அழிவை இந்நாடுகளின் கடல்வளங்கள் கண்டன. உதாரணமாக இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், நோர்வே, ஜப்பான் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். இந்த நாடுகளில் மிகப் பாரதூரமான கடல்சார்வள அழிவை ஏற்படித்திய நாடு ஸ்பெயின் ஆகும்.

பல பில்லியன்களை முதலிட்டு தனது மீன்பிடித்திறனை அதிகரித்த ஸ்பெயின், அதற்கு வசதியில்லாத அருகில் இருந்த நாடான போர்த்துக்கல்லின் கடல் பிராந்தியத்திலும் தனது இராட்சத படகுகள் மூலமும் றோலர்கள் மூலமும் மீன்பிடித்தது. கண் மண் தெரியாத மீன்பிடி காரணமாக எண்பதுகளின் நடுப்பகுதியில் மீன்வளம் அறுபதுகளில் இருந்ததை விட 90 சதவீதத்தால் குறைந்து போயிருந்தது. பாரிய முதலீட்டுடன் உலகத்தில் இரண்டாவது பெரிய மீன்பிடித்திறனை கொண்டிருந்த ஸ்பானிய நாட்டின் மீன்பிடி முற்றாக ஸ்தம்பித்தது. வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதார வறுமையும் ஸ்பானியக் கரையோர பிரதேசங்களை வாட்டியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் நடாத்திய கடல்ஆய்வு பல்லாயிரக்கணக்கான கடல் மைல் கடலடித்தளம் முற்றுமுழுதாக அழிந்து போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வாளர்கள் அறுபதாம் ஆண்டின் நிலையை மறுபடியும் இயற்கை தானாகவே உருவாக்க குறைந்து நூறு வருடங்களாவது எடுக்குமென கணக்கிட்டனர். அத்துடன் சிலவகை கடலடித் தாவரங்களும், மீன் இனங்களும் இனி அந்தக் கடற்பரப்பில் உருவாக சந்தர்ப்பம் இல்லை என்றும் முடிவு கூறினார். வறுமையில் இருந்து கரையோரப் பிரதேசத்தை விடுவிக்கவும், தனது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளக சந்தை வைப்பை பெறவும், வேறும் பல முக்கிய பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஸ்பானிய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தது. வறுமையில் இருந்து கரையோரப் பிரதேசத்தை விடுவிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் இரு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

முதலாவது இராஜதந்திர உறவுகளையும், கடற்படை அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்காபிரிக்க கரையோரம் மீன்பிடித்தலாகும். அத்துடன் டென்மார்க், இங்கிலாந்து போன்ற நாடுகளின் வடகடல் பிரதேசத்தில் அந்நாடுகளின் நல்லெண்ண அனுமதியுடன் குறிப்பிட்ட அளவு தொன் மீன்களைப் பிடித்தல். இரண்டாவது ஸ்பானிய கரையோரப் பிரதேசங்களில் உல்லாசப் பயணக் உள்கட்டுமானங்களை உருவாக்கி உல்லாசப்பயணிகள் மூலம் வரும் வருவாயில் வறுமையை ஒழித்தலாகும். இன்று இருபது வருடங்களில் பின் இந்த இரு திட்டங்களில் இரண்டாவது திட்டம் பல வழிகளில் வெற்றி அளித்துள்ளது. ஆனால் மேற்காபிரிக்க கரையோரம் மீன்பிடிக்கும் திட்டமானது ஸ்பானியாவின் அத்துமீறலால் பல்லாயிரம் ஆபிரிக்க மக்களை வறுமையில் தள்ளியுள்ளது. அவர்களின் கடல்வளம் பாரிய ரோலர்களின் மூலம் களவாடப்படுகிறது. ஐக்கியநாடுகள் சபையில் இதைப்பற்றிய விவாதம் வந்தபோதெல்லாம் தமது அதிகாரத்தைப் பாவித்து ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பானியாவின் அத்துமீறலையும், மேற்காபிரிக்க கடல்வளங்களின் மீதான காட்டுமிராண்டித்தனமான வன்முறையையும் நியாயப்படுத்தியது. இன்றும் தொடர்ந்து அதையே செய்கின்றது. அது மட்டுமல்லாமல் செனகல் போன்ற நாடுகளில் ஸ்பானிய காட்டுமிராண்டித்தனத்திற்கெதிராக போராட வெளிக்கிட்ட உள்நாட்டு மீனவர்களையும். அவர்களில் அரசியல் வழிகாட்டிகளையும், இலஞ்சம் வாங்கும் உள்நாட்டு அரசியல் கைக்கூலிகளின் உதவியுடன் கொலைசெய்தது ஸ்பானிய அரசு. அதேவேளை ஸ்பானியா கொள்ளையடிக்கும் ஆபிரிக்க கரையோரநாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் தனது அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் கடல்வள அழிவுக்கு எதிரான மக்கள் போராட்ட உத்வேகத்தை தடுத்து நிறுத்திய வண்ணமுள்ளது. எப்படித்தான் இருந்தாலும், எந்தவகை கடற்கொள்ளையின் ஈடுபட்டாலும், ஒருகாலத்தில் உலக அளவில் மீன்பிடியில் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இருந்த ஸ்பானியா இன்றுவரை அந்த இடத்தை திரும்பவும் பிடிக்கமுடியவில்லை. இன்று அயல் நாடுகளினதும், வேறு வளைய நாடுகளினதும் கடல்வளங்களை கொள்ளையடிக்க புறப்படிருக்கும் புதிய கடற்கொள்ளைக்காரர்களான சீனர்களும் இந்தியர்களும் 2003 ஆம் ஆண்டிலிருந்து, உலக அளவில் மீன்பிடியில் முதன்மை வகிக்கும் முதல் பத்துநாடுகளில் முறையே முதலாம் இடத்திலும் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றார்கள்.

ஆம் இன்று எம்தேசம் மேற்கு ஆபிரிக்க கடல்வளம் ஸ்பெயின் நாட்டின் கடற்கொள்ளைக்கு ஆளாகும் நிலைபோல தெற்கில் சீன அரக்கர்கள் கொள்ளையை ஆரம்பித்துள்ளனர். வடக்கில் இந்தியக் கொள்ளையர்கள் எமது கடல்வளங்களை பலவருடங்களாக கொள்ளயிடுகின்றனர்.
இந்திய அத்துமீறல்களும், இயற்கைவள அழிவும் இலங்கை தமிழ் மீனவரின் வாழ்நிலையும்

இலங்கையின் வடபிரதேசக் கடலில் இந்திய நாசகார மீன்பிடி எவ்வகை அழிவை ஏற்படுத்துகிறதென பார்க்கமுன், பாதிக்கப்படும் பிரதேசங்களின் கடல்வளத்தை பற்றியும், அவற்றின் தன்மை பற்றியும் அறிந்து கொள்வது, அழிவு எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது, மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளங்கிக் கொள்வதற்கு இலகுவாக இருக்கும்.

வடபகுதியின் கடல் பகுதியில் மீன்வள உருவாக்கதிற்கான இருவகை சூழல்கள் காணப்படுகின்றது.

1.கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட பிரதேசம்.

2. ஐந்து பாகத்திற்கு மேற்பட்ட ஆழம் கொண்ட கடற்பிரதேசம். (இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல்வலைய எல்லை வரையான பிரதேசம்)

1. கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட பிரதேசம்.

இப்பிரதேசம் கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட, மூன்றிலிருந்து ஐந்து பாகம் ஆழம் கொண்டதாகும். இதன் அடித்தளம் பெரும்பான்மையாக முருகைக்கல்லும்,  மணலும், சேறும் கலந்ததாகவிருக்கும்.

இப்பிரதேசத்தைக் கடலடித்தளத்தின் தன்மை, தாவரவியல், போன்றவற்றின் அடிப்படையில் இரண்டாக பிரிக்கலாம்.

1. கரையிலிருந்து ஒரு பாகம் ஆழத்தைக் கொண்ட சேற்று மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட பிரதேசம்

2. ஒன்றிலிருந்து ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட முருகை மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட கடற்பிரதேசம்.

1.1. ஒரு பாகம் ஆழத்தைக் கொண்ட சேற்று மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட பிரதேசம்

இக்கடற்பரப்பை களக்கடல், களப்புக் கடல் என்றும் சில பிரதேசங்களில் பரவைக்கடல் என்றும் அழைப்பர். அநேகமான இடங்களில் இக்கடலின் கரைப்பகுதி ஆரம்பகாலத்தில் கடலாகவிருந்து, பின்பு மறுபடியும் இயற்கையின் மாற்றத்திற்கேற்ப மறுபடியும் கடலாக மாறிய இடங்களாகும். காலகாலமாக நடந்த இந்த மாற்றங்கள் இப்பரவைக் கடலின் மீன்வளர்ச்சிக்கான சூழலியல் காரணிகளில் முக்கியமானதாகும். தரையாகவிருக்கும் நிலம் கடலாக மாறும் போது கடலின் பௌதிகவியலில் மாற்றமேற்படுகிறது.

இந்த மாற்றங்களுக்கு கடலடித்தள தாவரவியலில் பாரிய செல்வாக்கு செலுத்துகிறது. கடலடித்தள தாவரவியலின் மாற்றமும், அதன் வளர்ச்சியுமே எந்தவகையான உயிரினங்கள் அக்கடல் பகுதியில் உருவாகின்றது என்பதை தீர்மானிக்கின்றது. இக்கடல் பகுதி சேறும் மணலும் கலந்த ஒரு பாக ஆழத்திற்கு உட்பட்டதாக இருக்குமானால் கடல் அறுகு, சாதாளை போன்ற தாவரங்களை கொண்டதாகவிருக்கும். சல்லி, திரளி, கிழக்கன், சுண்ணாம்புக்கெளுத்தி, மணலை, திருவன், கயல் போன்ற மீன்வகைகளும், வெள்ளைறால், மட்டறால், வெள்ளைநண்டு, குழுவாய்நண்டு போன்ற நண்டு இனங்களும், ஆடாதிருக்கை, புலியன் திருக்கை இன திருக்கைகளும், இங்கு உருவாகி ஆழ்கடல் சென்று பருவகாலத்தில் இனபெருக்கத்திற்கு தான் பிறந்த இடத்தை தேடிவரும். சிறையா போன்ற மீன்கள் இக்களக்கடலில் உற்பத்தியாகின்றன. இந்தவகை கடல் பகுதி புங்குடுதீவு பெரியபிட்டியில் இருந்து, பருத்தியடைப்பு ஊருண்டி ஊடாக தோப்புகாட்டு முனங்குக்கும் தம்பாட்டி கிழக்கு முனயூடாக, அராலி, நாவாந்துறை, பண்ணை பாசையூர் ஈறாக கொழும்புத்துறை வரையும் தொடர்கிறது.

1.2. ஒன்றிலிருந்து ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட முருகை மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட கடற்பிரதேசம்.

இக்கள கடலுக்கு ஒரு பாகத்திற்கும் ஐந்து பாகத்திற்கும் இடையில் ஆழம் இருந்தால் அதன் கடலடி நிலம் மணலாலும், சிறு முருகை கற்தளத்தையும் கொண்டதாக இருந்து வருகிறது. இப்பகுதியின் கடலடித் தாவரங்களாக பெரும்பாலும் சாட்டாமாறு காடுகளும், கடற்தாளைப் பற்றைகளையும், பல்லின பாசிகளையும் கூறலாம். இப்பகுதியில் விளை, ஓரா, ஒட்டி, கலைவாய், கிளி, சுங்கன்கெளுறு, செம்பல்லி, மதணன், செங்கண்ணி, பூச்சை, கறுவா, மசறி, கீளி, போன்ற மீன் வகைகளும் சிங்கறால் என்ற நண்டு இனமும், கட்டித்திருக்கை, கருவால்திருக்கையும் இக்கடல் பிரதேசத்தில் உருவாகிறது. அத்துடன் இக்கடல் பிரதேசத்தில் கணவாய், சிறையா போன்ற கூட்டமாக வாழும் மீனினத்தின் வாழ்விடமாகவும் இது உள்ளது. கணவாய் இப்பகுதியில் சாட்டமாறு, மற்றும் கடல் தாளையின் தண்டுகளில் இடும் முட்டைகள் நீரோட்டத்தின் உதவியுடன் மேற்கூறிய ஒரு பாக ஆழத்திற்கும் குறைந்த கள கடலின் கரை பகுதியை அடைகின்றன. அங்கிருக்கும் வெதுவெதுப்பான நீரினால் முட்டைகள் கணவாய் குஞ்சுகளாக பொரிக்கின்றன. குஞ்சுகள் பிற்பாடு நீரோட்டத்தின் உதவியுடன் வந்தவிடத்தை சென்றடைகின்றன. இக் கணவாய்கள் ஒன்றிலிருந்து இரண்டு பாக ஆழத்தில் களம் கண்டி பெரும் கூட்டம் வைத்திருக்கும் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது.

ஆனால் சிறையா மீன்கள் கரைசார் பகுதியில் முட்டையிடுகின்றன. அம் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவரும். அக் குஞ்சுகளை மணலை என அழைப்பர். சில மாதங்களின் பின் மணலைகள் வளர்ந்து நடுநிலை அடைகின்றபோது அவை களக்கடலில் இருந்து வெளியேறி, தாய் மீன்கள் இருக்கும் ஆழமான ஒரு பாக ஆழத்திற்கு மேற்பட்ட பகுதிக்கு புலம்பெயர்ந்து விடும். இந்நிலையில் அதை காடன் என்று அழைக்கப்படும். இக் காடன்கள் சினைக்கும் பருவம் அடையும் போது கிட்டத்தட்ட முழுவளர்ச்சியையும் அடைந்து விடும். அப்போது அதை சிறையா என அழைப்பார்கள். சினைத்து இனப்பெருக்க காலத்தில் அவை மறுபடியும் தாம் பிறந்த களக் கடலுக்கு முட்டையிட சிறையாக்கள், கூட்டம் கூட்டமாக வரும். இவைகளை விடுவலையை உபயோகித்து தொழிலாளர்கள் பிடிப்பது வழக்கம். இந்தவகை ஒரு பாக ஆழத்திற்கும் ஐந்து பாக ஆழத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதி மன்னார் விடத்தல்தீவு, இலுப்பைக் கடவை, வெள்ளாம்குளம், நாச்சிக்குடா ஊடாக கவுதாரிமுனை வரைக்கும். பின்பு மண்டைதீவு கரை தொடக்கம் வேலணை, செட்டிபுலம், புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, போன்ற தீவுகளின் பின்பக்கமாக தொடர்ந்து, காரைதீவு கற்கோவளம் ஊடாக பருத்தித்துறை முனை வரையும் தொடர்கிறது.

2. ஐந்து பாகத்திற்கு மேற்பட்ட ஆழம் கொண்ட கடற்பிரதேசம்.( இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல்வலைய எல்லை வரையான பிரதேசம்.)

இது தலைமன்னாரிலிருந்து கச்சதீவை உள்ளடக்கிய பாக்குநீரிணையின் நெடுந்தீவு வாய்க்கால், மேற்கு வாய்க்கால், காங்கேசன்துறைக்கு அடுத்துள்ள ஏழாம் வாய்க்கால் ஈறாக பருத்தித்துறையை அடுத்துள்ள கிழக்கு வாய்க்கால் வரை தொடர்கிறது. இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயதிற்குள் அடங்கும் இந்தப் பிரதேசத்தின் அகலம் 14 இக்கும் – 23 நோர்டிகல் மைலுக்கும் இடைப்பட்டதாகவுள்ளது. இந்தப் பிரதேசத்தின் ஆழம் பற்றி சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் 1979 – 1980 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசின் ஏற்பாட்டில் கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான பிரித்ஜோப் நான்சென் செய்த ஆவின்படி இப்பகுதியின் ஐந்திலிருந்து இருபது பாகத்திற்கு இடைப்பட்ட ஆழப் பிரதேசமாகும். இப்பகுதி மீன்வளம் கொழிக்கும் பிரதேசம் எனக் கணிக்கப்பட்டது. இதே ஆய்வின்படி இப்பகுதியின் கடலடித்தளம் பாரிய கடலடித்தள ஊழசநட சநநக எனப்படும் முருகைகளை (பவளப்பாறைகளை)க் கொண்டுள்ளது. அதனால் பவளப்பாறைகளை தன்னகத்தே கொண்ட கடலடிப் பிரதேசத்திற்கே உரித்தான தாவரவியலைக் கொண்டுள்ளது. பவளப்பாறைகளை உள்ளடக்கிய பிரதேசத்தின் தாவரவியலானது, மேற்கூறிய கற்கடல் பிரதேசத்தில் இருப்பதிலிருந்து வேறுபடுவதில்லை. இதன் அடிப்படையில் இதன் தாவரங்களாக சாட்டமாறு, பல்லின பாசிவகை, கடற்தாளை போன்றவற்றை குறிப்பிடலாம்.

இக்கடல் பிரதேசத்தில் பாரை, கட்டா, சீலா, சூடை, வளை, மண்டைக் கெளுறு, சூபாரை, கும்பிளா, பருந்தி போன்ற இருபதிற்கும் மேலான மீன்வகைகளும் வெள்ளைறால், சாக்குக்கணவாய், கல்லுத்திருக்கை போன்றனவும் பெருமளவில் உற்பத்தியாகிறது.

இந்திய கடலாதிக்கத்தால் எம் கடல்வளங்கள் அழிக்கப்படும் விதமும் அதன் தாக்கமும்.

மேற்கூறிய தலைப்பின் உள்ளடக்கத்தைப் பற்றிப் பேச முன்பு என் இளமைக்காலங்களில் இருந்து ஒரு நினைவு மீட்டல்:

எனது கிராமம் இலங்கையின் பொருளாதர அடிப்படையில், ஒப்பீட்டளவில் அனேகமாக நடுத்தரவர்க்க மீனவர்களைக் கொண்ட கிராமம். அங்கு எனது தந்தை வழி மாமா ஒருவர். அவரை ஐயாமாமா என்று நாங்கள் அன்பாக அழைப்போம். அவரை எங்கு கண்டாலும் பக்கத்தில் வந்து ”ஒழுங்கா படிக்கிறியா மருமகன்” என்று விசாரித்து விட்டு, எனது சேட்டு பையில் பணம் வைத்து விட்டு போவார். அதில் குறைந்தது ஐம்பது ரூபாயாவது இருக்கும். நாங்கள் அவரை ஐயாமாமா என்று அழைத்தாலும், ஊருக்கு வெளியில் அவரை “சர்க்கரை சம்மாட்டி” என்று அழைப்பார்கள். சிறிமா ஆட்சிக் காலத்தில் அவர் பதின்மவயதில் இருந்தபோது, அதிகாலை வேளை அவர் கோர்வலை வைக்க கடற்கரை பக்கம் சென்றார். அங்கே கரையில் ஆளில்லாத கட்டுமரமொன்றில் சர்க்கரை மூட்டைகள் இருப்பதைக் கண்டார்.

கடத்தல்காரர்கள் கட்டுமரத்தை கரையில் விட்டுவிட்டு அருகிருந்த பற்றைக்கருகில் நித்திரை கொள்வதை கவனித்த அவர், கட்டுமரத்துடனும், சர்க்கரை மூட்டைகளுடனும் தலை மறைவானார். பலவருடங்கள் கழித்து எழுபத்தி ஒன்பதாமாண்டு, Toyota Rosa வாகனத்தில் நான்கு பிள்ளைகளுடனும் மனைவியுடனும் ஊரில் வந்து இறங்கினார். ஊரில் அவரின் மனைவியை சிங்களத்தி என கிசுகிசுத்தனர். நெருங்கிய அவரின் குடும்பத்தினர் அவர் மனைவி தமிழச்சி தான் என்றும், அவர்கள் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு சரியாக தமிழ் தெரியாதெனவும் கூறினார். மாமா வரும் போது தனக்கு சொந்தமாக ரோசா மினி பஸ்சுடன் மட்டும் வரவில்லை. எமது ஊருக்கு முதன்முதலாக உள்ளக இயந்திரம் இணைத்த பாரிய மரத்தாலான படகுடன் தொழிலுக்கு தேவையான, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்த நவீன வலைகள் உபகரணங்களுடனும் வந்திருந்தார். உபகரணங்களும் படகும் அவரின் மனைவியின் உறவினர்களும் சில தென்னிலங்கை தொழிலாளிகளும் கடலால் கொண்டுவந்தனர். ஊரே வாயில் விரலை வைத்து அதிசயமாகப் பார்த்தது. இவ்வாறு சர்க்கரை கடத்தியவனிடமிருந்து இவர் களவாடியதனாலும், அதை வைத்து படகு வேண்டியதும் தான் இவர் “சர்க்கரைச் சம்மாட்டி” என்று அழைக்கப்பட்டதன் பின்னணி. சம்மாட்டி என்றால் வழமையாக “முதலாளியாகவே” விளங்கி கொள்ளும் தன்மை கடற்தொழிலுக்கு சம்பந்தமில்லாதவர்களிடமுண்டு. வழமையாக முதலாளிகள் தொழிலாளிகளுக்கு நாட்கூலி, அல்லது மாதக்கூலி கொடுப்பது வழக்கம். ஆனால் இலங்கை மீன்பிடிச்சமூகத்தில் அது சிங்களவன் ஆனால் என்ன தமிழன் ஆனால் என்ன, கூலி கொடுக்கும் வழமை எந்தக்காலத்திலும் இருந்ததில்லை. இலங்கையில் பங்குமுறை தான் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகின்றது. உதாரணமாக பிடிக்கப்படும் மீனின் வருமானத்தில், எரிபொருள், மற்றும் தொழிலாளிகளின் சாப்பாட்டுச்செலவு போக, மீதமானது படகும் வலையும் ஒருவருக்கு சொந்தமானால் அவருக்கு இரண்டு பங்கும் தொழிலாளிகளுக்கு ஆளுக்கு ஒரு பங்கும் வழங்கப்படும். வள்ளம் வலை வைத்திருப்பவர் கடன் வாங்கி, வட்டி கட்டினால் அதற்கு தொழில் நன்றாக இருக்கும் போது ஒரு பகுதியை ஒதுக்குவர். அதேபோன்று ஒரு தொழிலாளியின் குடும்பத்தில் ஏதாவது நல்லது, கெட்டது நடந்தால் ஒருநாள் உழைப்பையோ அல்லது உழைப்பின் ஒரு பகுதியையோ வழங்குவதும் வழமை. இதில் கிராமத்திலுள்ள மற்ற தொழிலாளர்களும் பங்கெடுப்பது இயல்பாக நடப்பதொன்று. இதேபோலவே கிராமங்களில் பள்ளிக்கூடம் திருத்துதல், கோவில் திருவிழா, வீதி செப்பனிடல் போன்ற பொது செலவுகளுக்கும் உழைப்பை வழங்குவர். இதை “உழைப்பெடுத்தல்” என்று கூறுவர்.

சர்க்கரைச் சம்மாட்டி எனது மாமனும்; சமுதாய வழமைக்கேற்ப பங்கு வழங்கி தொழில் நடத்துபவராக விளங்கினார். எண்பத்தி மூன்றாம் ஆண்டிற்கு பிற்பாடு கடல்வலைய மீன்பிடி தடைச்சட்டம் இலங்கை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சர்க்கரை மாமாவின் தொழில் முடக்கப்பட்டது. எண்பத்தி ஆறாம் வருடம் முற்றாக தொழில் செய்ய முடியாததனால் அவரின் இயந்திரப்படகு கரையில் ஏற்றப்பட்டிருந்தது. அந்தக் காலப்பகுதியில் காரைநகர் கடற்படை முகாமை சேர்ந்த வீரய சூரைய என்ற பீரங்கிப் கப்பல் கடலில் இருந்து கரையை நோக்கி எந்தவிதக் காரணமும் இல்லாமல் குண்டுமழை பொழிவது வழக்கம். இதனால் மீன்பிடி சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். வீடுகளும், கரையில் நின்ற படகுகளும், உபகரணங்களும் அழிக்கப்பட்டது. எண்பத்தாறாம் வருடம் சித்திரை மாதத்திலொரு நாள் வீரய சூரைய பீரங்கியின் குண்டுகள் சர்க்கரை மாமாவின் கரையோரமிருந்த அவரின் வீட்டையும், அதன் முன் ஏற்றியிருந்த படகையும் முற்றாக அழித்தன. குண்டு விழுந்து படகு தீப்பற்றி எரிந்தது. குடும்பத்தினர் காயங்களுடன் உயிர்தப்பினர். றிபிள்பைவ் சிகரட்டுடன், கிப்ஸ் சாறமும் வெள்ளைச் சேட்டும் அணிந்து கம்பீரமாக வலம் வந்தவர், குறுகிப்போனார். வறுமை தாக்கியது. மூத்தமகளுக்கு சீதனம் கொடுக்கக் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் அடைக்க முடியாமல் திண்டாடினார். அதுவரை தமிழ் தேசியவிடுதலைப் போராட்டம் பற்றி எந்தக் கருத்தும் இல்லாதிருந்தவர் திடீர் தேசியவாதியானார். மூன்று மகன்களில் ஒருவர் புலியில் சேர்ந்தான். மற்ற இருவரும் கல்வியை நிறுத்தி விட்டு நாளாந்த சீவியத்தை கவனிக்க கரைசார் கடற்றொழிலில் ஈடுபட்டனர். பின் வந்த காலத்தில் றிபிள்பைவ் சிகரட் வாங்க வசதியில்லாவிட்டாலும் ஆர்விஜி பீடி கையில் ஏந்தியபடி பழைய கம்பீரத்துடன் அவர் தமிழ்ஈழ ஆதரவாளராக வலம் வந்ததுடன் வன்னிக்கு புலம்பெயர்ந்து தொழில் செய்தார். முள்ளிவாய்க்கால் அவலத்தில் எல்லாம் இழந்தவர்; ஊர் திரும்பி மறுபடியும் தனது பிள்ளைகளுடன் கடற்றொழில் செய்து வயிற்றைக் கழுவ முயலுகின்றார். அன்று படகும் வீடும் அழிந்தபோது தேசியவாதியாகி தமிழீழம் தான் முடிவென்று தன் பிள்ளையை போராட அனுப்பியவர். இன்று அதே பிள்ளைகளுடன், அவர் தனது குடும்பத்தின் அன்றாட செலவுக்காக கடலில் இருந்து வரும் வருமானத்தை தடுக்கும் இந்திய அழிவு மீன்பிடியை எதிர்த்து மாதகல் கரையிலும், பருத்தித்துறை முனையிலும் சகதொழிலாளிகளுடன் இணைந்து போராடுகிறார். அன்று அவர் படகும் வீடும் அழிந்தபோதும் சரி தவறுகளுக்ககப்பால் அவரது அரசியல் அபிலாசையைப் பயன்படுத்த ஏதோ ஒரு சக்தி அன்று இருந்தது. இன்று அவர் அன்றாடம் காச்சியாகி, நாளாந்த சோற்றுக்கே கஸ்;டப்படும் வேளை அவரின் நியாயமான போராட்டத்தை நெறிப்படுத்தவோ, ஆதரவு வழங்கவோ இன்று ஒருவருமில்லை.
இழுவைப் படகுகளின் பாதிப்புகள்

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இனவெறிப்போரின் கொடுமையிலிருந்து தப்பிய என் மாமன் குடும்பம் போல பல ஆயிரம் குடும்பங்கள் இன்று இந்திய இழுவைப்படகுகளின் கடற்கொள்ளையால் அன்றாடம் சோற்றுக்கு தவிக்கும் நிலையில் உள்ளனர்.

இழுவைப்படகு மீன்பிடி என்பது படத்தில் காண்பது போன்று இயந்திரப்படகின் கடையால் பகுதியில் பாரிய பை போன்ற வலையை இணைத்து இயந்திர உதவியுடன் கடல் அடித்தளத்தை வடிகட்டுவதாகும். இந்த வகை மீன்பிடி முறையானது பின்வரும் கடல்வள அழிவையும், இயற்கை மாசடைதலையும் ஏற்படுதுகிறது.

அவையாவன :

1. மீனின் வகை, தொகை, நிறை, அளவு போன்ற எதையும் கணக்கில் கொள்ளாமல் மீன்பிடித்தல்

2. கடலடித்தள தாவரங்களை அழிப்பதன் மூலம் தாவரவியலில் மாற்றமேற்படுத்துவது

3. கடலடித்தள பவளப்பாறைகள் – முருகைகளை அழித்தல்

4 மீன் இனத்தின் முட்டைகளையும் குஞ்சுகளையும் அழிப்பதன் மூலம் மீன் உற்பத்தியை தடைப்படுத்துதல்

5. இயற்கையின் சமநிலையைக் காக்கும் கடலடித்தள சிறு நுண்ணுயிர்களையும் உணவுக்கு உதவாத மீன்வகைகளையும் அழிப்பதன் மூலம் இயற்கை அழிவை ஏற்படுத்தல்.

6. பலமணி நேரம் தொடர்ச்சியாக இழுவைப்படகு இயங்குவதன் மூலம் பல நூறு லீட்டர் எரிபொருள் மூலம் சூழல் மாசடைதல்.



இதில் முதல் நான்குவகை பாதிப்புகளும் உடனடியாகவும் நேரடியாகவும் கரையோர மற்றும், இழுவைப்படகில் அல்லாமல் வலைப்படுப்பு மூலம் ஆழ்கடலில் தொழில் செய்வோரை பாதிக்கின்றது. கடைசி இரு பாதிப்புகளும் நீண்டகால போக்கில் மீனவர்களையும், இயற்கையையும், இதன் அடிப்படையில் மனித குலத்தையே பாதிக்கும்.

இழுவைப்படகு மூலம் மீன்பிடித்தல், இன்றுள்ள வேற்றுத் தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் அதீத பிடிதிறன் கொண்ட தொழில் நுட்பம். எண்பதுகளின் ஆரம்பத்தில் இழுவைப்படகு மீன்பிடியின் பாதிக்கும் தன்மையைக் கடலாய்வு மூலம் கண்டறியப்பட்டு, மீன்பிடி ஆராய்ச்சி மையங்கள் இதற்கு நிகராக பலவருடங்களாக முயன்றும் இன்றுவரை மாற்று தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோன்று இந்தத் தொழில் நுட்பத்தின் பாதிக்கும் தன்மைகளை விலக்கி நவீனமயப்படுத்தும் முயற்சியும் இன்றுவரை தோல்வியிலேயே முடிந்துள்ளது. காரணம் கடலில் இயற்கையான பௌதீக தன்மைக்கு முரணாக தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாமையேயாகும்.

இந்த இழுவைப்படகு தொழில்நுட்பத்தை கவனித்தால், ஏன் இதன் பாதிப்பைக் குறைத்து நவீனமயப்படுத்த முடியாதென்பதை விளங்கிக் கொள்ளலாம். இழுவைப் படகின் கடையாலில் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் வலையானது இரு பகுதிகளைக் கொண்டது. அதன் அகண்ட முதற்பகுதியை மடி என அழைக்கப்படும். அதன் ஒடுங்கிய அடிப்பக்கம் தூர் எனப்படும். மடியின் வாயின் கீழ்ப்பகுதியில் ஈயம் அல்லது இரும்பினாலான உருளைகளும், அதன் மேற்பகுதியில் மிதவைகளும் பிணைக்கப்பட்டிருக்கும். மடியின் வாயை அகட்டில் வைத்திருப்பதற்காகவும், மடியை இழுக்கும் போது ஒலி எழுப்பியும், நிலத்தில் உள்ள அடித்தள மீன்களை விரட்டி மடி வாயில் அனுப்புவதற்காகவும், மடியானது படகு இழுக்கும் போது நிலமட்டத்திலிருந்து மேல் கிளம்பாமல் இருப்பதற்காகவும் மடியின் வாயின் இரு பகுதிலும் பல நூறு கிலோ எடை கொண்ட இரும்பினாலான கதவுகள் இணைக்கப்பட்டிருக்கும்.

கடலடித்தளதிலுள்ள தாவரங்களையும், முருகைகளையும் அழித்தொழிக்கும் இழுவைமடியுடன் இணைக்கப்படும் இரும்புச்சங்கிலிகளும், இருபக்க இரும்புக் கதவுகளும், மடியின் அடியில் பிணைக்கப்படும் உலோக உருளைகளும் இல்லாமல் இழுவை தொழில் நுட்பத்தை உருவாக்க முடியாது. குறிப்பாக கடல் அடித்தளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மடியில் இருபக்கமும் இணைக்கப்படும் இரும்புக் கதவுகள் இல்லாமல் பாவிக்கக்கூடிய இழுவைமடியை உருவாக்க முடியாது . கடலில் பவுதீகவியலுக்கேற்ப மடியை கடலடித்தளத்திற்கு கொண்டு செல்லவும், படகு இழுக்கும் போது அதை ஒரேநிலையில் வைத்திருக்கவும் பாரமான ஏதாவது ஒரு பொருள் மடியுடன் இணைக்கப்பட்டே ஆகவேண்டும். இல்லையேல் மடி கடல் மேற்தளத்தில் மிதந்தபடி இருக்கும். மீன்பிடிக்க முடியாது. இவ்வாறு இந்த தொழில் நுட்பம் ஏற்படுத்தும் பாதிப்பை நிவர்த்தி செய்ய முடியாமையினாலேயே, இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த மேற்கைரோப்பிய நாடுகள் இழுவைப்படகு பாவனையை தமது கடல் வலயத்தில் தடைசெய்துள்ளனர் அல்லது பாவனையை கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளனர்.

படம் 1 . இழுவைப்படகு மீன்பிடிக்கு முன் உள்ள கடலடித்தளம்

இதனடிப்படையில் மேற்கூறியபடி கடலடித்தளத்தின் சீவராசிகளையும், தாவரங்களையும், நில அடித்தள பவளப்பாறைகளையும் அழிக்கும் தொழில் நுட்பத்தை பாவித்து இந்திய இழுவைப் படகுகள் நம் தேசத்தின் வடகடலில் ஒரு பாக ஆழத்திற்குட்பட்ட களக்கடல் தவிர்ந்த அனைத்து கடல் பிரதேசத்திலும் மீன்பிடிக்கின்றனர். இதனால் களக்கடலில் களங்கண்டி, மற்றும் விடுவலை இழுக்கும் தொழிலாளர்களிலிருந்து, கண்ணாடியிழைப் படகுகளில் அறக்கொட்டியான் வலைத்தொழில் செய்பவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

படம் 2. அதே இடத்தில இழுவைப்படகு மீன்பிடித்த அரை மணி நேரத்தின் பின் எடுக்கப்பட்ட படம்

உதாரணம் 1 இந்திய இழுவைப்படகுகள் எழுவைதீவுக்கும், காரைதீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் மீன்பிடிப்பதனால், ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு, மெலிஞ்சிமுனை, கெட்டில் போன்ற பிரதேசங்களில் கார்த்திகை மாதத்திலிருந்து சித்திரை மாதம் வரை களங்கண்டி மூலம் கணவாய் பிடிக்கும் தொழில் கடந்த ஆறுவருடங்களாக பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. மேற்கூறிய கிராமங்களில் 2003 ம் வருட கணக்கெடுப்பின்படி மொத்தமாக நூற்றி இருபது கடல்தொழிலாளர்கள் களங்கண்டியை தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்கள் கார்த்திகை மாதத்திலிருந்து சித்திரை 2003 வரையான காலத்தில் மாதாந்தம் ஒவ்வொருவரும்; சராசரி 45 கிலோ கணவாய்களை பிடித்துள்ளனர். ஆனால் யுத்தம் முடிந்த பிற்பாடு இன்று மொத்தமாக 32 தொழிலாளர்களே கணவாய் பிடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் மீன்பிடிச் சங்கங்களின் தகவலின்படி 2010 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 15 கிலோ கணவாயே மாதாந்தம் பிடித்துள்ளனர். அதுவும் இப்பிடிபாடு கணவாய் அதிகமாகப் பிடிபடும் மார்கழி மற்றும் தை மாதத்திலேயே பிடித்துள்ளனர். பெரும்பான்மையானோர், பிடிபாடு குறைந்ததால் தை மாதத்தின் பின் களங்கண்டி தொழிலை நிறுத்தி விட்டனர். இவ்வாறு கணவாய்த் தொழில் படுத்ததற்கு நேரடிக் காரணமாக தொழிலாளர்கள் இந்திய இழுவைப்படகுகளையே குற்றம் கூறுகின்றனர். எழுவைதீவுக்கும், காரைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் உள்ள கடற்தாளைகளைக் காடுகளிலும், சாட்டாமாறுப் புதர்களிலும் கணவாய்கள் முட்டையிடுகின்றன. ஐப்பசி மாதத்தில் தொடங்கும் வாடைக்காற்று காலத்தில் ஏற்படும் நீரோட்டத்தால் முட்டைகள் தீவுகளுக்கும் ஊர்காவற்றுறை தீவுக்கும் இடைப்பட்ட குடாவுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன. அவை மேற்கூறிய கிராமங்களில் களப்பிரதேசத்தை அடைந்து அங்கு குஞ்சு பொரிக்கின்றன. அவை வளர்ந்து சில மாதங்களில் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது. ஆனால் இழுவைப்படகுகள் முட்டையிடும் கணவாய்களை வகை தொகையின்றி பிடிப்பதுடன், அவைகளின் வாழ்வாதாரமான கடற்தாளைகளையும், சாட்டாமாறுகளையும் அழிப்பதனால் கணவாய்களின் உற்பத்தி குறைகின்றது. இது அப்பகுதி மீனவர் கருத்து மட்டுமல்ல, இது செனகல் நாட்டின் கரையோரம் நடாத்தப்பட் ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Tuesday, February 4, 2014

மாவீரர்களை மதிப்போம்!அவர்கள் பெயரில் மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்போம்!!!


நினைவு நாட்கள் என்பது சமூக மேற்கட்டுமானங்களில் ஒன்று. அனைத்து தமிழீழ விடுதலை இயக்கங்களுமே போராட்டங்களில் உயிர்நீத்த போராளிகளுக்கான அஞ்சலிகளை, நினைவுகளை வெகு சிறப்பாகவே கொண்டாடி வந்தனர். இதன்மூலம் போராட்டத்தில் இணைகின்ற ஒவ்வொரு போராளியும் மரணத்தின் பின்னரும் தங்களது நினைவுகள் தொடரும் என்பதையும் தங்களது சமூக மதிப்பையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. அதனால் அவர்கள் தங்களது உயிர்கள் மிக உன்னதமான நோக்கத்திற்காக இழக்கப்படுவதை பெருமையாகவும் கருதினர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது உயிரிழப்பு உரும்பராயைச் சேர்ந்த பொன் சிவகுமாரனின் உயிரிழப்பாகவே கொள்ளப்படுகிறது. யூன் 05 1974 பொன் சிவகுமாரன் சயனைட் (நஞ்சு) உட்கொண்டு உயிரிழந்தார். இதிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட உயிரிழந்த போராளிகளின் பட்டியல் மிக நிளமானது. ஆனால் துரதிஸ்டவசமாக இந்த விடுதலை இயக்கங்களிடமே தங்கள் அமைப்பில் இருந்து கொல்லப்பட்ட போராளிகளின் விபரங்கள் முழுமையாக இருக்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே தங்கள் இயக்கத்தில் இருந்து கொல்லப்பட்ட போராளிகளின் முழுமையான பட்டியலை வைத்திருந்தனர். அதற்கான நிர்வாகக் கட்டமைப்பையும் அவர்கள் கொண்டிருந்ததால் ஆவணப்படுத்தவும் அவர்களால் முடிந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு உன்னத நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்ட போதும் அது ஆரம்பிக்கப்பட்ட வேகத்திலேயே தடம்புரண்டது. போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள், உன்னத நோக்கத்திற்காக தங்கள் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்தனர். ஆனால் போராட்டத்தை முன்னெடுத்த தலைமைகள், பெரும்பாலும் தமிழ் மக்களின் அதிகார மையத்தை, தங்கள் கைகளில் வைத்துக்கொள்வதற்கு மட்டுமே அதனைப் பயன்படுத்தினர். இலங்கை அரசாங்கத்துடனான அதிகாரத்திற்கான போட்டியாக மட்டுமே இப்போராட்டம் அமைந்தது.

ஒவ்வொரு இயக்கத்தில் இருந்தும் உன்னத நோக்கங்களுக்காகச் சென்றவர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிரியாகக் கருதப்பட்ட, இலங்கை அரச படைகளினால் கொல்லப்படவில்லை. கணிசமானவர்கள் தங்கள் இயக்கங்களில் இடம்பெற்ற உட்படுகொலைகளிலும், இயக்கங்களிடையே இடம்பெற்ற மோதல்களிலும் கொல்லப்பட்டனர். அதனை விட இவ்வியக்கங்கள் தமிழ் மக்கள் மீதும், சகோதர இனங்களான முஸ்லீம், சிங்கள மக்கள் மீதும் படுகொலைத் தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர். அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுகூரல் என்பது போராளிகளின் நினைவுகூரலாக மட்டுமல்லாமல் இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த அனைவரினதும் நினைவாகக் கொல்லப்பட வேண்டும்.

அல்பிரட் துரையப்பாவின் கொலையில் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் போராட்டம் அவரைப் படுகொலை செய்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படுகொலையில் முடிவடைந்தது. இவ்விரு கொலைகளுக்கும் இடையே நடந்து முடிந்த உயிரிழப்புகள், அவலங்கள் இவற்றின் சாட்சியாக நாம் தற்போது வாழ்ந்துகொண்டு உள்ளோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது பாதையில் இருந்து தடம்புரண்டதால் அதற்காக உயிர்நீத்த போராளிகள், அந்தப் போராட்டத்திற்காகச் சென்றவர்கள், வேறு வேறு நோக்கங்களுக்காக உயிர் பறிக்கப்பட்ட போராளிகள் என, இவர்களது தியாகங்களைச் கொச்சைப்படுத்திவிட முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகச் சென்ற போராளிகள், அவர்கள் எந்த விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நினைவுகூரப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உயிரிழந்த போராளிகளை கௌரவிக்கின்ற ஒரு கலாச்சாரத்தை தங்கள் அமைப்பிற்குள் மிகத் திட்டவட்டமாக வளர்த்தெடுத்தனர். ஏனைய அமைப்புகளும் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்ட போதும் அவை தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஸ்தாபனமயப்பட்டதாக அமையவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளை மாவீரர்களாகக் கௌரவிக்கின்ற முறைமையானது தொடர்ச்சியாக போராளிகளை உள்வாங்கவும் கரும்புலிகளை உருவாக்கவும் உதவியது.

1982 நவம்பர் 27ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி லெப்.சங்கர் உயிரிழந்ததன் ஞாபகார்த்தமாக உயிரிழந்த (விதைக்கப்பட்ட) விடுதலைப் புலிகள் அனைவரதும் தினமாக மாவீரர் தினம் நினைவு கூரப்படுகிறது. இது விடுதலைப் புலிகளின் நாட்காட்டியில் ஒரு முக்கிய தினமாகும். உத்தியோகபூர்வமாக பிரபாவின் வருடாந்த அறிக்கையும் இத்தினத்தில் வெளியிடப்படுவதால், இந்நாள் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை மிகமுக்கிய தினமாக அமைந்தது.

1982ல் முதல் மாவீரன் உயிரிழந்த போதும் 1989 முதலேயே மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு கலாச்சார வடிவமாக்கப்பட்டது. ஆனால் 1992 முதலே பிரபாவின் மாவீரர் தின உரைகள் பதிவில் உள்ளது.

1982 நவம்பர் முதல் 2008 ஓகஸ்ட் வரை விடுதலைப் புலிகள் அமைப்பில் மட்டும் உயிரிழந்த போராளிகள்:
1982 – 1, 1983 – 5, 1984 – 36, 1985 – 123, 1986 – 258, 1987 – 451, 1988 -363, 1989- 372, 1990 -961, 1991- 1614,
1992 – 788, 1993 – 925, 1994 – 375, 1995 – 1505, 1996 – 1376, 1997 – 2106, 1998 – 1798, 1999 – 1545, 2000 – 1980, 2001 – 759, 2002 – 38, 2003 – 72, 2004 – 80, 2005 – 56, 2006 – 1002, 2007 – 954, 2008  ஒக்ரோபர் 31 வரை 1974 போராளிகள் உயிரிழந்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் போரளிகளது உயிரிழப்புகளை 2008 ஒக்ரோபர் 31 வரை 22 114 உயிரிழந்த போராளிகளை முறையாக ஆவனப்படுத்தி உள்ளனர். அதற்குப் பின் மே 18 2009 வரையான 7 மாதங்களிள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்காண போராளிகள் தலைவர்கள் – தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உட்பட பெரும்பாலான போராளிகளை அவர்களால் ஆவணப்படுத்த முடியவில்லை. அவர்களது விபரங்களும் சேர்க்கப்படும் பட்சத்தில், முதல் போராளி லெப் சங்கர் முதல் 25,000க்கும் அதிகமான போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மட்டும் உயிரிழந்து இருப்பர். இப்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உட்கட்சிப் படுகொலைகளில் கொல்லப்பட்ட மாத்தையா மற்றும் நூற்றுக்கணக்கான போராளிகள் இடம்பெற்றிருக்கவில்லை. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட போராளிகள் ஆவணப்படுத்தப்படாமைக்கு அவர்கள் அமைப்பில் இருந்ததை உறுதிப்படுத்த முடியாமையும், உயிரிழப்பை உறுதிப்டுத்த முடியாததும் முக்கிய காரணமாகும். ஆனால் தலைமைகளது உயிரிழப்பைப் பொறுத்தவரை, தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பை தொடர்ந்தும் குலையாமல் வைத்திருக்க அவர்களது உயிரிழப்பை மறைத்து ஒரு மாயவலையே பின்னப்பட்டு உள்ளது.

மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் என்பதில் யாரும் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருக்க முடியாது. தலைமைகள் தவறான அரசியலை முன்னெடுத்ததற்காக, உன்னத லட்சிம் ஒன்றிற்காகப் போராடுவதாக எண்ணி, தம் இன்னுயிரை ஈர்ந்தவர்களை உதாசீனம் செய்வது மிகத் தவறு. ஆனால் அவர்களை எவ்வாறு நினைவுகூருகிறோம் என்பது மிகவும் முக்கியம். பல இலட்சக்கணக்கான செலவில் ஒரு பணச்சடங்காக மாவீரர் தினம் ஆக்கப்படுவது எந்த நோக்கத்திற்காக என்ற கேள்வி தவிர்க்க முடியாது. லண்டனைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு மாவீரர் தினக் கணக்கு வழக்குகள் சில ஆயிரம் பவுண்கள் நட்டமாகக் காட்டப்பட்டு முடிக்கப்பட்டதாக அதனுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் தெரிவித்தார். இவ்வாண்டும் 300 000 பவுண்வரை செலவிடப்படுகின்றது.

அதேசமயம் மே 18 2009ல் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் பல நூறு ஆயிரம் போராளிகள் மரணத்தின் விளிம்புவரை சென்று தப்பியுள்ளனர். இவர்களில் பலநூறு ஆயிரம் பேர்கள் அங்கவீனர்களாக காயம் பட்டவர்களாக உறவுகளை இழந்தவர்களாக உள்ளனர். இவர்களைப் போராட்ட களத்திற்கு அனுப்பியதில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. இன்று இவர்கள் அனாதரவாக யாருக்கு எதிராகப் போராடினார்களோ, அவர்களின் பாராமரிப்பிலும், அவர்களின் உதவியிலுமே முழுமையாகத் தங்கி இருக்க வேண்டிய நிலையுள்ளது.

இவ்வாறான போராளிகளை இந்தப் போராட்டத்திற்குள் தள்ளிய, மேற்குநாடுகளில் வாழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிலருக்கு மே 18 2009ல் ‘ஜக் பொட்’ – லொட்ரி விழ்ந்தது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் 300 மில்லியன் டொலர்கள் வரை பெறுமதியான ஆண்டு வருமானமும் 5 பில்லியன் வரை பெறுமதியான சொத்துக்களும் இரவோடு இரவாக காணாமல் போய்விட்டது. லொட்ரியில் வென்றவர்கள் தங்கள் தங்கள் தொகையைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இதில் கோட்டை விட்ட பலரும் உள்ளனர். ‘தலைவர்’ கேட்டுக் கொண்டதற்காக, திருப்பித் தருவார்கள் என்ற நம்பிக்கையில், தங்கள் வீடுகளை வைத்து கடன்பெற்று (லோன் அல்லது ரீமோட்கேஜ்) வசூல் ராஜாக்களிடம் பணம்கொடுத்த பலருக்கு நாமம் போடப்பட்டு உள்ளது. மே 18க்கு சில தினங்களுக்கு முன்னாகக் கூட பல ஆயிரம் பவுண்களை, இந்த வசூல் ராஜாக்களிடம் வழங்கியவர்கள் உள்ளனர்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகக் கூறிக்கொண்ட பலரை இப்போது காணமுடிவதில்லை என மேற்குலகில் வாழ்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அல்லாமல் நேர்மையாக நடந்தவர்கள் லண்டனில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கௌரவிக்கப்பட்டும் உள்ளனர்.

இது இப்படியிருக்க மீண்டும் வசூல் ராஜாக்கள் நிதி சேகரிப்பிற்குப் புறப்பட்டு உள்ளனர். தற்போது மாவீரர் தினத்துக்கான நிதி சேகரிப்பு. பிரித்தானியாவில் இயங்கும் தொலைபேசி அட்டை நிறுவனம் ஒன்று மிகப்பெரும் தொகைப் பணம் வழங்கியதாகத் தெரியவருகிறது. அதனைவிட தனிப்பட்ட வர்த்தகர்களிடமும் பல ஆயிரங்கள் வசூலிக்கப்படுகிறது. இதற்குமேல் கலந்துகொள்பவர்கள் 50 பவுண் ரிக்கற் மற்றும் பூ விற்பனை, கொடி விறபனை என்று எல்லா விற்பனையுடன் தமிழீழமும் 5 பவுணுக்கு விற்கப்படும். இதற்கான கணக்கு வழக்குகள் சில மாதங்களுக்குப் பின் சில ஆயிரம் பவுண்கள் நட்டம் என்றும் காட்டப்படும். இதுவே வழமையான மாவீரர் தினக் கொண்டாட்டம்.

ஒருநாள் கொண்டாட்டத்திற்கு இவ்வளவு செலவு செய்யும் இவர்கள், உயிரிழந்த மாவீரர்களுக்கு ஒரு உத்தியோகபூர்வ இணையத்தை உருவாக்கி அவர்களது விபரங்களை அங்கு முழுமையாகப் பதிவிடவில்லை. இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாகக் குழப்பங்கள் இருந்த போதும் 2008 ஓக்ரோபர் 31 வரை ஆவணப்படுத்தப்பட்ட விபரங்களைக் கூடப் பதிவிடவில்லை.

மாவீரர் தின நிகழ்வை மிக எளிமையாக செலவுகள் எதுவும் இன்றி கொண்டாட முடியும். லண்டன் நகரில் உள்ள மிகப்பெரும் பூங்காவான ஹைட்பார்க் கோனருக்கு உறவுகளை மாவீரர்களுடைய படங்களுடனும் மெழுகுவர்த்தியுடன் வந்து நினைவுகூரச் செய்ய முடியும். திறந்தவெளிப் பூங்காவில் இதனைச் செய்யலாம். ஆனால் அதனைவிடுத்து லண்டனில் எக்செல் போன்ற மண்டபங்களில் பணத்தை வாரி இறைத்து எதற்கு இந்த ஆடம்பரம்? இந்த ஆடம்பரத்திற்கு வழங்கும் செலவுகளை பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும் செலவிட ஏன் இவர்கள் முன்வரவில்லை? பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களையும் பாதிக்கப்பட்ட போராளிகளையும் நடுத்தெருவிற்குக் கொண்டுவந்து விட்டு பிரான்ஸ், லண்டன், ரொறன்ரோ, சிட்னி என்று மாவீரர் தினத்தைக் கொண்டாடுவது அந்த மாவீரர்களை அவமதிப்பதற்குச் சமன்.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்பது இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் என்றும் அவ்வாறு மறுவாழ்வு அளிக்கக் கோருவது இலங்கை அரசின் உளவியல் யுத்தம் என்றும் கண்டுபிடிக்கின்ற கீபோட் மார்க்ஸிஸ்டுக்கள் அல்லது மார்க்ஸியப் புலிகள் சில தற்போது உறுமிக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் உலாவருகின்றன. இவர்கள் இன்னமும் அவலத்தை வைத்து அரசியல் செய்கின்ற புலி அரசியலையே தொடர முற்படுகின்றனர். மக்கள் அடிப்படைத் தேவைகளுடன் இருந்தால் அவர்கள் போராட வரமாட்டார்கள், மேற்கு நாடுகளில் இருந்து கொண்டு தொடர்ந்தும் கோஸம் எழுப்பிக்கொண்டிருக்க முடியாது, தங்கள் அரசியல் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது போன்ற காரணங்களுக்காக இவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய அக்கறை எதுவும் இன்றி அரசியல் செய்ய முற்படுகின்றனர்.

பிரித்தானியாவில் மட்டும் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு 300 000 பவுண்கள் செலவிடப்பட உள்ளது. இவ்வாறு மேற்கு நாடுகளின் தலைநகரங்கள் எல்லாம் இந்நிகழ்வு பெரும் நிதிச் செலவில் நடாத்தப்பட உள்ளது. ஆனால் தாயகத்திலோ போராடச் சென்றவர்கள் அடிப்படை வசதிகளின்றி தங்கள் கால்களை இழந்து, கைகளை இழந்து தங்களுக்கான செயற்கை உறுப்புகளுக்குக் கூட வசதியின்றி வாழ்கின்றனர். மாவீரர்களின் பெயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிப்பதன் மூலம் மட்டுமே அம்மாவீரர்களை மதிக்க முடியும்.

தாயகத்தில் அரச படைகள் மாவீரர் துயிலும் இல்லங்களின் கல்லறைகளை பெயர்த்தெடுத்தனர். ஆனால் புலம்பெயர் உறவுகளோ மே 18 2009 வரை தொப்புள்கொடி உறவென்றனர் ஆனால் இப்போது அந்த உறவுகளின் உணர்வுகளையும் பெயர்த்தெறிகின்றனர்.

தமிழக 5ம் கட்ட வீரவாள்கள் வைகோ – நெடுமாறனுக்குப் பகிரங்கக் கடிதம்


மரியாதைக்குரிய திரு.வைகோ மற்றும் நெடுமாறன் அவர்கட்கு,

இவ்வாண்டு மாவீரர்நாள் நிகழ்வுகளின் போது தாங்கள் ஆற்றிய உரைகளை ஒளி, ஒலி மற்றும் இணையவழி ஊடகங்கள் ஊடாக அறியும் வாய்ப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களுக்குக் கிட்டியது. அவற்றில் நீங்கள் வெளிப்படுத்திய நம்பிக்கை, குறிப்பாக தலைவர் பிரபாகரன் அவர்கள் மீள வருவார் – ஈழப்போரை மீள வழிநடத்துவார் என்கின்ற செய்தி ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இந்தக் கடிதத்தினை எழுத முற்படுகின்றேன்.

2009 மே18ற்குப் பிற்பாடு தமிழ்சமூகத்தின் ஆன்மாவினை உலுக்கும் கேள்விகளில் பிரதானமானது தலைவர் பிரபாகரனின் வாழ்வுபற்றியது. சிறீலங்கா அரசானது தலைவரின் சாவினை முதலில் அறிவித்தது. பிற்பாடு புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்குப் பொறுப்பானவராக அன்று செயற்பட்ட கேபி தலைவர் வீரச்சாவினை அடைந்துவிட்டார் என்று அறிவித்தார். புலிகளின் புலனாய்வுத்துறையின் சர்வதேச பொறுப்பாளர் வீரச்சாவு செய்தியினை உறுதி செய்து அறிவித்தார். ஆனால், அந்தக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் நீங்கள் இருவரும் வீரச்சாவு என்ற அறிவிப்பை மறுத்தீர்கள். பின்னர் அங்கும் இங்குமாக அந்த மறுப்பினை மீள வலியுறுத்திய நீங்கள் தமிழீழ மக்களின் வாழ்வில் முக்கியமான நிகழ்வான மாவீரர்நாள் நிகழ்வுகளின் போது தலைவர் உயிருடன் இருக்கின்றார் – மீள வருவார் என்று உரக்க சொல்கின்றீர்கள்.

தங்களின் அறிவிப்பு புலம்பெயர்ந்த தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றது. தலைவர் நாளையோ, நாளை மறுதினமோ மீள எம் முன்பாக வந்து போரினை தலைமையேற்பார் என்கின்ற தோற்றத்தினைக் கொடுக்கின்றது. தலைவர் வரும்வரை எந்த அரசியலையும் ஏற்றுக்கொள்ளாது 2009மே18வரை சொல்லப்பட்ட அரசியலை மட்டுமே முன்வைக்கும் கடப்பாடு எமக்குள்ளதாக எம்மை நம்பவைக்கின்றது. மே-18ற்குப் பிற்பாடு ஏற்படும் எந்த சர்வதேச மாற்றங்களையும், தாயக மாற்றங்களையும் அங்கீகரிக்க மறுக்கும் மனப்பான்மை உருவாகுகின்றது. ஏனெனில் தலைவர் இருப்பு உறுதியாக உள்ளமையால் முடிவுகள் அவரால்தான் எடுக்கப்பட வேண்டும். அவர் இருக்கின்றார் என்று கூறிக்கொண்டு சென்னையில், லண்டனில், ஒஸ்லோவில் முடிவுகள் எடுக்கப்பட முடியாது. உணர்வுபூர்வமாக நானும் உங்களை நம்புகின்றேன். அல்லது நம்பமுயல்கின்றேன். ஆனால், எனது பகுத்தறிவும், அரசியல் அறிவும் உங்களிடம் பல கேள்விகளை எழுப்ப முற்படுகின்றது. அதன் விளைவுதான் இந்தப் பகிரங்கக் கடிதம். இதனைப் பகிரங்கமாக எழுதுவதன் காரணம் இது பலரது மனதில் எழுகின்ற கேள்விகளை உள்ளடக்கியது என்பதால் மட்டுமே.

ஐயா,

தலைவர் உயிருடன் உள்ளார் என்று தாங்கள் 2009 மே மாதம் முதல் சொல்லி வருகின்ற போதும் அதற்கான எதுவித ஆதாரங்களையும் தாங்கள் முன்வைக்கவில்லை. தலைவர் உங்களிடம் எதாவது செய்தியினை சொல்லிவிட்டதாகவும் நீங்கள் சொல்லவில்லை. மறுபுறம், தலைவர் ஈழமக்களுக்கு தன் சகாக்கள் ஊடாக தகவல்களை கொடுத்தாகவும் இல்லை. தலைவர் அவர்கள் தளபதிகள் பொட்டு மற்றும் சூசையுடன் முள்ளிவாய்க்காலைவிட்டு தப்பிச்சென்றதாக தங்களின் சகா தேனிசை செல்லப்பா பாடலியற்றியது இப்போது நினைவுக்கு வருகின்றது. அப்படியாயின், சூசை அல்லது பொட்டு அவர்களாவது வெளிப்பட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டியிருக்கலாமே. குறைந்தபட்சம் விடுதலைப்புலிகளின் இயக்கத்தினர் கூட இதுவரை தங்கள் தமிழ்நாட்டில் வெளிப்படுத்தும் கருத்தினை ஆதரித்து பகிரங்கமான அல்லது சமூகத்திற்குள்ளான அறிவிப்புக்களை விடுக்கவில்லை என்கின்ற உண்மையும் கசப்பாகவிருக்கின்றது. அது ஏன் ஐயா?.

முன்னைய காலங்களில் தலைவர் கொல்லப்பட்டதாக இந்தியாவும், சிறீலங்காவும் அறிவித்த போதெல்லாம் புலிகள் உத்தியோகபூர்வமாக இதனை மறுத்து தலைவரின் இருப்பினை உறுதிசெய்தனர். ஏனெனில் தலைமை என்பது ஒரு விடுதலை இயக்கத்திற்கு உயிர்நாடியான விடயம் என்பதை தலைவரும் புலிகளும் தெளிவாக அறிந்திருந்தமையால் அதுபற்றிய குழப்பத்தினை மக்கள் மத்தியில் அனுமதிக்கவில்லை. மாறாக, இன்று மக்கள் மிகவும் குழப்பப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களான நீங்கள் எங்களது தலைவர் உயிருடன் உள்ளதாக அடித்துக் கூறுகையில் புலிகள் மௌனம் காப்பது எங்களை குழப்பத்திற்குட்படுத்துகின்றது.

சிறீலங்கா மற்றும் இந்திய அரசும் சர்வதேச தரப்புக்களும் தலைவரின் வீரச்சாவு பற்றி குழப்பத்தில் இல்லை என்பதை அவற்றின் செயற்பாடுகள் மூலம் அறியமுடிகின்றது. இந்தியா இறந்து போனவர்களை குற்றவாளிகள் பட்டியலில் வைத்திருப்பதில்லை என்று அறிவித்து தலைவரினதும், பொட்டம்மானினதும் பெயர்களை வழக்குகளிலிருந்து நீக்கிவிட்டது. தலைவர், பொட்டம்மான் மற்றும் தளபதி சூசைக்கு எதிரான வழக்குக்களை சிறீலங்கா வாபஸ் வாங்கிவிட்டது. இதனை தந்திரம் என்று எவரும் சொல்லமாட்டார்கள். ஏனெனில், நீங்கள் சொல்வது போன்று தலைவர் மீள வரும்போது இந்திய பேரரசும், சிறீலங்கா அரசும் மிகப்பெரிய அவமானத்திற்குள்ளும், சட்டச்சிக்கலுக்குள்ளும் அகப்படும் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஏனெனில், மூடிமறைப்பதற்கு பிரபாகரன் ஒன்றும் கிள்ளுக்கீரையல்ல.

இவ்வாறான வாதங்களினை ஒதுக்கிவைத்துவிட்டு நான் உங்களை நம்ப முயல்கின்றேன். ஆயினும் நீங்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசுவது அந்த கண்மூடித்தனமான நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தவில்லை. உதாரணமாக, நெடுமாறன் அவர்கள் தமிழ்நாட்டின் பிரதானமான ஊடகமொன்றிற்கு செவ்வியளிக்கையில் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தலைவர் எந்தப் பொறுப்புக்கும் நியமிக்கவேயில்லை என்று அடித்துக் கூறினார். அடுத்தவாரம் மற்றைய ஊடகத்திற்கு செவ்வியளிக்கையில் தலைவர் அவர்கள் கேபிக்கு பொறுப்பினைக் கொடுத்து காஸ்ரோவுக்குக் கீழ் வேலைசெய்யுமாறு பணித்ததாக கூறுகின்றார். உண்மையென்னவெனில், கேபிக்கு பொறுப்பினை தலைவர் 2009 சனவரியில் கொடுத்து அனைத்து அரசுகளுக்கும் அது சம்பந்தமான அறிவித்தலை நடேசன் ஊடாக அனுப்பிவைத்தார். அதுவொரு சுயாதீனமான நியமனம். தனது மூத்த உறுப்பினரை இந்தப் பொறுப்புக்கு நியமிக்கின்றேன் என்றுதான் தலைவர் அரசுகளுக்கு கோடிட்டுக் கூறியுள்ளார் (ஆதாரம்: தலைவர் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதம்). இன்று கேபி சிறீலங்கா கைதியாக செயற்படும் அவல அரசியலை ஓரமாக வைத்துவிட்டு, இயக்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர்பற்றிய செய்திக்கு, குறிப்பாக தலைவரினால் 2009ல் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர் பற்றிய செய்திக்கு, தனது சார்பு அரசியலை நெடுமாறன் பயன்படுத்தியதை பார்த்த பிற்பாடு எவ்வாறு உங்கள் அறிவிப்புக்களை நம்பிக்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்வது?.

மறுபுறம், தலைவரை புரட்சியாளனாக, உறுதிகொண்ட நெஞ்சினானகப் பார்க்கும் என்னைப் போன்றவர்களுக்கு தலைவர் மறைந்து ஒழித்து இருக்கின்றார், அடுத்தகட்ட ஈழப்போரினை முன்னெடுக்க வருவார் என்று சொல்வதன் அர்த்த‌த்தினைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. இறுதிப்போரின் போது இயக்கத்தின் இராணுவ பலம் முற்றிலும் இழக்கப்பட்ட‌ சூழலே இருந்தது. மக்கள் பெருமளவு கொல்லப்பட்டனர். போராளிகள் சாவு அடைந்தனர். சரணடைந்தனர். கொல்லப்பட்டனர். இந்தப் பின்னணியில் தலைவர் தப்பி ஓடிவிட்டார் என்று சொல்வது பிரபாகரன் என்ற அற்புதமான ஆளுமையைக் கொச்சைப்படுத்தும் விவகாரம் என்றே நான் கருதுகின்றேன். அவ்வாறான வியூகத்துடன் தலைவர் இயங்கியிருந்தால் அவர் கிளிநொச்சி வீழ்ச்சியுடன் அதனை அமுல்படுத்தத் தொடங்கியிருப்பார். ஆனால், அவர் தத்துவதார்த்தமாக அல்லது இலட்சியபூர்வமாகவே போரை இறுதிக்கட்டத்தில் அணுகியிருக்கின்றார் என்று சொல்வதற்கு பல சான்றுகள் உள்ளன. ஒரு பிரபலமான திரைப்படத்தினை தலைவர் அந்தக் கட்டத்தில் தன்சாகக்களை பார்க்குமாறு கூறியுள்ளார். இறுதிவரை போராடி அழிந்தவொரு போராட்ட இயக்கத்தின் கதை. அத்த‌கைய உச்சபட்ச வீரவரலாறு போராட்டத்தின் அசைத்து அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தினைக் கொண்டு செல்லும் எனும் தத்துவார்த்தமான பாதையை அந்தத் திரைப்படம் சொல்கின்றது. தலைவர் தனது தளபதிகளிடம் இறுதிக்கட்டச் சந்திப்புக்களின் போது பண்டாரவன்னியனின் வீரவாள் தன்னால் மீளக்கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அடுத்ததலைமுறை அதனை காவிச்செல்ல வேண்டும் என்று பகிரங்கமாகப் பேசியதாக இன்று உயிர்தப்பிய தளபதிகள் சொல்கின்ற செய்தி.

மூன்றாவது, புலம்பெயர்நத நாடுகளில் உள்ள தனது சாகக்களுக்கு காஸ்ரோ அனுப்பிய இறுதிச் செய்தியில் தலைவர் போராட்டத்தினை இதுவரை கொண்டுவந்துவிட்டுள்ளார் என்கின்ற தகவலைக் கொடுத்தார். அந்தச் செய்தியில் தலைவர் தொடர்ந்து போரினை முன்னெடுக்கவுள்ளார் என்ற செய்தியினை காஸ்ரோ கூறவில்லை. அடுத்தகட்டப் போர் புதிய தலைமுறையினது என்பதே காஸ்ரோவின் செய்தி.

பிரபாகரனை வீரனாக, இலட்சியவாதியாக, தூரநோக்கம் கொண்டவனாக மதிக்கும் பாரம்பரியத்தினைக் கொண்டவர்கள் தங்களின் ஆதாரமற்ற உச்சக்குரல் அறிக்கையினை மிகவும் சந்தேகத்துடன் பார்க்கின்றனர். ஏனெனில், தலைவரின் வீரச்சாவு என்ற செய்தியானது மாபெரும் தமிழ்எழுச்சினை எழுப்பியிருக்க வேண்டும். அதனை நடக்காது தடுக்க இந்திய உளவுநிறுவனமான றோ நிச்சயம் செயற்பட்டிருக்கும். அதற்கு தாங்கள் அறிந்தோ, அறியாமலோ துணைபோய்விட்டீர்கள் என்கின்ற சந்தேகம் அவர்களுக்கு எழுகின்றது. முத்துக்குமாரன் இறந்த போது தமிழ்நாடு எழுச்சி கொள்ளாது தடுத்தமை தொடர்பாக உங்களுக்கு எதிராக உங்கள் சகாக்க‌ளே குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமையை நாங்களும் வாசித்தறிந்தோம்.

ஐயா, தலைவர் உயிருடன் இருப்பதாக தாங்கள் கூறுவது உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அருகிவருகின்றது. காலம் ஓடுகின்றது. பிரபாகரன் என்ற உச்சதலைவன் கட்டமைத்த அரசியலும், பயணப்பாதையும் நாள்தோறும் உடைத்தெறியப்பட்டு வருகின்றது. தமிழ்தேசியக்கூட்டமைப்பும், டக்ளசு வகையறாக்களின் கட்சியும் மாகணசபை அரசியலுக்குள் எங்களை கட்டிப்போட்டு வருகின்றனர். புலிகள் இயக்கம் மட்டும் உறைநிலைக்கு சென்றுவிட்டது. தன் அகத்தேயும், புறத்தேயும் கட்டப்பட்ட சூழ்ச்சிவலையினை பிரிக்க முடியாது தலைவருடன் களம் கண்ட போராளிகள் விழிபிதுங்கி நிற்பதை பார்க்கக் கூடியதாகவும் உள்ளது.

மறுபுறம், தலைவரின் வீரமும், அர்ப்பணிப்பும் இனத்தினால் உள்வாங்கப்பட்டு “அணுகுண்டாக” வெடித்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் றோ போன்ற நிறுவனங்களின் சதியாலும், எமக்குள் வாழும் சிலரது துரோகத்தனத்தாலும் வீணடிக்கப்பட்டுவிட்டது. திசையெங்கும் இருளே நிரம்பிக்கிடக்கின்றது.

இந்த இருளைக்கிழித்து ஒளிதரவல்லவர் பிரபாகரன் மட்டுமே. அவர் வாழ்வும், வீரமுடிவும் தெளிவாக இனத்துக்குள் எழுச்சியினை ஏற்படுத்தவல்ல அணுக்கதிர்கள். அதனை கட்டவிழ்த்துவிடுவதே தமிழினத்தினை சூடேற்றி வெற்றிபெறவைக்கும். அந்த வீரனின் கனவை, தேர்ந்தெடுத்த பாதையை மூடிமறைப்பது துரோகமாகவே எதிர்கால வரலாற்றால் படிக்கப்படும்.

ஐயா

நான் உங்களை சந்தேகிக்கவில்லை. நீங்கள் வழிநடத்தப்படுகின்றீர்கள் என்பதை உணர்கின்றேன். எந்த நரியோ உங்களினை தூண்டிவிட்டு தமிழீழ விடுதலைப்போரின் நலன்களுக்கு எதிரான திசையில் உங்களைப் பயன்படுத்துவதாகவே கருதுகின்றேன். பாம்பையும், நரியினையும் இனங்கண்டு தமிழர் எழுச்சிக்கு வித்திடுங்கள். எழுச்சிபெற்ற தமிழினம் வெற்றிபெறும்.

நன்றி

உங்கள் மீது பற்றுள்ள
ஒரு ஈழ தமிழன்